“என் வாழ்க்கை இப்படியே போய்டுமோன்னு பயமா இருக்கு!” – சுஷாந்த் சிங் சொல்ல வந்ததென்ன?!
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம், இந்தியா முழுக்கவே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதுவும் கொரோனா சூழலில் ஏற்பட்டிருக்கும் இந்த தற்கொலை மரணம், இந்திய இளைஞர்களிடையே வாழ்வின் மீதான பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது.
தோனி பயோபிக்கில் தோனியாக நடித்து, இந்தியா முழுக்கவே பெரும் ரசிகர் கூட்டத்தைக் கவர்ந்த நடிகரின் தற்கொலை என்பது நம்பமுடியாததாக இருக்கிறது எனப் புலம்புகிறது இந்திய சினிமா உலகம். கடந்த சில மாதங்களாக, அவர் கடும் மன அழுத்தத்தில் இருந்ததாகவும், அதற்கான சிகிச்சையைப் பெற்றுவந்ததாகவும் சொல்கிறார்கள். ஆனால், இது உண்மையா என்பது இப்போதுவரை தெரியாது. அவரின் நெருங்கிய நண்பர், மன அழுத்தம் என்பதை முழுக்கவே மறுக்கிறார். தற்கொலைக்கான உண்மையான காரணம், நிச்சயம் சுஷாந்த்துக்கு மட்டுமே தெரியும்.
`M.S. Dhoni: The Untold Story’ படத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத் பேசும் வசனங்கள், இளைஞர்களுக்கான ஊக்க மாத்திரைகள். இந்தப் படத்தில் “என்னுடைய வாழ்க்கை இப்படியே போய்டுமோன்னு பயமா இருக்கு” என்று சொல்வார் சுஷாந்த். உண்மையில் இந்த வசனம், சுஷாந்த்தின் வாழ்க்கையிலும் நிஜமாகவே நடந்ததுதான் சோகம். திறமையான நடிகர், வெவ்வேறு விதமான கேரக்டர்களிலும் பொருந்தி நடிக்கக்கூடியவர், பழகுவதற்கு எளிமையானவர் எனப் பல தகுதிகள் இருந்தும், பாலிவுட்டில் சுஷாந்த்தின் கரியர் அவர் எதிர்பார்த்ததுபோல் அமையவில்லை.
பீகாரில் பிறந்து வளர்ந்த சுஷாந்த், டெல்லியில் இன்ஜினீயரிங் படித்தார். படிப்பில் அதிக ஆர்வம் கொண்டவராக இருந்திருக்கிறார். எழுதிய அனைத்து நுழைவுத் தேர்வுகளிலும் தேர்ச்சிபெற்று அசத்தியிருக்கிறார். டெல்லியில் படிக்கும்போது, நடனத்தின் மேல் ஆர்வம் வந்து, நடனக்குழுவில் இணைந்து, அதன்பின் நாடகம், டி.வி, சினிமா எனப் படிப்படியாக முன்னேறிவந்திருக்கிறார்.
குஜராத் நிலநடுக்கம், குஜராத் இனப்படுகொலைகளை மையமாகக் கொண்டு வெளியான `Kai po che’ படம்தான் சுஷாந்தின் முதல் படம். இதுவரை 11 படங்களில் நடித்திருக்கிறார். இளம் நடிகராக இருந்தும் ரொமான்ட்டிக் படங்கள் நடிப்பதில் பெரிய ஆர்வம் சுஷாந்த்துக்கு இல்லை. தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு படமும் வெவ்வேறு கதைக்களங்களைக் கொண்டவையாக இருக்க வேண்டும் என்பதுதான் இவரது கொள்கையாக இருந்திருக்கிறது. இரண்டாவது படமான `Shudhdhesi Romance’ கல்யாண காமெடி களேபரங்களை அடிப்படையாகக் கொண்டவை. அடுத்து, அமீர் கானின் `பிகே’ படத்தில் பாகிஸ்தானியாக மிகச் சின்ன ரோலில் நடித்திருப்பார் சுஷாந்த். லீட் ரோல் என்பதல்ல, அந்தக் கதையில் தனக்கான முக்கியத்துவம் இருந்தால், அது சிறியது பெரியது எனப் பார்க்காமல் நடிப்பதுதான் சுஷாந்த்தின் வழக்கம்.
