நவாலி தேவாலயம் மீது குண்டு வீசி 25 ஆண்டுகள்!
1995 ஜூலையில் யாழ்ப்பாணம், நவாலியிலுள்ள சென். பீற்றர் மற்றும் போல் தேவாலயம், போரிலிருந்து பாதுகாப்பும் அடைக்கலமும் தேடி இடம்பெயர்ந்து வந்த தமிழ் மக்களால் நிரம்பியிருந்தது. இடம்பெயர்ந்து வந்த மக்களுக்கு உணவு மற்றும் தற்காலிக கழிப்பறைகளை அமைத்தல் உள்ளிட்ட உதவிகளை தேவாலயத்தின் இளைஞர் கழகம் உள்ளிட்ட நவாலியிலுள்ள மக்கள் வழங்கிக் கொண்டிருந்தனர்.
சம்பவத்தை நேரில் கண்டவர்கள் மற்றும் உயிர்தப்பியவர்களின் கூற்றுகளின்படி, ஜூலை 9ஆம் திகதி, பிற்பகல் 4.30 – 5 மணியளவில் தேவாலயத்தைச் சூழவும், ஸ்ரீ கதிர்காம முருகன் இந்து ஆலயம் மற்றும் அதன் அயற்புறங்களிலும் ‘புக்காரா’ எனும் விமானத்திலிருந்து 8-13 குண்டுகள் வீசப்பட்டன. இதில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதுடன் மேலும் பலர் காயமடைந்தனர். கொல்லப்பட்டவர்களுள் 4 வயது மற்றும் 68 வயதுடைய இருவரும் அடங்குவர். இதன்போது இடம்பெயர்ந்த மக்களுக்காகவும் தொண்டர்களான இளைஞர்களுக்காகவும் சமையலில் ஈடுபட்டிருந்த அப்பகுதி கிராம சேவையாளரும் கொல்லப்பட்டவர்களுள் அடங்குவார். கொல்லப்பட்டவர்களுள் அண்ணளவாக 45 பேர் நவாலி பகுதியைச் சேர்ந்தவர்கள். ஆனால், அதிகமானோர் அடைக்கலம் தேடி இடம்பெயர்ந்து நவாலிக்கு வருகை தந்தவர்களாவர். அன்றைய தினம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் கொல்லப்பட்டனர். ஒரு சிறுவனின் உடல் கண்டுபிடிக்கப்படவேயில்லை. தான் வீடு சென்றுபார்த்தபோது தனது 18 வயதான மகளின் சடலத்தின் கீழ் தனது உறவினரின் குழந்தை ஒன்றை உயிருடன் கண்டெடுத்தது எப்படி என்பதை பெண்ணொருவர் விபரித்தார். சில சடலங்கள் சில நாட்களின் பின்னரே மீட்கப்பட்டன. தலைகளற்ற சடலங்கள் நிலமெங்கும் பரந்து கிடந்தன. சில உடல்களின் தலைகள் மரத்தின் மீதிருந்து கண்டெடுக்கப்பட்டன. பல உடல்கள் அடையாளம் காணமுடியாதபடி கருகியிருந்தன. அன்றைய தினம் மாலை தான் யாழ்ப்பாணத்திலிருந்து நவாலி நோக்கி சைக்கிளில் பயணித்தபோது, சடலங்களும் அவற்றின் பாகங்களும் வீதியெங்கும் சிதறிக்கிடந்ததாக கத்தோலிக்க பாதிரியார் ஒருவர் விபரித்தார்.
