சினிமாவுக்கு பின்னால்… பாகம் – 3
-சினிமாவின் தொழில்நுட்ப ரகசியங்கள்-
_ பெ.கணேஷ் _
சினிமாவின் இயக்கம் என்பது என்ன?
தமிழ்: நீங்க ஒரு காட்சியை எப்படி பல ஷாட்களாக பிரிப்பது? எத்தனை வகையான ஷாட்கள் இருக்கிறது என்று சொல்றதுக்கு முன்பாக சினிமா எப்படி இயங்குகிறதுன்னு தெளிவா சொல்லுங்க அப்பதான் எனக்கு விளங்கும்.
ஓ. நீங்க அப்படி வர்றீங்களா? சரி முதல்ல ஃபிலிம்ல இருந்து ஆரம்பிப்போம் சினிமாவுக்கு பயன்படுத்தற பிலிமை ரா ஸ்டாக்குன்னு (பிலிம் நெகட்டிவ்) சொல்லுவாங்க. அதாவது நானூறு அடி கேன்ல இதை கலர் லேப்ல இருந்து வாங்க முடியும். ஒரு படத்துக்கு அறுபது ஆயிரத்துல இருந்து ஒரு லட்சம் அடி வரைக்கும் செலவாகும் அது டைரக்டர்கள், கேமராமேன்களை பொறுத்து மாறுபடும் இப்போதைக்கு ஃப்யூஜியும் ஈஸ்ட்மென் கலர்பிலிமும்தான் பெரும்பாலும் உபயோகப்படுத்தறாங்க. ப்யூஜியோட விலை ஆயிரம் அடி பதினைந்தாயிரம் ரூபாய் ஈஸ்ட்மென் கலர் பிலிம் இருபத்தொரு ஆயிரம் ரூபாய். இது ரெண்டுக்கும் என்ன வித்யாசம்னா ப்யூஜி ஃபிலிம் யூஸ் பண்ணும்போது லைட்டிங் கொஞ்சம் அதிகமா தேவைப்படும் ஈஸ்ட்மென் பிலிம்க்கு அவ்வளவா தேவைப்படாது. அந்த பிலிம்லயும் டே லைட்டிற்கான ஃபிலிம், நைட் ஃஎபடெக்டுக்கான பிலிம் ஹை ஸ்பீடு பிலிம்னு நிறைய வெரைட்டி இருக்கு.
நாம படமெடுக்கற சூழலுக்குத் தகுந்த மாதிரி மழைகளிலும், வெயில்களிலும், இரவு நேரம், அதிகாலை நேரம்னு ஒவ்வொரு காலத்துக்கு தகுந்த மாதிரி ஃபிலிம்களை உபயோகிப்பாங்க.
அடுத்து கேமராவுல படம் பதிவாகிற ஸ்பீடுங்கிறது தான் படம் அசைவதற்கும், இயங்குவதற்கும் முக்கிய காரணம். அதாவது ஒரு செகண்டுக்கு இருபத்து நான்கு பிரேம்கள் என்கிற வேகத்தில் படம் பதிவாகிறது. அதே வேகத்தில் தியேட்டர் புரொஜக்டரில் ஒரு செகண்டுக்கு இருபத்து நான்கு பிரேம்கள் என்கிற வேகத்தில் சுழல்வதால் படம் அசைகிறது கேரக்டர்கள் நகர்கிறது, நடிக்கிறது, பாடுகிறது.
அடுத்து ஒரு ஷாட்டுக்கும் மற்றொரு ஷாட்டுக்கும் இடைப்பட்ட இடைவெளி மைனஸ் ஒரு செகண்டுக்கும் குறைவான நேரம் என்பதால் அடுத்த காட்சி வருவது நம் கண்ணுக்கு புலப்படாமல் போகிறது.
அதாவது நமது கண் உணரும் சக்தியை விட வேகமாக ஒரு பிரேமும் மற்றொரு பிரேமும் இணைவதால் நாம் படச்சுருள் ஓடுகிறபோது காட்சி மாற்றத்தின் கட்டிங்கை அதாவது ஃப்லிமின் ஒட்டுதலை உணரமுடியாமல் போகிறோம். உதாரணத்திற்கு ஒருவர் முகம் குளோசப்பாக காட்டப்பட்டு அடுத்த நொடி மிகப் பெரிய வீடு காட்டப்படும்போது அந்த காட்சி மாற்றத்தின் ஃபிலிம் ஒட்டுதலை உணராமல் காட்சியை மட்டும் நாம் கவனிக்க முடிகிறது.
