உயர்தரப் பரீட்சை குறித்த திகதி நிர்ணயிக்க குழு
இம்முறை கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையை நடத்துவதற்கான திகதி தொடர்பில் முன்வைக்கப்படும் யோசனைகளை பரிசீலிப்பதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
தமது தலைமையில் இந்தக் குழு செயற்படவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் M.H.M. சித்ரானந்த தெரிவித்துள்ளார்.
கல்வி இராஜாங்க அமைச்சின் செயலாளரும் ஏனைய மேலதிக செயலாளர்கள் இருவரும் இந்த குழுவில் அடங்குகின்றனர்.
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் கருத்துகள் மற்றும் யோசனைகளை அதிபர்களூடாக அமைச்சிற்கு வழங்குமாறு அனைத்து வலயக்கல்விப் பணிப்பாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கருத்துகள் மற்றும் யோசனைகள் பரிசீலிக்கப்பட்டதன் பின்னர் இம்முறை உயர்தரப் பரீட்சையை ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தினத்தில் நடத்துவதா இல்லையா என்பது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் கல்வி அமைச்சின் செயலாளர் M.H.M. சித்ரானந்த சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுவரை கிடைத்த கருத்துகளின் அடிப்படையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திகதியில் பரீட்சையை நடத்த முடியும் என பல தரப்பினரும் தெரிவித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இம்முறை கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 3 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 2 ஆம் திகதி வரை நடத்துவதற்கு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டது.
Comments are closed.