கருணாவின் கூற்றுக்கு நடவடிக்கை எடுப்பது என்பது போராட்டத்தை பிழையாக காட்டுவதாகும் – அனந்தி
கருணா தளபதியாக இருந்து யுத்தத்தை நடத்தி அதில் 3000 இராணுவத்தினரை கொன்றேன் என கூறியதற்கு நடவடிக்கை எடுப்பது பற்றி கூறுவது ஒரு இனம் தன்னை பாதுகாப்பதற்காக ஒரு ஆயுத போராட்டத்தை நடத்தியதை பிழையாக காட்டுவதாக பார்க்கலாம் என ஈழ மக்கள் சுயாட்சிக் கழக செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.
நேற்றைய தினம் யாழ் ஊடக மன்றத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு சமகால அரசியல் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்
தமிழ் தேசியக் கூட்டமைப்பு மக்களினுடைய அபிலாசைகளுக்கு விரோதமாக தங்களுடைய சுய நல இலாபம் கருதிய அரசியல் போக்கை கொண்டிருப்பதனால் அந்த கட்சிக்கு மாற்று கட்சியாக நாங்கள் கூட்டாக பாராளுமன்ற தேர்தலில் களமிறங்கி இருக்கின்றோம். எங்களுடைய என்னப்பாங்கானது ஒட்டுமொத்தமாக இன அழிப்புக்கு ஆளான மக்களுடைய அபிலாசைகளை வென்றெடுக்க கூடியதாக அமையும்.
கூட்டமைப்பை முற்று முழுதாக அரசியல் அரங்கில் இருந்து விரட்ட வேண்டும் என்று நாம் நினைத்ததில்லை. இவர்கள் பிழையான பாதையில் பயணிக்கின்ற பொழுது இவர்களை சரியாக வழி நடத்த வேண்டிய தேவையும் கடைப்பாடும் மக்களுக்கும் எங்களுக்கும் உண்டு. அந்தவகையில் இந்த பாராளுமன்ற தேர்தல் மூலம் மக்களுக்கு விரோதமாக தொழிற்பட்டுக் கொண்டிருக்கின்ற கூட்டமைப்பினருக்கு சரியான பாடம் கற்பிக்கப்படும்.
அடுத்து வருகின்ற காலங்களில் விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பு சரியான பாதையில் பயணிப்பதற்கு நாங்கள் நிச்சயமாக எதிர்வரும் பொதுத் தேர்தலில் வெற்றியீட்டி அவர்களை சரியான பாதைக்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்வோம்.
மக்களின் அன்றாட பிரச்சினைகளையும் நீண்டகாலமாக தீர்க்கப்படாத பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கு கனிசமான பாராளுமன்ற உறுப்பினர்கள் மீன் சின்னத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்டு பாராளுமன்றத்தில் பேரம் பேசக்கூடிய சக்தியாக இருக்க மக்கள் ஆணை வழங்க வேண்டும்.
அண்மையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் இனவாதிகளை கோட்டாபய அடக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார். நான் நினைக்கிறேன் அவர் இனவாதிகள் என கூறுவது விமல் வீரவன்ச போன்றவர்களாகவும் இருக்கலாம். சில வேளைகளில் அவர் ஜனாதிபதியை கூட இனவாதி என கூறுவதாக இருக்கலாம். எனெனில் அவரும் இனவாதமான போக்கில் செல்கின்றபடியினால் சம்பந்தர் மிக துணிச்சலாக தெரிவித்திருக்கலாம் என நினைக்கிறேன்.
கருணா என்கின்ற விநாயகமூர்த்தி முரளிதரன் கடந்த காலங்களில் விடுதலைப் புலிகள் அமைப்பில் ஒரு தளபதியாக இருந்திருக்கிறார். அவர் செய்த துரோகத்தனம் ஒரு இனம் அழிவதற்கு வழிகோலி விட்டது. ஒரு இனம் முற்று முழுதாக இன அழிப்புக்கு ஆளாவதற்க்கு வழிகோலிய ஒரு துரோகத்தனத்தை செய்துவிட்டார். அதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. அனால் விடுதலைப் புலிகளுடைய காலத்தில் கருணா தளபதியாக இருந்து யுத்தத்தை நடத்தி அதில் 3000 இராணுவத்தினரை கொன்றேன் என கூறியதற்கு நடவடிக்கை எடுப்பது பற்றி கூறுவது ஒரு இனம் தன்னை பாதுகாப்பதற்காக ஒரு ஆயுத போராட்டத்தை நடத்தியதை பிழையாக காட்டுவதாக பார்க்கலாம்.