ஒரு செகண்டுக்கு இருபத்து நான்கு பிரேம் அதாவது ஒன்றரை அடி பிலிம் கேமராவில் பதிவாகிறது. அப்படியெனில் ஒரு நிமிடத்திற்கு ஆயிரத்து நானூற்று நாற்பது பிரேம்கள், அதாவது தொன்னூறு அடி பிலிம் பதிவாகிறது. ஒரு மணி நேரத்திற்கு ஐந்தாயிரத்து நானூறு அடிகள் பதிவாகிறது.
ஒரு ரீல் என்பது ஆயிரம் அடிகளை குறிக்கும் அப்படியெனில் இரண்டு மணி நேரப் படத்திற்கு பதினோராயிரம் அடி பிலிம் தேவைப்படுகிறது.
ஆனால் நேரடியாக பதினோராம் அடிகளுக்கு பிலிமில் படம் எடுத்தால் போதும் என்றாகிவிடாது. குறைந்தது அறுபதாயிரம் அடிகள் வரை பதிவு செய்தால் மட்டுமே அதிலிருந்து நமக்கு எடிட்டிங் போக பதினோராயிரம் அடிகள் கிடைக்கும்.
அடுத்து தற்போது சினிமா ஸ்கோப் படங்கள் மட்டுமே எடுக்கப்படுவதால் இதற்கு தனியாக ஃபிலிம் வேண்டுமோ என்று நீங்கள் நினைக்கலாம். தேவையில்லை 35எம்எம் பிலிமிலேயே தற்போது சினிமாஸ்கோப் எடுக்கும் வசதியுள்ளது அதாவது தற்சமயம் சினிமாவிற்கு பயன்படுத்துகிற ERRIFLEX2, ERRIFLEX3, 435 போன்ற கேமராக்களின் பதிவு செய்யும் கேட்டை சினிமாஸ்கோப் படம் எடுக்கும் விதத்தில் மாற்றியமைத்துக் கொள்ள முடியும். சினிமாஸ்கோப்பிற்கென்று படம்பிடிக்கும் லென்சும் மாற்றப்படவேண்டும்.
அடுத்து நான் சொன்னதுபோல் ஒரு செகண்டுக்கு இருபத்து நான்கு பிரேம்கள் என்கிற வேகத்தை கூட்டி ஒரு செகண்டுக்கு நாற்பத்தெட்டு, எழுபத்து இரண்டு பிரேம்கள் என்று மாற்றி பதிவு செய்தால் அது ஸ்பீடு ஆகும். அதாவது எழுபத்து இரண்டு பிரேம் வேகத்தில் ப்ராஜெக்டரில் ஓட்டும்போது திரையில் நடிக்கும் நடிகர்கள் மெல்ல நடப்பது போலவும், பறப்பது போலவும் தெரியும் கனவு காட்சிகளில் தேவதைகள் பறந்து வருவதுபோல் வரும் காட்சிக்குபடி எடுக்கப்பட்டதுதான்.
இப்பொழுது ஓரளவு சினிமாவின் இயக்கம் உங்களுக்கு புரிந்திருக்கும் என நினைக்கிறேன். அடுத்து காட்சியை எப்படி பல கோணங்களாக (ஷாட்) பிரிப்பது என பார்ப்போம்.
தமிழ் : ஷாட்ன்னா என்ன? அதுல எத்தனை வகைகள் இருக்குன்னு முதல்ல சொல்லுங்க.
ஷாட்ங்கிறது நமது கண்பார்வையின் கோணம். அதாவது நாம் ஒரு பொருளை பார்க்கும்பேறு அது நம் கண்ணுக்கு எப்படி புலனாகிறது என்பதை குறிப்பதுதான் ஷாட்.
ஷாட்டில் பலவகை இருக்கிறது. அதாவது ரொம்ப நெருக்கமா ஒரு பொருள் நம் கண்பார்வையில் படுவது குளோசப்.
BCU or XCU
தமிழ் இப்ப நீங்க என் கண்களை மட்டுமே பார்க்கறீங்கன்னு வச்சுப்போம் அதுக்கு எக்ஸ்ட்ரீம் குளோசப் ஷாட்டுன்னு பேரு.
CU
அதையே நீங்க என் முகத்தை முழுதுமாக அதாவது முகத்தை மட்டுமே கூர்ந்து பார்ப்பது குளோசப் ஷாட்
MS
அடுத்து முகத்திலிருந்து இடுப்பு வரை பார்ப்பது மிட் ஷாட்.
