கட்டாய முக கவசம் சுவிற்சர்லாந்தின் நடுவனரசால் கட்டாயமாக்கப்பட்டுள்ளது
சுவிசில் தளர்வு தொடரும் வேளை இறுக்கமான கட்டளையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது! 06. 07. 2020 முதல்பொதுப்போக்குவரத்தில் அனைவரும் சுகாதாரப்பாதுகாப்பு முகவுறை அணிதல் சுவிற்சர்லாந்தின் நடுவனரசால் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதுவரை மாநிலங்கள் மக்கள் பொதுப்போக்குவரத்தில் முகவுறை அணிதல் மாநிலங்களின் முடிவென அறிவித்துவந்த சுவிஸ் 01. 07. 2020 புதிதாகமகுடநுண்ணுயிர் தொற்றுக்குள்ளானோர் (Covid-19) தொகை 137னை தொட்டதன் பலனாக 06. 07. 2020 முதல்நாடுமுழுவதும் பொதுப்போக்குவரத்தில் பயணிக்கும் மக்கள் முகவுறை அணிதல் கட்டாயம் என அறிவித்துள்ளது.
பொதுப்போக்குவரத்து அமைப்புக்களது வேண்டுகோள் சுவிஸ் அரசு பொதுமக்கள் பொதுப்பயணங்களில் முகவுறை அணிதலைக் கட்டாயமாகக் வேண்டும் என்றிருந்தது, இப்போது இவ்வேண்டுகோளை சுவிஸ் அரசு நிறைவேற்றியுள்ளது என்றார் சுவிற்சர்லாந்தின் அதிபர் திருமதி சீமொனெற்ரா சொமறூக்கா.
முகவுறைகளை அணியுங்கள் எனும் வேண்டுகோள் நோய்த் தொடுப்பு நடவடிக்கையின் ஒரு வழிமுறையாகும் என்றார் சுவிஸ் அதிபர். சில வேளைகளில் உள்ளூர் முடிவுகள் போதுமானதாக இல்லாமல் இருப்பதால் சுவிஸ் முழுவதும் இந் நடவடிக்கையினை நாம் மேற்கொள்ள வேண்டி உள்ளது என்றார்.
சுவிசின் சுகாதார அமைச்சர் திரு. அலான் பேர்சே தெரிவிக்கையில்: பொதுப்போக்குவரத்துப் பயணங்களில் பல ஐரோப்பிய நாடுகளில் முகவுறை கட்டாயமாக்கப்பட்டிருக்கும் நிலையில் விடுமுறை காலம் தொடங்கும் வேளை நாம் இதனை நடைமுறைப்படுத்துவது சிறப்பு, இரண்டாவது தொற்றலைபெருவாரியாக எழமுன்னர் நாம் முகவுறையினை கட்டாயமாக்குவது சிறந்தது என்றார்.
கடந்த வாரங்களில் சுவிஸ் இயல்பு வாழ்விற்கு திரும்பிக்கொண்டிருக்கையில் எல்லைகள் திறக்கப்பட்டதால் நோய்த்தொற்றும் பெருமளவில் இறக்குமதியாகியுள்ளதாக கடந்த நாட்களில் அதிகரிக்கும் நோய்த்தொற்றுக் கணக்கெடுப்பு எடுத்துக்காட்டுகின்றது. அதுபோல் களியாட்ட பொழுதுபோக்கு விடுதிகளும் தொற்றினை அளிக்கும் நடுவமாக கடந்த நாட்களில் சுவிஸ் நாளேடுகளில் தலைப்பாக அமைந்துள்ளது.
சுவிஸ் அதிபர் இதனைக் குறிப்பிடுகையில் இந் நோய்தொற்று நுண்ணுயிர் எத்தகைய விரைவாகப் பரவுகின்றது என்பதை நாம் மீண்டும் காணக்கூடியதாக உள்ளது. அதற்கமைய நாம் எம்மைக் காத்துக்கொள்ள வேண்டும் என்றார்.