புனர்வாழ்வு பெற்ற போராளிகள் கூட இவ்வாறான பிரச்சனைகள் கிளறப்படுகின்ற போது தங்களுடைய அமைதியான வாழ்க்கையில் அச்சுறுத்தல்கள் வரலாம் என அச்சப்படும் நிலை காணப்படுகின்றது. அதே போல் புனர்வாழ்வு பெற்ற, பெறாத அல்லது ஆயுத போராட்டத்துக்கு ஆதரவாக செயற்பட்டவர்கள் என எல்லாருடைய மனங்களும் கலங்குகின்ற நிலையை தோற்றுவித்திருக்கிறது.
மக்களை பாதுகாக்கவே விடுதலைப் புலிகள் ஆயுதம் ஏந்தினார்கள் இலங்கையின் பாதுகாப்பு படையினருக்கு எதிராக யுத்தத்தை நடத்தினார்கள் . கடந்த காலங்களில் இராணுவத்தினரை கொன்றனர் என்பதற்காக நடவடிக்கை எடுப்பது என்பது ஒட்டுமொத்த இன விடுதலை போராட்டத்தை பிழையான அறிமுகத்துக்கு கொண்டு போவதாக நான் பார்க்கிறேன்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் பெண்களுக்கான அங்கீகாரம் இல்லை. ஆண் ஆதிக்க சிந்தனை கொண்டவர்களே அங்கு இருக்கிறார்கள். நான் அமைதியான பொது வாழ்வில் இருந்து இந்த அரசியலுக்குள் வந்த பின்னர் எனக்கு எற்பட்ட அநீதிக்கு எதிராக குரல் கொடுத்த போது தமிழரசு கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டேன் என்னுடைய அனுபவம் சசிகலா ரவிராஜ்க்கு ஒரு பாடமாக இருந்திருக்க வேண்டும்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் பெண்களுக்கான எந்தவொரு உரிமையும் இல்லை. அங்கு உள்ளவர்கள் பெண்களை அடிமைப் போக்கோடு பார்க்கின்ற மனப்போக்கில் தான் உள்ளார்கள். அங்கு இருக்கின்ற முதியவர்களும் சரி இளையவர்களும் சரி பெண்களை மதிக்காத சம உரிமை வழங்க முடியாதவர்களாகவே இருக்கின்றார்கள். விடுதலைப் புலிகளினால் மாமனிதர் விருது கொடுக்கப்பட்ட ரவிராஜினுடைய சிலையில் கூட மாமனிதர் என்ற பட்டம் பொறிக்கப்படாமல் இருந்தது. இப்போது தேர்தலுக்காக மாமனிதர் ரவிராஜினுடைய மனைவிக்கு வாக்களியுங்கள் என தமிழரசு கட்சி கோருவது தேவைக்கு ஏற்ப விடுதலைப் புலிகளையும் அவர்கள் வழங்கிய மாமனிதர் படத்தினையும் அங்கீகரிக்கின்ற செயலாக கருதுகின்றேன் .
சசிகலா ரவிராஜ் அரசியலுக்குள் அறிமுகமாகி சில காலங்களே ஆகின்றது. பெண்கள் மதிக்கப்பட வேண்டும் என்ற தேசியத் தலைவரின் சிந்தனைக்குள் வளர்ந்தவர்கள் என்ற நிலையில் நிச்சயமாக சசிகலா அவர்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். பெண்களை கருவேப்பிலை போல் பயன்படுத்த அனுமதிக்க கூடாது.
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான பிரச்சாரங்கள் மிகவும் சவால் நிறைந்ததாக உள்ளது. கொரோனா நோய்த்தாக்கம் காரணமாக மக்கள் பாரிய அளவில் ஒன்று கூடுவது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. நாங்கள் மேற்கொள்ளும் கூட்டங்களில் சமூக இடைவெளியை பேண வேண்டும் என இராணுவமே நேரடியாக நுழைகின்றது. எமது ஆதரவாளர்களுக்கு இராணுவத்தினரால் அச்சுறுத்தல் கூட விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலை மாறவேண்டும் அப்போதே தேர்தல் காலங்களில் மக்கள் அச்சம் இன்றி வாக்களிக்க வருவார்கள்.