MLS
அதற்கடுத்து நான் உன்னுடன் பேசுவதை மற்றொருவர் கவனிக்கிறார் என வைப்போம். அப்போது தொலைவில் அவருடைய பார்வையில் நாம் இருவரும் நமக்கு பின்னாலிருக்கும் இடமும், சூழலும் தெரியும் அது மிட் லாங் ஷாட்.
LMS or Full shot
என்னை உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால்வரை பார்ப்பது ஃபுல் ஷாட்.
அதாவது லாங் மிட் ஷாட் இப்படி நீங்க என்னை முழுதுமாக பார்க்கும்போது உனக்கு என் பின்னாலிருக்கும் இடமும் சூழ்நிலையும் தெரியும் என்பதை மனதில் குறித்துக்கொள்.
LS
நாம் இருவர் பேசிக்கொண்டிருக்க பின் பிறமிருந்து மலை எல்லாம் எதிரே இருக்கும் நபரின் பார்வைக்கு தெரிய வருகிறதென்றால் அது லாங் ஷாட்.
H/A
அடுத்து நாம் பேசுவதை ஒரு உயரமான மாடியிலிருந்து ஒருவர் கவனிக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவரது பார்வையில் நாம் தெரிவது டாப் ஆங்கிள் ஷாட் or High Angel.
L/A
அப்படியில்லாமல் நாம் மாடியிலிருந்து பேச, கீழேயிருந்து ஒருவன் நம்மை பார்த்தால் அவரது பார்வையின்படி அது லோ ஆங்கிள் ஷாட்.
OSS
அடுத்து என் முன்பாக நீ நிற்க நான் உன்னுடன் பேசுவதை உன் இடது தோள்பட்டையின் வழியாக என் முகத்தை ஒருவர் கவனித்தால் அது ஓவர் ஷோல்டர் ஷாட்.
சினிமாவில் இப்படி ஒரு காட்சி எடுக்காவிட்டால் அதற்கு கவுண்ட்டர் (தொடர்ச்சி) ஷாட்டாக என் வலது தோளின் வழியாக உன் முகம் தெரியும் விதமாக அடுத்த ஷாட்டை எடுப்பார்கள்.
அதாவது லெப்ட் & ரைட் இதுதான் சினிமா இலக்கணம். என் வலத்தோளின் வழியாக உன் முகம் தெரியும்படி ஷாட் வைத்தால் அடுத்த ஷாட் இடத்தோளின் வழியாக என் முகம் தெரியும்படி எடுக்கவேண்டும்.
அடுத்து… ஒரு சீனுக்கு எத்தனை ஷாட்களை பிரிக்கலாம் என்பது அந்த காட்சியின் முக்கியத்துவத்தை, சூழ்நிலையை பொறுத்து மாறுபடும். ஒரு சில காட்சிகள் இரண்டு மூன்று ஷாட்களிலேயே எடுத்து விடலாம். ஆனால் ஒரு சில காட்சிகளுக்கு இருபதிலிருந்து ஐம்பது ஷாட்கள் வரை தேவைப்படும்.
உதாரணத்திற்கு கிளைமாக்ஸ்ஸை நெருங்கிக்கொண்டிருக்கும் சூழலில் ஹீரோ.. ஹீரோயின் வீட்டுக்கு வந்து நமக்கு நடந்தது காதல் திருமணம் என்றாலும் இன்றிலிருந்து உன்னை என் மனைவியாக ஏற்றுக்கொள்ளமாட்டேன். நாம் பிரிந்துவிடலாம் என்று சொல்லும் காட்சி என்று வைத்துக்கொள்வோம். இந்த காட்சியை எத்தனை ஷாட்களில் எடுக்கலாம் தெரியுமா?
நீங்கள் கொஞ்சம் யோசித்து வையுங்கள். அடுத்த வாரம் நான் சொல்கிறேன்.. அப்போது நீங்கள் யோசித்தது எந்தளவிற்கு பொறுந்தி வருகிறது என பார்க்கலாம்.
மு.கு:- சில படங்கள் & குறியீடுகள் கட்டுரையில் இணைக்கப்படாததால் தேவை கருதி இணைத்துள்ளேன். நன்றி.
சிப்பிக்குள் முத்தாய் சிறைப்பட்டுக் கிடப்பதை விட, சுதந்திரமாக, உப்பாகி, நீரோடு கரைவதே மேல்……….
– ஜீவன்
Diploma in Cinematography
மேலும் சில தகவல்களை கீழே தெரிந்து கொள்வதற்காக இணைக்கிறேன்
Comments are closed.