சுஷாந்த்தின் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய படம் `M.S. Dhoni: The Untold Story’. இந்தப் படத்துக்காக, தோனியாக நடிப்பதற்காக கிட்டத்தட்ட தோனியாகவே மாறினார் சுஷாந்த். தோனியுடன் அதிக நேரம் செலவிட்டு, தோனியின் மேனரிஸங்கள் கற்று, அவரின் கிரிக்கெட் வீடியோக்கள் பார்த்து, அதன்படியே பேட்டிங் ஸ்டைலைப் பிடித்து என இந்தப் படத்துக்காக சுஷாந்த்தின் உழைப்பு மிகப்பெரியது. அந்த உழைப்பும், மெனக்கெடலும் அப்படியே படத்தில் தெரியும். இந்தப் படம் இந்தியா முழுமைக்குமான நடிகராக சுஷாந்த்தை மாற்றியது.
கடைசியாக சுஷாந்த் நடித்து வெளியான படம், `டிரைவ்’. 2018-ல் வெளியாகியிருக்க வேண்டிய படம், கிரியேட்டிவ் டீமுக்குள் பிரச்னைகள் இருந்ததால் ரிலீஸ் ஆகவில்லை. படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான கரண் ஜோஹருக்கு படத்தின் அவுட்புட் பிடிக்காமல்போக, பல காட்சிகள் மாற்றப்பட்டன. அதன்பிறகு 2019-ல் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டு அதுவும் நடக்காமல், கடந்த ஆண்டு நவம்பரில் நேரடியாக நெட்ஃபிளிக்ஸில் வெளியானது. படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிபெறவில்லை. இந்தப் படத்துக்கு முன் வெளியான படம்தான் `Chhichhore’. குழந்தைகளைக்கு தோல்விகளைத் தாங்கும் மனப்பக்குவத்தை ஏற்படுத்த வேண்டும். தோல்வி என்பது தவறல்ல… தோற்ற பின் மீண்டெழ வேண்டும் என்பதை சொல்லித்தர வேண்டும் என்று சொன்ன படம்தான் `Chhichhore’. படத்தில் தற்கொலைக்குத் தூண்டப்படும் மகனுக்கு வாழ்க்கையைப் பற்றிய புரிதலையும், வாழ்வின் மீதான நம்பிக்கையையும் ஏற்படுத்தும் தந்தையாக நடித்திருப்பார் சுஷாந்த்.
இந்தப் படத்தில் மட்டுமல்ல, அவர் நடித்த பல படங்களிலும் பாசிட்டிவ் கதாபாத்திரங்கள்தான் ஏற்று நடித்தார் சுஷாந்த். வாழ்வின் மீதான நம்பிக்கையைத் தன் படங்களின் வழியே விதைத்த சுஷாந்த் சிங் ராஜ்புத், சொந்த வாழ்வில் சில ஏமாற்றங்களைத் தாங்கமுடியாமல் விழுந்ததுதான் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
`விளையாட்டுப் பையனாகத்’ திரைவாழ்க்கையைத் தொடங்கிய சுஷாந்த், `பொறுப்பான அப்பாவாக’ கரியரை முடித்திருக்கிறார். கலைஞர்கள் அழிந்தாலும் கலை அழிவதில்லை. சுஷாந்த் இறந்தாலும் அவர் படங்களின் வழியே நிச்சயம் அவர் நம்முடன் உரையாடுவார்.
நன்றி: விகடன் தேவன் சார்லஸ்
Comments are closed.