போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவின் விவகாரம் அறிக்கை சமர்ப்பிக்குமாறு தேசிய பொலிஸ் ஆணைக்குழு அறிவிப்பு
போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவின் விவகாரம் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு தேசிய பொலிஸ் ஆணைக்குழு, பதில் பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளின் அறிக்கையை வழங்குமாறு ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
குறித்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் எனவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட 15 அதிகாரிகளை பணி இடைநிறுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
பணி இடைநிறுத்தப்பட்டுள்ளவர்களில் பொலிஸ் இன்ஸ்பெக்டர், உப பொலிஸ் இன்ஸ்பெக்டர்கள் இருவர், சார்ஜன் பதவியிலுள்ள ஐவர் மற்றும் 7 கான்ஸ்டபள்களும் அடங்குகின்றனர்.
இதேவேளை, இது குறித்து குற்றப்புலனாய்வு திணைக்கத்தினால் கைப்பற்றப்பட்ட வாகனங்களில் 3 வாகனங்கள் அரச இரசாயன பகுப்பாய்விற்கு அனுப்பப்பட்டுள்ளன.
இது தொடர்பான அறிக்கை, குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் சமர்ப்பிக்கப்படும் என அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை கடத்தல்காரர்களுக்கு விற்பனை செய்துள்ளதாக குறித்த அதிகாரிகளுக்கு எதிராக குற்றஞ்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
Comments are closed.