ஆரம்பத்தில் யாழ்ப்பாண கத்தோலிக்க பேராயர் மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (ஐ.சி.ஆர்.சி) ஆகியோரை மேற்கோள்காட்டி இக் கண்டுத்தாக்குதலில் 65 பேர் கொல்லப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. எனினும், பின்னர் இந்த எண்ணிக்கை 117 ஆக அதிகரித்தது.[i] எப்படியிருப்பினும் கிராமவாசிகள் 147, 165 மற்றும் 217 என வேறுபட்ட எண்ணிக்கைகளை என்னிடம் கூறினர். சிலர் 300 பேர் வரை கொல்லப்பட்டனர் என்றும் கூறினர். இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இடம்பெயர்ந்தவர்கள் என்பதாலும் காயமடைந்த பலர் பின்னர் உயிரிழந்ததாலும் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களின் சரியான எண்ணிக்கையை உறுதிப்படுத்துவது கடினமாகும். எனது நண்பர் ஒருவரின் மாமியும் காயங்கள் காரணமாக பின்னர் உயிரிழந்தவர்களுள் அடங்குவார். மறுநாளும் (ஜூலை 10) அதேபோன்று அதிகமான குண்டுகள் வீசப்பட்டதாகவும் அதில் ஆகக் குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டதாகவும் பலர் என்னிடம் கூறினர். குறித்த குண்டுகள் இலங்கை விமானப் படையினாலேயே வீசப்பட்டதாக நவாலியில் நான் சந்தித்த எல்லா மக்களும் என்னிடம் உறுதிபடத் தெரிவித்தனர். வழங்கப்பட்ட மரணச் சான்றிதழ்களில் “வான்வழி குண்டுவீச்சினால் ஏற்பட்ட காயங்களினால் ஏற்பட்ட உயிரிழப்பு” என காரணம் குறிப்பிடப்பட்டுள்ளதன் மூலம் இது மீளவும் உறுதிப்படுத்தப்பட்டது. 1995 காலப்பகுதியில் எந்தவொரு வேறு ஆயுதக் குழுவும் வான்வழி குண்டுத்தாக்குதல் நடாத்தும் விமானங்களைக் கொண்டிருக்கவில்லை.
உயிரிழந்த தமது குடும்ப உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் இறுதிச் சடங்குகளை உரிய முறையில் நடத்தவோ அல்லது அவர்களை உரிய முறையில் அடக்கம் செய்யவோ முடியவில்லை என பலரும் இன்றுவரை துயரப்படுகின்றனர். சவப்பெட்டிகளைப் பெற்றுக் கொள்வது சிரமமாகவிருந்ததுடன், பல சடலங்கள் ட்ரக்டர் வண்டிகளில் யாழ்ப்பாணத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுவிட்டன. சடலங்களை ட்ரக்டர்களில் ஏற்றிக் கொண்டிருந்த நபர் ஒருவருக்கு அவற்றுள் தனது சொந்த மகனின் சடலத்தையும் காண நேர்ந்தது. அத்துடன், காயமடைந்தவர்களை யாழ்ப்பாண வைத்தியசாலைக்கு மாற்றுவதும் கடினமானதாகவிருந்தது. காயமடைந்த பெண் ஒருவர், தான் மாதக் கணக்கில் வைத்தியசாலையிலும் வெளியிலும் தங்கியிருந்ததாகவும் ஆனால் இன்று வரை சரியாக நடக்க முடியவில்லை என்றும் என்னிடம் கூறினார். அவரது மகளும் மகனும் கூட கொல்லப்பட்டனர். மற்றொருவர், குண்டுகள் தன்னைச் சூழ வீழ்ந்தபோது வீதியில் தட்டையாக வீழ்ந்துகிடந்து உயிர் தப்பினார். சில நிமிடங்களில் அவர் எழுந்து நின்றபோது இரத்தத்தால் நனைந்திருந்தார். யாரோ ஒருவரது இரத்தம் தோய்ந்த கை அவர் மீது வந்து வீழ்ந்தது. எந்தவித உடல் காயங்களுமின்றி அவர் தப்பியபோதிலும் அதிர்ச்சி மற்றும் மன அழுத்தம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்தக் குண்டுத் தாக்குதலானது தேவாலய கட்டடம் (கூரை உட்பட), இந்து ஆலயம் மற்றும் 30 வீடுகள் அடங்கலாக பல கட்டடங்களுக்கும் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. கத்தோலிக்க தேவாலயம், இந்துக் கோவில் மற்றும் முழுமையாக அழிக்கப்பட்ட, சேதமடைந்த பல வீடுகள் இன்று மீள நிர்மாணிக்கப்பட்டுள்ளன. எனினும் நான் அவதானித்த மூன்று வீடுகளில் இன்னமும் இடிபாடுகளே எஞ்சியுள்ளன. மற்றொரு வீட்டின் சுவர் ஊடாக தெரியும் துளைகளை அவதானிக்க முடிந்தது. இரும்புக் கதவொன்று பல நூறு மீட்டர்கள் தூரம் தூக்கி வீசப்படுமளவுக்கு குண்டுகளின் தாக்கம் மிகப் பெரியதாகும்.
குண்டுத் தாக்குதல் நடந்த சில வாரங்களுக்கு பிறகு நவாலியில் குண்டு வீசிய விமானப் படை விமானத்தை தாம் சுட்டுவீழ்த்தியதாக தமிழீழ விடுதலைப் புலிகள் உரிமை கோரியதாகவும் குறித்த விமானத்தின் பாகங்கள் எனக் கூறி உலோக துண்டுகளை காட்சிக்கு வைத்திருந்ததாகவும் பல கிராமவாசிகள் என்னிடம் தெரிவித்தனர்.
