ஐக்கிய மக்கள் சக்தி 90க்கும் மேற்பட்ட ஆசனங்களைக் கைப்பற்றும் – மனோ கணேசன்
பொதுஜன பெரமுன என்ற கூட்டணிக்குள் இருக்கக்கூடிய தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகள், அங்கு எடுபிடிகளாக இருப்பதால், அது எடுபிடிகளின் கூட்டணியாகவே உள்ளெதென்று தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் மனோ கணேசன், ஐக்கிய தேசிய கட்சி, எடுபடாத கட்சியாகவும்
தமிழ், சிங்களம், முஸ்லிம் மக்களும் சேர்ந்து பயணிக்கக் கூடிய ஐக்கிய மக்கள் சக்தி எடுபடும் கூட்டணியாக இருப்பதாகவும் கூறினார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகத்தின் நேற்று (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, மனோ கணேசன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், “இந்த அரசாங்கம், தமது அரசியல் பயணத்தை முன்னெடுப்பதற்காக, இந்த நாடு ஓர் இனத்துக்கும் மதத்துக்கும் சொந்தமானதெனத் தெரிவித்து, பேரினவாதத்தின் மூலமாக இந்த நாட்டை, முகாபேயின் சிம்பாப்வே நாடாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மாற்றி வருகின்றார்” என்றார். “ஆனால், தமிழர்களும் முஸ்லிம்களும் நெல்சன் மண்டேலாவையே எதிர்பார்க்கின்றனர். நாங்கள், சிங்களம், பௌத்த சகோதரர்களுடன் சேர்ந்துவாழ விரும்புகின்றோம். சிங்கள, பௌத்த கலாசாரத்தை மதிக்கின்றோம். ஆகவே, நாங்கள்நாட்டில் ஐக்கியமாக வாழ விரும்புகின்றோம்.
அதேவேளை, இந்த ஐக்கியத்துக்கு முன்னால், மொழிச் சமத்துவம், இனச் சமத்துவம், மதச் சமத்துவத்தை நாங்கள் நிபந்தனைகளாக அறிவித்துள்ள நிலையில், நாம் அனைவரும் இலங்கையர்களாக எம்மை அடையாளப்படுத்த விரும்புகின்றோம். இந்த யதார்த்தத்தை வழங்கும் ஒரே கூட்டணியாக, ஐக்கிய மக்கள் சக்தி விளங்குகின்றது” என்றார்.
“மார்ச் 16ஆம் திகதி தேர்தல் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தபோது, நாங்கள் 60 ஆசனங்களை மாத்திரமே கைப்பற்றி, தோல்வியடைந்து விடுவோம் எனத் தான் நினைத்ததாகவும் நாள்
செல்லச் செல்ல இந்த அரசாங்கத்தின் முயற்சிகள் வீழ்ச்சியடைந்து வருகின்ற நிலையில், 90க்கும் மேற்பட்ட ஆசனங்களைக் கைப்பற்றுவோம் என்றார்.
நன்றி: தமிழ் மிரர்
Comments are closed.