மஹிந்த ராஜபக்சவுக்கு முஸ்லிம்களாகிய நாங்கள் வாக்களிப்பதற்கு கடமைப்பட்டுள்ளோம் : அப்துல் சத்தார்

எமது நாட்டுப் பிரதமர் இறுதியாக போட்டியிடும் பொதுத் தேர்தல் ஆகும். அவருக்கு குருநாகல் மாவட்ட முஸ்லிம்கள் வாக்களிக்க கடமைப்பட்டுள்ளனர் என்று ஸ்ரீலங்கா பொதுஜன முஸ்லிம் முன்னணியின் பொதுச் செயலாளர் அப்துல் சத்தார் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன முஸ்லிம் முன்னணியின் முஸ்லிம் பட்டதாரிகள் சங்கத்தின் அங்குரார்ப்பண வைபவம் கெகுணுகொல்ல என்ற இடத்தில் அதிபர் சாஜஹான் தலைமையில் இடம்பெற்றது. அந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா பொதுஜன முஸ்லிம் முன்னணியின் பொதுச் செயலாளர் அப்துல் சத்தார் இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்
இந்நாட்டில் பிரதமராக வரவுள்ள மஹிந்த ராஜபக்சவுக்கு முஸ்லிம்களாகிய நாங்கள் வாக்களிப்பதற்கு கடமைப்பட்டுள்ளோம். யுத்த காலத்தில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டவர்களில் முஸ்லிம்களுமாகும். 30 வருட யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வந்து இடம்பெயர்ந்து வந்த முஸ்லிம்களை மீளவும் வடக்குப் பிரதேசங்களில் மீள்குடியேற்றம் செய்தமைக்கு நாங்கள் நன்றிக் கடன்பட்டுள்ளோம்.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் எத்தனையோ பள்ளிவாசல்கள் சேதமாக்கப்பட்டிருந்தன. அப்பிரதேசங்களில் மக்களை மீளக்குடியேற்றி பள்ளிவாசல்கள் , வீடமைப்பு வசதிகள் ஏற்படுத்திக் கொடுத்துள்ளமையை நாம் என்றும் மறக்கக் கூடாது.
வடக்கின் வசந்தம் கிழக்கின் உதயம் போன்ற வேலைத் திட்டங்களை உருவாக்கி வீதிப் போக்குவரத்து, பாலங்கள் எனப்பல்வேறு வகையிலான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தவர். இத்தகைய பல சேவைகளையும் நல்ல குணாசம்களையும் கொண்ட மஹிந்த ராஜபக்~வுக்கு குருநாகல் மாவட்ட முஸ்லிம்கள் கட்டாயமாக வாக்களித்தல் வேண்டும்.
இப்பிரதேசங்களில் குருநாகல் மாவட்டத்தில் இம்முறை ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனவில் தேர்தலில் போட்டியிடுவதற்காக எவரும் நிறுத்தப்பட வில்லை. ஆரம்ப காலத்தில் எமது நாட்டில் தேர்தலின் போது எம். எச். முஹமட், ஏ. சீ. எஸ். ஹமீத், அபூசாலி போன்றவர்கள் பெரும்பான்மையின சிங்கள மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டவர்கள். அவர்கள் இந்நாட்டுக்கு எண்ணற்ற சேவைகள் செய்தார்கள் .
எப்பொழுது இந்நாட்டில் இன ரீதியிலான அரசியல் தோற்றம் பெற்றதோ அன்றில் இருந்து சிங்களப் பிரதேசங்களில் நாங்கள் மிகவும் பின்தள்ளப்பட்ட நிலையில் இருக்கின்றோம். ஆதலால் முஸ்லிம் என்ற பெயருக்குத் தான் நாங்கள் வாக்களிக்க வேண்டும் என்கின்ற அவசியமில்லை. மஹிந்த ராஜபக்~ இதன் பின்னர் போட்டியிட மாட்டார். அவருடைய கடைசித் தேர்தல் ஆகும். அப்படியால் அவருக்கு முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் வாக்களிக்க வேண்டிய கடமையிருக்கிறது. அவர் மிகவும் நல்லவர் மிகவும் பண்பானவர். அவருடன் நெருங்கிப் பழகும் போது தான் அவருடைய குணாம்சங்கள் நன்கு தெரியும்.
அவர் தொடர்பில் எமது முஸ்லிம் அரசியல் தலைவர்கள் பிழையான குற்றச்சாட்டை முன் வைத்து எமது மனதைக் குழப்பி வைத்துள்ளனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் விசேடமாக நிர்வாகக் குழுவொன்று தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் சமன்பிரிய ஹேரத் , பட்டதாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
– இக்பால் அலி




Comments are closed.