கத்தோலிக்க ஆயர் மற்றும் ஐ.சி.ஆர்.சியின் அறிக்கைகள்
உயிரிழப்புகள், காயங்கள், கட்டடங்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் என்பன நவாலியில் இடம்பெற்ற வான்வழித்தாக்குதலினாலேயே ஏற்பட்டன என்பதை யாழ்ப்பாண கத்தோலிக்க ஆயர் மற்றும் ஐ.சி.ஆர்.சி. அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு ஊடகங்கள் பிரசுரித்த தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.[ii] பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு அமையவே இடம்பெயர்ந்த மக்கள் தேவாலயங்கள், கோயில்களில் தஞ்சமடைந்ததாக ஆயர் கூறியதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே ஊடக அறிக்கையில், தாக்குதலுக்கு மறுநாள் அவ்வனர்த்தம் பற்றி விபரித்து ஜனாதிபதிக்கு ஆயர் கடிதம் எழுதியதாகவும் அதில் “சிவிலியன் இலக்குகளான கோவில்கள், தேவாலயங்கள், பாடசாலைகள் மற்றும் வைத்தியசாலைகள் மீது குண்டு வீசுதல், தாழப்பறந்து தாக்குதல், ஆர்ட்லறி ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்துவதிலிருந்து தவிர்ந்திருக்குமாறு தயவு செய்து உங்கள் படையினருக்கு அறிவுறுத்துங்கள்” என வேண்டிக் கொண்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் 1995 ஆகஸ்ட் 7 ஆம் திகதி மற்றுமொரு கடிதத்தை எழுதியதாகவும் அதில் “நான் சம்பவம் நடந்த இடத்துக்கு நேரில் விஜயம் செய்து அவதானித்தேன். தேவாலயமும் அதன் கூரையும் சேதமடைந்திருந்தன. சகல கதவுகளும் யன்னல்களும் கழற்றி வீசப்பட்டுக் கிடந்ததுடன் தரை முழுவதும் உடைந்த கண்ணாடித்துண்டுகளால் நிறைந்து காணப்பட்டது. நிலத்தில் இரத்தக்கறைகளை நான் கண்டதுடன் இரத்தம் தோய்ந்த ஆடைகளும் அங்கு கிடந்தன” எனக் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் அதே ஊடக அறிக்கை கூறுகிறது.
பரந்த பார்வை – வழிபாட்டுத் தலங்களில் படுகொலைகள், நினைவுச் சின்னங்கள், இழப்பீடு மற்றும் நீதி
இலங்கையில் வழிபாட்டுத்தலங்களில் பல சிவிலியன் படுகொலைகள் இடம்பெற்றுள்ளதுடன் ஒவ்வொரு சம்பவத்திற்குமான அரசாங்கத்தின் பதில்கள், குற்றவாளிகள் யார் என்பதைப் பொறுத்து குறிப்பிடத்தக்க வகையில் வேறுபட்டனவாக அமைந்துள்ளன. உதாரணமாக, காத்தான்குடி பள்ளிவாசல், அநுராதபுரம் (ஸ்ரீ மகா போதி) மற்றும் கண்டி (தலதா மாளிகை) ஆகிய இரு புனித மற்றும் பிரபல பௌத்த விகாரைகள் மீதான விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள், அதேபோன்று ஐ.எஸ்.ஐ.எஸ். இனால் கவரப்பட்ட முஸ்லிம் தீவிரவாதிகளினால் நடாத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் என்பன பிரதான தேசிய ஊடகங்களிலும் அரசாங்கத்திடமிருந்தும் குறிப்பிடத்தக்க கவனத்தைப் பெற்றிருந்தன. ஆனால் நவாலி, குருநகர் மற்றும் அல்லைப்பிட்டி போன்ற இடங்களில் பாரிய சிவிலியன் உயிரிழப்புகள் மற்றும் காயங்களுக்கு இட்டுச் சென்ற யாழ்ப்பாண தேவாலய குண்டுத் தாக்குதல்கள் மிகச் சிறிய அளவிலாவது தேசிய ஊடக கவனயீர்ப்பையோ அல்லது அரசாங்கத்தின் ஒப்புதல்களையோ பெறவில்லை. ஏனெனில், இந்தக் குற்றங்களின் பின்னணியில் இலங்கை இராணுவம் இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டதனாலும் இவற்றில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்கள் என்பதாலும் அவ்வாறிருக்கலாம்.
