16 மில்லியன் சதுரஅடி நிலப்பரப்பு கண்ணிவெடிகளுடன் அடையாளம் – திருமலை மாவட்ட செயலகம் தகவல்
இலங்கையில் யுத்தம் நிறைவடைந்த போதிலும் 16 மில்லியனுக்கும் அதிக சதுர அடி அளவான காணிப்பகுதிகளில் இன்னமும் கண்ணிவெடிகள் அகற்றப்படாதிருப்பதாக திருகோணமலை மாவட்டச் செயலகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலப்பரப்பில் திருகோணமலை மாவட்டத்தில் 2 இலட்சத்து 56 ஆயிரத்து 136 சதுர அடி அளவிலான காணிப் பகுதிகளில் இன்னமும் கண்ணிவெடிகள் அகற்றப்படாது இருப்பதாக திருகோணமலை மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
திருமலை மாவட்டத்தில் மீண்டும் கண்ணிவெடி அகற்றும் செயற்திட்டம் தொடர்பான முக்கிய கலந்துரையாடலின் போது இந்த தகவல் வெளியிடப்பட்டது.
சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் டி.பி.ஜி.குமாரசிரி தலைமையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் துசித்த வணிகசிங்ஹ, திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எம்.ஏ.அனஸ், திருகோணமலை மாவட்ட உதவி அரசாங்க அதிபர் என்.பிரதீபன் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது, திருகோணமலை மாவட்டத்தில் கண்ணிவெடிகள் காணப்படுவதாக இனங்காணப்பட்ட பிரதேசங்கள் தொடர்பாகவும், மாவட்டத்தில் இதுவரை அகற்றப்படாத கண்ணி வெடிகளை அகற்றும் பொறிமுறை தொடர்பான விடயங்கள் உட்பட பல விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டது.
கண்ணிவெடிகள் கூடுதலாக காணப்படுவதாக அடையாளம் காணப்பட்ட பகுதிகள் அரச திணைக்களங்களுக்கு உட்பட்ட பகுதிகளாக இனங்காணப்பட்டிருக்கின்றது.
அடையாளம் காணப்பட்டுள்ள இந்த பகுதிகளில் அகழ்வுப் பணிகளில் ஈடுபடுவதற்கான அனுமதிகள் முறையாக பெறப்பட்டு அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் டி.பி.ஜி.குமாரசிரி குறிப்பிட்டுள்ளார்.
Comments are closed.