சுமந்திரன் சிங்கள ஊடகங்களுக்கு ஆயுத போராட்டத்தினையும் தேசியத் தலைவரையும் ஏற்றுக்கொள்ளவில்லை என்ற கருத்தை தெரிவித்து இருந்தார். அனால் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் மைத்துனர் தீபன் விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதி. அவருடைய தியாகங்கள் சுமந்திரனுடைய கருத்தில் இல்லாமல் செய்யப்படுகின்றது. இதை கவனத்தில் எடுக்காது கட்சி நலன்களுக்கு சுமந்திரனுக்காக வாக்கு கேட்பது என்பது கவலையளிக்கிறது.
இறுதி யுத்தம் முடிந்ததும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தர் அப்போதைய ஜனாதிபதி மகிந்தவிற்கு வாழ்த்து சொன்னார். அதை அச்சம் காரணமாக கூறுகின்றார் என அப்போது நினைத்தோம். அனால் விடுதலைப் புலிகளினுடைய மௌனிப்புக்கு பின்னர் தொடர்ச்சியாக இவர்களின் நடவடிக்கைகளை பார்க்கின்ற போது கூட்டமைப்பில் உள்ளவர்கள் எமது போராட்டத்த்தை பிழையாக சித்தரித்து தமிழ் மக்களின் அபிலாசைகளை தூக்கி எறிந்துவிட்டு செயற்படுவோராக காணப்படுகின்றனர் என்பது புலனாகின்றது . ஜனாதிபதித் தேர்தலிலும் கூட எமது 13 அம்சக் கோரிக்கைகளை தூக்கி எறிந்துவிட்டே சஜித்தை ஆதரிப்பதற்காக கூட்டமைப்பினர் கூறினார்கள்.
இவர்கள் துரோகிகள் என்று பேசிக்கொண்டு இருக்காமல் இவர்கள் சரியான பாதையில் பயணிப்பதற்க்கான அழுத்தத்தை மக்கள் தான் கொடுக்க வேண்டும். அடுத்த தேர்தலிலாவது கூட்டமைப்பு சரியான வேட்பாளர்களை நிறுத்தி மக்களின் அபிலாசைகளை சரியான பாதையில் கொண்டு செல்வதற்க்கு இந்த முறை பாடம் கற்றுக்கொடுக்க வேண்டும் .
நாங்கள் மக்களின் அபிலாசைகளுக்கு விரோதமாக நடக்க மாட்டோம். 2009ற்கு பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மகிந்தவோடு இணக்கப்பாட்டிலேயே இருந்தார்கள். பின்னர் ரணில் தலைமையிலான அரசாங்கத்தில் ஜனநயாக இடைவெளியோடு இணைந்து இருந்தாலும் எந்தவொரு தீர்வினையும் பெற்றுக்கொடுக்கவில்லை. தற்போது கோட்டபாய ஆட்சியில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்குவதற்க்கு தாங்கள் ஆதரவு கொடுக்கலாம் என கூட்டமைப்பு உறுப்பினர் கருத்து தெரிவித்திருப்பது என்பது அவர்களின் சுயலாபங்களுக்கானது என நான் நினைக்கிறேன். தற்போதைய அரசாங்கத்தோடும் கூட்டமைப்பினர் டீல் பேசியிருக்க கூடும்.
இந்த பொதுத் தேர்தலில் பல கட்சிகளின் சுயேச்சை குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சிங்கள தேசியக் கட்சிகள் கூட அதிகளவாக யாழ்ப்பாணத்ததை நோக்கி நகர்ந்து தங்களுடைய வேட்பாளர்களை களமிறக்கி உள்ளது. கொழும்பில் இருந்து இறக்குமதி செயப்பட்ட வேட்பாளர்களை துண்டுப்பிரசுரம் வாயிலாக அறிகின்றோம். மக்கள் மிகத் தெளிவாக இருக்க வேண்டும்.மக்களின் வாக்குகளை சிதறடிப்பதற்காக களமிறங்கியுள்ள வேட்பாளர்களை மக்கள் நிராகரிக்க வேண்டும் என்றார்.
Comments are closed.