குற்றவியல் பொறுப்புக்கூறல் மற்றும் நீதியைப் பொறுத்தவரை கண்டி தலதா மாளிகை குண்டுத் தாக்குதலுக்காக ஆகக்குறைந்தது மூவர் மீது வழக்குத் தொடரப்பட்டதாக நான் கேள்விப்பட்டிருக்கிறேன். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் ஒரு சில மாதங்களிலேயே சர்வ கட்சி நாடாளுமன்ற குழுவினாலும் ஜனாதிபதி ஆணைக்குழுவினாலும் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதுடன் சந்தேக நபர்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் உரிய நடைமுறைகள் குறித்த கவலைகள் உள்ளபோதிலும் நூற்றுக் கணக்கானோர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். ஆனால், நவாலியில் நான் சந்தித்த மக்களின் கருத்துகளுக்கமைய கடந்த 25 வருடங்களில் நவாலி படுகொலைகள் தொடர்பில் எந்தவித விசாரணைகளும் இடம்பெறவில்லை. அத்துடன், ஒருவர் கூட கைது செய்யப்படவோ வழக்குத் தொடரப்படவோ குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்படவோ இல்லை. எனது அறிவுக்குட்பட்ட வகையில், வடக்கில் தேவாலயங்கள் மீது நடாத்தப்பட்ட பிற குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் பல தசாப்தங்கள் கடந்தும் எவரும் கைது செய்யப்படவோ வழக்குத் தொடரப்படவோ குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்படவோ இல்லை.
இழப்பீடுகளைப் பொறுத்தவரையில் குடும்ப உறுப்பினர் ஒருவர் உயிரிழந்தமைக்காக 1997 இல் தனக்கு 15,000 ரூபா நஷ்டயீடு கிடைத்ததாக நவாலியிலுள்ள வயதான நபர் ஒருவர் என்னிடம் தெரிவித்தார். வடக்கிலுள்ள ஏனைய உயிர்தப்பிய தமிழர்களும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரும் தமக்கு எந்தவித இழப்பீடுகளும் கிடைக்கவில்லை என என்னிடம் குறிப்பிட்டனர். ஆனால், உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலைப் பொறுத்தவரை உயிர்தப்பியவர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கும் அரசாங்கத்தினாலும் தேவாலயத்தின் தலைமையிலும் மருத்துவ பராமரிப்பு, உளவியல் ரீதியான பராமரிப்பு, கல்வி, வீடமைப்பு மற்றும் கட்டடங்களை புனரமைத்தல் உள்ளிட்ட குறிப்பிடத்தக்க தொகை இழப்பீடாக வழங்கப்பட்டது. வேறுபட்ட சூழ்நிலைகள் மற்றும் கால இடைவெளி இருந்தபோதிலும் நவாலி படுகொலையிலும் ஏனைய போர்கால படுகொலைகளிலும் உயிர்தப்பியவர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கும் இதே மாதிரியான இழப்பீடு குறித்து கவனம் செலுத்த முடியும்.
நவாலி படுகொலை நடந்து 25 வருடங்களுக்குப் பிறகான எனது விஜயத்தின் போது சிலர் அச்சம் மற்றும் அதிர்ச்சி காரணமாக அது தொடர்பில் என்னுடன் பேச விரும்பவில்லை. சிலர் தங்களது பெயரைக் குறிப்பிட வேண்டாம் என என்னை எச்சரித்தனர். வேறு சிலர் பேசும்போது அழுதனர். நவாலி குண்டுத் தாக்குதலில் உயிர் தப்பிய பெண் ஒருவர், தனது அதிகமான சிங்கள நண்பர்கள் இந்த சம்பவம் தொடர்பான தகவல்களை பிறருடன் பகிர வேண்டாம் என்றும் அதனை மறந்துவிட்டு முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்றும் தனக்கு ஆலோசனை வழங்கியதாக என்னிடம் தெரிவித்தார். ஆனால், அவ்வாறு மறந்துவிடுவது சாத்தியமற்றது என அப்பெண் என்னிடம் கூறினார். நான் சந்தித்துப் பேசிய குண்டுத் தாக்குதலில் உயிர்த்தப்பிய மற்றும் நேரடியாக அனுபவித்த அனைவரும் அதே உணர்வலைகளையே என்னுடன் பகிர்ந்து