நல்லூரில் கைதான இளைஞர்கள் பிணையில் விடுவிப்பு
வடக்கின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை தந்து நல்லூரில் ஒன்றுகூடி வன்முறையில் ஈடுபடத் திட்டமிட்டனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 10 இளைஞர்களை தலா ஒரு லட்சம் பெறுமதியான இரண்டு ஆள் பிணையில் விடுவிக்க யாழப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் உத்தரவிட்டார்.
நல்லூர் ஆலய சூழலில் உள்ள ஐஸ்கிறீம் கடை ஒன்றுக்கு அருகாமையில் வைத்து 10 இளைஞர்கள் யாழ்ப்பாணம் பொலிஸாரால் நேற்று மாலை 5 மணியளவில் கைது செய்யப்பட்டனர்.
சந்தேகநபர்கள் அனைவரும் இன்று வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.
“நல்லூரில் ஐஸ்கிறீம் கடை ஒன்றுக்கு அருகே ஒன்று திரண்ட காரணத்தைக் கூற முடியாது காணப்பட்டமை மற்றும் வடக்கின் பல்வேறு இடங்களிலிருந்து ஒன்றுகூடி வன்முறைச் சம்பவம் ஒன்றை நடத்த திட்டமிட்டமை தொடர்பில் விசாரணையை நடத்த சந்தேகத்தின் அடிப்படையில் 10 பேரும் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் பி அறிக்கையை மன்றில் சமர்ப்பித்தனர்.
யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரசாத் பெர்னாண்டோ, மன்றில் முன்னிலையாகி சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதன் காரணம் தொடர்பில் சமர்ப்பணத்தை மன்றில் முன்வைத்தார்.
சந்தேக நபர்கள் சார்பில் மூத்த சட்டத்தரணிகள் என்.சிறிகாந்தா, மு.றெமிடியஸ் மற்றும் சட்டத்தரணி வி.கௌதமன் ஆகியோர் முன்னிலையாகினர்.
” தேர்தல் வேட்பாளர் ஒருவரின் அழைப்பின் பேரில் சந்தேக நபர்கள் நல்லூரில் கூடியிருந்தனர். அவர்கள் எந்தவொரு வன்முறைக்கும் திட்டமிட்டிருக்கவில்லை” என்று சந்தேக நபர்களின் சட்டத்தரணிகள் மன்றுரைத்தனர்.
இரு தரப்பு சமர்ப்பணங்களையும் ஆராய்ந்த நீதிவான் ஏ.பீற்றர் போல், “அரசியல் நடத்துவதற்கு சுதந்திரம் உண்டு, ஆனால் கோவிட் -19 சுகாதார நடைமுறைகளை பின்பற்றவேண்டியது கட்டாயமாகும்” என்று அறிவுரை வழங்கினார்.
அத்தோடு சந்தேக நபர்களை தலா ஒரு லட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு ஆள் பிணையில் விடுவிக்க உத்தரவிட்ட நீதிவான், வழக்கை வரும் ஜூலை 27ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
Comments are closed.