பரீட்சைகள் ஆணையாளருக்கு எதிராக போராடத் தயாராகும் ஆசியர்கள்
கல்விப் பொதுத் தராதார உயர்தரப் பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின்போது, தனியார் மற்றும் சர்வதேச பாடசாலைகளின் ஆசிரியர்களை பணிக்கு அமர்த்துவது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்த விடயத்திற்கு தமது கடுமையான எதிர்ப்பினை வெளிப்படுத்துவதாக, இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
தனியார் மற்றும் சர்வதேச பாடசாலைகளின் ஆசிரியர்களை பணிக்கு அமர்த்துவது தொடர்பிலான தீர்மானத்தை பரீட்சைகள் திணைக்களம் மாற்றிக்கொள்ளாவிடின், ஏனைய தொழிற்சங்கங்களுடன் இணைந்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தயங்கப்போவது இல்லையென இலங்கை ஆசிரியர் சங்கம் எச்சரித்துள்ளது.
அந்தச் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டார்லினின் கையெழுத்துடன் வெளியாகியுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிபபிடப்பட்டுள்ளது.
நாட்டின் சர்வதேச பாடசாலைகள் மற்றும் தனியார் பாடசாலைகளின் நடவடிக்கைகளை சட்டப்பூர்வமாக்குவதன் ஊடாக, நாட்டில் இலவச கல்வியை அழிக்கும் திட்டத்தின் விரிவாக்கமே இதுவென அந்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை ஆசிரியர் சேவை யாப்பிற்கு அமைய, போட்டிப் பரீட்சசைகளை நடத்துவதன் மூலமே, அரச பாடசாலைகளில், ஆசிரியர்கள் சேவைக்கு இணைத்துக்கொள்ளப்படுவதாகவும், தனியார் பாடசாலைகளில் அவ்வாறான ஒரு முறைமை பின்பற்றப்படுவதில்லை எனவும், ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுபோன்ற சூழ்நிலையில், வினாத்தாள் திருத்தப் பணிகள், பரீட்சைகள் தொடர்பில் அவர்கள் பொறுப்புடன் நடந்துகொள்ளமாட்டார்கள் எனவும் ஜோசப் ஸ்டார்லின் சுட்டிக்காட்டுகிறார்.
“இதுபோன்ற சூழ்நிலையில், பொறுப்பற்ற குழுவை வினாத்தாள் திருத்தும் பணிகளுக்கு உட்படுத்துவதன் ஊடாக, மாணவர்களுக்கு பெரும் அநீதி இழைக்கப்படும் எனவும், இவ்வாறு பொறுப்பற்ற முறையில் தேசிய பரீட்சைகள் குறித்து அரசாங்கம் மேற்கொள்ளும் தீர்மானமானமானது, தனியார் கல்விக்கு வழி வகுக்கும் முயற்சியாகவே அமையுமெனவும்” அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதைய சூழ்நிலையில், தனியார் வகுப்புகளை நடத்தி வருவோரிடம் அரசங்காம் தொடர்ந்து கலந்துரையாடல்களை மேற்கொண்டு, பரீட்சைகள் தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்வதன் ஊடாக, 10,174 அரச பாடசாலைகளில் பணியாற்றும் ஆசிரியர்களை இழிவுபடுத்தும் செயற்பாட்டை அரசு முன்னெடுத்துள்ளதாகவே அது அமைந்துள்ளதாகவும்” அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
“தனியார் வகுப்புக்களை நடத்தும் பெரிய வர்த்தகர்கள் தற்போதைய அரசாங்கத்தின் தேர்தல் பிரச்சாரத்தின் ஆதரவாளர்கள் என்பதால் அரச பாடசாலைகளில் உயர்தர வகுப்புகளுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களின் பங்களிப்பு தொடர்பில் அவதானம் செலுத்தாத அரசாங்கம், தனியார் கல்வி வகுப்புகள் தொடர்பில் அவதானம் செலுத்துவதற்குக் காரணமாக அமைந்துள்ளதாகவும்” அவர் குறிப்பிட்டுள்ளார்.
கல்விக்காக நியமிக்கப்பட்ட செயலணி உள்ளிட்ட பல்வேறு குழுக்களில் தனியார் பாடசாலை வர்த்தகர்களைச் இணைத்ததன் ஊடாக, இந்த விடயம் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும், இலங்கை ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed.