வடக்கு மாகாணத்தின் சுபீட்சமே எனது இலக்கு – வேலாயுதம் கணேஸ்வரன்
வடக்கு மாகாணத்தின் கல்வி விளையாட்டு விவசாயம் கடற்றொழில் போன்ற துறைகளை ஊழல் இல்லாத வகையில் முன்னேற்றுவதற்காகவே பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றேன். மக்கள் என்னை அனுப்புகின்றபோது இவற்றைச் செய்து முடிப்பேன் அடுத்த முறை தேர்தலுக்கு எத்தகைய விளம்பரங்களும் இல்லாமலேயே எனது செயற்பாட்டைப் பார்த்து மக்களே என்னைப் பாராளுமன்றம் அனுப்புவார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட முதன்மை வேட்பாளரான வேலாயுதம் கணேஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு மாகாணத்தின் கல்வியானது பின் தங்கிய மாகாணமாக ஆகிவிட்டது. இதனை உடனடியாக முன்னேற்றவேண்டும். அது போல் விளையாட்டுத் துறையில் எமது மாணவர்கள் ஆர்வத்துடன் இருக்கின்ற போதும் போட்டிகளில் பங்கு பற்றி தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்படுகிறார்களே தவிர சர்வதேச ரீதியில் சென்று சாதனை நிலைநாட்டவில்லை. ஆனால் எனது எண்ணம் வடக்கு மாகாணத்தின் விளையாட்டுத் துறையை சர்வதேச ரீதியில் கொண்டு செல்வதற்கு உதவுவதே எனது நோக்கமாகவுள்ளது. அதுபோன்று விவசாயம் கடற்றொழில் போன்றவற்றில் நவீன தொழில்நுட்பங்களை புகுத்தி இரு தொழில் துறைகளையும் முன்னேற்றவேண்டிய தேவையின் அவசியமுள்ளது. இங்குள்ள அரசியல்வாதிகள் தமக்கான தேவைகளைத்தான் நிறைவேற்றிக்கொள்கின்றார்களே தவிர மக்களுக்காக எதையும் செய்யவில்லை இவர்களுடன் சேர்ந்தவர்களாகவே அரசாங்க அதிகாரிகளும் செயற்படுகிறார்கள்.
குறிப்பாக இரணைமடுத்திட்டம் தொடர்பில் அங்குள்ள விவசாயிகள் பல பாதிப்புக்களை சந்தித்துள்ளனர். இது தொடர்பில் ஒரு விசாரணைக்குழு நியமிக்கப்பட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டபோதும் அதனை வெளிப்படுத்தாது மூடிமறைத்துள்ளார்கள். வடமாகாணத்தின் முன்னாள் ஆளுநராக இருந்த சுரேன் ராகவன் தலைமையில்தான் ஒன்று குழு நியமிக்கப்பட்டது. அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்த வேளையில் அதனை நாம் கேட்டபோது சிங்களமொழியில் இருப்பதால் மொழிமாற்றம் செய்ய வேண்டும் என்றார். இங்கு சிங்கள மொழி மாற்றம் தேவையில்லை. இது தமிழ் பிரதேசம். தமிழில் இருத்தல் வேண்டும். ஆனால் இறுதிவரை அதனை தராமலேயே சென்று விட்டார். குறித்த விடயம் தொடர்பிலும் தற்போதுள்ள வடமாகாண ஆளுநரிடம் கலந்துரையாடி அதனை வெளியிடுமாறு கோரியுள்ளேன். வடக்கு மாகாணத்தை பிரதித்துவப் படுத்துகின்ற அரசியல்வாதிகள் ஏதாவது ஒரு விடையத்தில் அக்கறை கொண்டு செயற்படுகின்றார்களா என்றால் அது பற்றி எதுவுமே இல்லை. இரணைமடுத்திட்டமாக இருந்தாலும் சரி யாழ்.சுன்னாகத்தில் கிணற்றுக்குள் ஒயில் கலந்த விடையமானாலும் சரி அது தொடர்பில் சரியான அறிவுறுத்தல்களை செய்யவோ அல்லது நடந்த சம்வங்களை வெளிப்படுத்துவதற்கோ தயாரில்லாத நிலையில் தான் இங்குள்ள அரசியல்வாதிகள் செயற்படுகின்றார்கள்.
இந்த பாராளுமன்றத் தேர்தலின் மூலம் மக்கள் எனக்கு ஆதரவைத் தந்து என்னை பாராளுமன்றத்துக்கு தேர்வு செய்து அனுப்புவார்கள் என்றால் குறித்த விடையங்களில் முதன்மையாக இருந்து செயற்படுவேன்.
மேலும் நான் கொரோனாவிற்கு பின்னரான சூழலில் கண்டியிலிருந்து யாழ்ப்பாணம் வரும் வீதியில் வவுனியாவில் இருந்தே இராணுவ சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு அனைத்து வாகனங்களும் பரிசோதனைக்குட்படுத்தப்படுகின்றது. ஏனைய இடங்களில் அப்படி இல்லை. வடக்கில் பல இடங்களில் இத்தகைய சோதனைகள் இடம்பெறுவது இலங்கைக்குள் இரு நாடு இருப்பது போன்ற எண்ணத்தை தோற்றுவிக்கின்றது. இந்த நடைமுறை மாற்றியமைக்கப்படவேண்டும்.
சஜித் பிரேததாச ஆட்சி அமைக்கின்ற வேளையில் இதுபோன்ற நிலைமைகள் மாற்றியமைக்கப்படும். சிங்களக் குடிமகனுக்கு எத்தகைய உரிமைகள் இருக்கின்றதோ அத்தகைய உரிமைகளை தமிழ் மகனுக்கும் கிடைப்பதற்கு அழுத்தம் கொடுப்பதாகவே எனது முயற்சிகள் இருக்கும். இதற்கு சஜித் பிரேமதாசவும் முழு ஒத்துழைப்புத் தருவார் என எனக்கு உறுதியளித்துள்ளார்.
வடக்கு மாகாணத்தில் கடந்த காலங்களில் இடம் பெற்ற நெல்சிப் திட்ட ஊழல் முதல்கொண்டு அனைத்து விதமான ஊழல் நடவடிக்கைகளுக்குமாக விசேட குழுக்கள் ஒன்றை அமைத்து நடந்தது என்ன என்பதை மக்கள் முன் தெளிவுபடுத்துவேன். அதேபோன்று எமது காலத்தில் செய்யப்படுகின்ற ஒவ்வொரு திட்டத்திற்கும் எவ்வாறு அந்தத் திட்டங்கள் செய்யப்படுகின்றது எத்தகைய நிதி செலவு செய்யப்படுகின்றது என்பது தொடர்பில் மக்களுக்கு வெளிப்படுத்துவேன்.
பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டதும் பாராளுமன்ற உறுப்பினருக்குக் கிடைக்கும் அத்தனை சலுகைகளையும் என்ன என்பதை ஒவ்வொரு முறையும் வெளிப்படுத்துவதுடன் , வாகன அனுமதிப்பத்திரம் உட்பட அனைத்து வகையான சலுகைகளையும் மக்களுக்காகவே செலவு செய்வேன் என்றார்.
Comments are closed.