கொடியேற்ற நிகழ்வில் பாதுகாப்பு தரப்பு காலணியுடன் நின்றதால் சர்ச்சை
வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாகபூசணி அம்மனின் வருடாந்திர மகோற்சவம் நேற்றைய தினம் சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
நேற்றைய கொடியேற்ற நிகழ்வில் ஆலய சூழலில் பொலிசார் மற்றும் கடற்படையினர் காலணியுடன் (சப்பாத்துக்களுடன்) கடமையில் நின்றமை தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பலரும் விசனம் தெரிவித்து வருகின்றனர்.
கொரோனோ காரணமாக நேற்றைய கொடியேற்ற நிகழ்வில் சிவாச்சாரியார்கள் மற்றும் ஆலய பரிபாலன சபையினர் மட்டுமே ஆலயத்தினுள் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
அம்மனின் கொடியேற்ற நிகழ்வை நேரில் கண்டுகழிக்க வந்திருந்த பலரும் ஆலய வெளி வீதியில் அமைந்துள்ள வாயில் கதவுகளை பூட்டி பொலிசார் தடுத்து நிறுத்தி இருந்தனர். வயது வேறுபாடின்றி பலரும் வெயிலில் கால் கடுக்க காத்திருந்தும் பொலிசார் ஆலய வளாகத்தினுள் உள் நுழைய எவருக்கும் அனுமதி வழங்கவில்லை.
இந்நிலையில் ஆலய வளாகத்தினுள் பொலிசாரும் கடற்படையினரும் காலணிகளுடன் கடமையில் இருந்தமை தொடர்பில் பலரும் நேரில் அவர்களுக்கு அறிவுறுத்திய போதிலும் அதற்கு அவர்கள் செவி கொடுக்காது கடமையில் ஈடுபட்டிருந்தனர்.
தற்போது அவை தொடர்பிலான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு கடுமையாக பலரும் எதிர்த்து வருகின்றனர்.
இது தொடர்பில் ஆலய பரிபாலன சபை , இந்து அமைப்புக்கள் மற்றும் சர்வ மத அமைப்புக்கள் கவனத்தில் கொண்டு எதிர்வரும் நாட்களில் ஆலய சூழலில் காலணிகளுடன் கடமையில் ஈடுபடாதவாறு தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரி வருகின்றனர்.
Comments are closed.