மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அரசாங்கம் பெறுவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது ஆதரவை வழங்கும் – இரா சம்பந்தன்
சிறுபான்மை கட்சிகளை அரவணைத்து அவர்களது ஆதரவையும் பெற்று பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கொண்ட புதிய அரசாங்கத்தை அமைத்து அதன்மூலமாக எதிர்காலத்தில் முக்கியமான பல விடயங்களை அரசாங்கத்தினால் சாதிக்க முடியும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச நேற்று முன்தினம் பகிரங்கமாக விடுத்திருக்கும் அழைப்பை தமிழ் தேசியக் கூட்டமைப்பு முழு மனதுடன் வரவேற்கிறது என அதன் தலைவர் இரா சம்பந்தன் தினகரனுக்குத் தெரிவித்தார்.
பிரதமர் வெளியிட்ட இந்த கருத்து தொடர்பாக தமிழ் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன என்று கேட்டபோது இரா சம்பந்தன் இவ்வாறு தெரிவித்தார்.
மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அரசாங்கம் பெறுவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது ஆதரவை வழங்கும் என்று நாங்கள் ஏற்கனவே பல தடவைகள் கூறியிருந்தோம். அதாவது தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யக்கூடிய வகையில் அரசியலமைப்பை திருத்தி அதன் மூலமாக தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முழுமையான தீர்வு காணப்படும் பட்சத்தில் அரசாங்கத்திற்கு அவர்கள் எதிர்பார்க்கும் மூன்றில் இரண்டு ஆதரவினை வழங்க நாங்கள் தயாராக இருக்கின்றோம் என்று கூறி வருகின்றோம். எனவே அரசாங்கம் எதிர்பார்க்கும் ஆதரவை தமிழ் மக்கள் சார்பாக தமிழ் தேசியக்கூட்டமைப்பு வழங்க வேண்டுமாக இருந்தால் முதலில் அரசாங்கம் தனது நிலைப்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தி நாங்கள் எதிர்பார்க்கும் விடயங்களை திருப்திகரமாக பூர்த்தி செய்ய வேண்டும்..
அவ்வாறு செய்யும் பட்சத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பானது நிச்சயமாக அவர்கள் எதிர்பார்க்கும் விடயத்திற்கு ஆதரவு வழங்கும். அந்த விடயத்தில் மாற்று கருத்துக்கு இடமில்லை. ஆனால் இந்த விடயத்தில் இருதரப்பும் இதயசுத்தியுடன் நடந்து கொள்ள வேண்டும்.
கடந்த காலங்களைப் போன்று ஒரு தரப்பை மறு தரப்பு ஏமாற்றி அரசியல் இலாபம் பெற முயல கூடாது என்றும் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
உண்மையில் தமிழ் மக்களது பிரச்சினைகளை இந்த அரசாங்கம் தீர்த்து வைத்தால் அவர்களுடன் கைகோர்த்து எதிர்கால நன்மைகளுக்காக பயணிக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு தயாராக உள்ளது.
தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்வதற்காகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு போராடுகின்றது.
எனவே பிரதமரோ அரசாங்கமோ பேச்சளவில் ஆதரவினை பெற்றுக்கொள்வதற்காக இதுபோன்ற அழைப்பினை விடுக்காது இதயசுத்தியுடன் அழைப்பு விடுத்து எமது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் இந்த அரசாங்கத்தை கொண்டு வருவதில் அவர்களது பங்களிப்பு மிகவும் குறைவாகவே இருந்தது. ஆனாலும் இந்த அரசாங்கம் தமிழ் மக்களது பிரச்சினைகளை முழுமையாக நம்பிக்கை தரும் வகையில் தீர்க்க முயன்றால் எதிர்காலத்தில் நிச்சயம் அவர்களுக்கான ஆதரவினை வழங்குமாறு கூறி எமக்கு அதற்கான ஆணையை தமிழ் மக்கள் வழங்குவார்கள் என நாங்கள் திடமாக நம்புகிறோம் என்றார்.
Thanks: Thinakaran
Comments are closed.