சட்டங்கள், முன்மொழிவுகள், சுயபொறுப்புணர்வு என்பவற்றிற்குள் மாநில அரசுகளும் சுவிசின் நடுவன் அரசும் சமநிலைகளைக் கடைப்பிடிக்க வேண்டி உள்ளது, உயிர்கொல்லும் நுண்ணுயிர் அழிக்கப்படவில்லை. இதனை நாம் மிகைப்படுத்தலாகாது அதேவேளை எதிர்விளைவாற்றாது சும்மா காத்திருக்கவும் முடியாது, ஆகவே இன்று சுவிஸ் அரசு இம் முடிவினை எட்டியுள்ளது என்றார் சுவிஸ் அதிபர் திருமதி. சொமறுக்கா.
தனிமைப்படுத்தல்
தனிமைப்படுத்தப்படும் கட்டாயக் கடமை எதிர்காலத்தில் நோய்த்தொற்று பெருமளவில் உள்ள நாடுகளுக்கு பயணம் செய்வோர் சுவிசிற்குள் திரும்பும்போது அவர்கள் போதியளவு நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும். கடந்த நாட்களில் யூன் நடுப்பகுதி முதல் வெளிநாடுகளில் நோய்த் தொற்றுக்கு ஆளானவர்கள் அதிகம் என்றார் சுகாதார அமைச்சர் திரு. பேர்சே.
இத்தகைய சூழல்கள் விடுமுறை காலத்தில் அதிகம் அதிகரிக்கும். பெருந்தொற்று அபாயம் உள்ள நாடுகளில் பட்டியல் தயார்ப்படுத்தப்பட்டு வருகின்றது. சேர்பியா, கொசோவோ, சுவீடன் போன்ற நாடுகள் இப்பட்டியலில் இடம்பெறாலாம் என்றும் சுவிஸ் அமைச்சர்கள் தெரிவித்தனர். சுவிஸ் அதிபர் பயணத்திற்குப் பின்னர் சுயதனிமைப்படுத்தல் நோய்த்தடுப்பு செயலாக அமையும் என்றார்.
சுய தொழில் செய்வோருக்கான உதவி செப்ரெம்பர் வரை நீடிக்கப்படுகின்றது
சுய தொழில் ஈடுபட்டு வருவோர்கள் வருமான இன்மையால் பாதிக்கப்பட்டால், அவர்களுக்கு ஈட்டுத் தொகையினை செப்ரெம்பர் 2020 வரை வழங்குவதற்கு சுவிஸ் நடுவன் அரசு முடிவெடுத்துள்ளது.
முன்னர் சுவிஸ் அரசு யூனி 2020 வரை இவ் உதவியினை அறிவித்திருந்தது. இது பெரும் விமர்சனத்திற்கு ஆளாகியிருந்தது. இப்போது சுயதொழில் செய்வோரை காக்கும் வகையில் இம் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இயல்பு வாழ்விற்கு சுவிஸ் முயன்றாலும் பொருளாதார ரீதியில் சில துறைகளில் இன்னும் முன்னேற்றம் ஏதும் காணப்படவில்லை என்றார் சுவிஸ் பொருளாதர அமைச்சர் திரு பார்மெலின்.
சுகாதார அமைச்சர் திரு. பெர்சே அவர்கள் மீண்டும் மக்களிடம் தனது வழமையாக கோரிக்கையினை முன் வைத்தார்:
போதியளவு இடைவெளி பேணுங்கள்
சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடியுங்கள்
உணவங்களிலும், விடுதிகளிலும் தயவுசெய்து உங்கள் தரவுகளை சரியாகப் பதிவுசெய்யுங்கள்
பொதுப்போக்குவரத்தில் முகவுறை அணியுங்கள்
சுயபொறுப்புடன் நடந்துகொள்ளுங்கள்!
தண்டனைப் பணத்தின் தொகை
பொதுப்போக்குவரத்தில் முகவுறை அணியாதவர்களுக்கு எத் தொகை தண்டனையாக அறவிடப்படும் என்று அறிவிக்கப்படவில்லை. பயணச்சீட்டு சோதனை செய்யும் பணியாளர்கள் பயணிகளை முகவுறை அணிய பணிப்பர், மறுப்பவர்களுக்கு பொதுவிதி மீறிய தண்டனைக்கான குற்றப் பணத்தொனை அறவிடுவர்.
பொதுப்போக்குவரத்து துறைக்கு நிதியுதவி
கடந்த நாட்களில் மகுட நுண்ணுயிர் தொற்று 800 மில்லியன் சுவிஸ் பிராங் இழப்பினை ஏற்படுத்தி உள்ளது. அதனை இட்டு நிரப்புவதற்கு சுவிஸ் அரசு முன்வரவேண்டும் எனக் கடந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் முன்வைக்கப்பட்ட வேண்டுகோளை நடுவனரசு ஏற்க முன்வந்துள்ளது.
வணிக நிறுவனங்களின் வாடகை
வணிக நிறுவனங்கள் தொடர்ந்து செலுத்த வேண்டிய வாடகை முறையில் உறுதியற்ற நிலை நிலவுகின்றது. வணிக நிறுவனங்கள் தாம் 40 வீதம் செலுத்தவும், கட்டட உரிமையாளர்கள் 60 வீதம் செலுத்தவும் ஆவனை வேண்டியிருந்தனர். நடுவனரசு இது தொடர்பில் குளிர்கால பாராளுமன்றக் கூட்டத்தொடரில் இதுதொடர்பான முடிவினை நாடாளுமன்றம் எடுக்க வேண்டி சட்டாய்விற்கு அனுப்பி உள்ளது.
குறும்பணி „குறுகிய நேரப்பணிக்கு அரச மானியம்“
நிறுவனங்கள் போதியளவு பணியினைத் தொழிலாளர்களுக்கு வழங்கும் சூழல் இல்லாவிடின் அவர்கள் தொடர்ந்தும் சுவிஸ் நடுவன் அரசிடம் தொழில் ஊதியம் வழங்க மானியம் வேண்டலாம். பணிசெய்த நேரம் கழித்து ஏனைய மணிநேரத்திற்கு 80வீத ஊதியத்தினை நடுவனரசு வேலையிழந்தோர் சமூகக்காப்பீட்டு அமைப்பினால் வழங்கும். இவ்வுதவி முதலில் 12 மாதங்களுக்கு என அறிவிக்கப்பட்டிருந்தது. இது இப்போது 18 மாதங்களுக்கு அதிகரிக்கப்ட்டுள்ளது.
இம்முறையில் பெருமளவான மக்கள் தொழில் இழப்பதை சுவிற்சர்லாந்து அரசு தவிர்க்க முயல்கின்றது.
பயணங்கள்
20. 07. 2020 முதல் பல்வேறு செங்கன் ஒப்பந்தம் அல்லாத நாடுகளுக்கும் வான் பயணக் கதவுகள் திறக்கப்படுகின்றது. இவ் நிரலில் கனடா, அவுஸ்ரேலியாவும் அடங்கும்.
நாம் தொடர்ந்தும் இடைவெளி பேணவேண்டும், அனைத்து நிறுவனங்களும் பொது நிகழ்வுகளுக்கு வருகை அளிப்போர் தரவுகளை நிரலில் பதிந்து 14 நாட்களுக்குப் பாதுகாக்க வேண்டும். நோய்த் தொற்று ஆட்பட்டவர் எவருக்கெல்லாம் நோயினைப் பரப்பி இருக்க வாய்ப்புள்ளது என்பதைக் கண்டறிய வழியாக இது நோக்கப்படுகின்றது.
காலமும் சூழலும் இயல்பான இயல்பினை வழங்கட்டும்…
நன்றி: தொகுப்பு: சிவமகிழி
Comments are closed.