கொண்டனர்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நினைவுச்சின்னங்கள், கட்டுவாபிட்டி (நீர்கொழும்பு) மற்றும் கொச்சிக்கடை (கொழும்பு) ஆகிய இடங்களில் ஓரிரு மாதங்களிலேயே நிறுவப்பட்டதுடன், உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் முதலாவது வருட பூர்த்தியை நினைவுகூருவதற்கான விரிவான ஏற்பாடுகள் அரசாங்கத்தின் வெளிப்படையான ஆதரவுடன் கொழும்பு மறைமாவட்ட பேராயரால் அறிவிக்கப்பட்டன. கொவிட்-19 பரவல் காரணமாக இவை மட்டுப்படுத்தப்பட்டிருந்த போதிலும், முதல் வருட நினைவு நிகழ்வுகள் தேசிய அளவில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டன. கொழும்பு பேராயரின் நீதிக்கான கோரிக்கைக்கு தேசிய ஊடகங்களில் முக்கிய இடம் வழங்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிர்தப்பியவர்களின் அதிர்ச்சியை மதிப்பதற்கும் ஏற்றுக் கொள்வதற்கும் துன்பத்திற்கு கண்ணியமளித்தல், நீதி மற்றும் இழப்பீடு என்பனவற்றுக்கும் இந்த பதில் முக்கியமானதாகும். இது பாதிக்கப்பட்டவர்களும் உயிர்தப்பியவர்களும் எப்படி நடாத்தப்பட வேண்டும், எவ்வாறு நடாத்தப்பட வேண்டும் என்பதற்கும் வடக்கு மற்றும் கிழக்கில் அத்தகைய ஆதரவைப் பெறாதவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதை சிந்திப்பதற்குமான ஒரு நினைவூட்டலாகும். இலங்கை விமானப் படையினரே குற்றவாளிகள் எனக் கூறப்படும் சூழலில், நவாலி தேவாலய தாக்குதலில் உயிர்தப்பியவர்களாலும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினராலும் மற்றும் வடக்கிலுள்ள தமிழ் தேவாலயங்களின் தலைவர்களாலும் தேசிய ஊடகங்கள், அரசியல்வாதிகள் மற்றும் மதத் தலைவர்களின் குறிப்பிடத்தக்க கவனத்தைப் பெற முடியாமல் போனது.
இந்த வெற்றிடத்தில் நவாலியில் பாதிக்கப்பட்டவர்களுக்காக அச்சமூகம் எளிமையான நினைவுச்சின்னம் ஒன்றை நிர்மாணித்துள்ளனர். உள்ளுர் மக்களின் கருத்துப்படி வருடாந்தம் நினைவு நிகழ்வுகள் அச்சமூகத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்படுகின்றன. கடந்த வார இறுதியில் நான் அங்கு விஜயம் செய்தபோது கிராமத்தின் இளைஞர்கள் நினைவுச்சின்னத்தை சுத்தம் செய்து கொண்டிருந்ததுடன் சம்பந்தப்பட்ட சில கத்தோலிக்க பாதிரியார்களும் சமூக தலைவர்களும் 25 ஆவது வருட நினைவு நிகழ்வு தொடர்பில் கலந்துரையாடிக் கொண்டிருந்தனர். 25 வருடங்கள் கடந்தும் கூட அந்த சோகத்தின் வலி, உயிர்தப்பியவர்கள், பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் நவாலி சமூகத்தின் மனதிலும் இதயங்களிலும் புதியதாகவே எஞ்சிநிற்பதுடன் அந்தப் படுகொலை எப்போதும் நினைவிலிருக்கும்.
உயிர்தப்பியவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி, இழப்பீடு, நினைவுகூருதல் ஆகியவற்றின் உரிமைகளைத் தொடர கைகோர்ப்பது எல்லா இலங்கையர்களுக்கும் இன்னமும் சவாலாகவே உள்ளது. ஒரு சிறிய அளவில், யாழ்ப்பாண மறைமாவட்டத்தில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்களில் படுகொலைகளின் வரலாறு மற்றும் கடந்த ஆண்டு கொழும்பு மறைமாவட்டத்தின் இரண்டு கத்தோலிக்க தேவாலயங்களில் நடந்த உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு ஆகியவை கத்தோலிக்க திருச்சபைக்கு இந்தப் போராட்டத்தில் கைகோர்க்க மற்றொரு வாய்ப்பை வழங்குகிறது. பாதிக்கப்பட்ட சிலருக்கு முன்னுரிமை வழங்குவதும் ஏனையோரை ஓரங்கட்டுவதும் நல்லிணக்கத்தையும் குணப்படுத்தலையும் மேலும் தூரமாக்கவே வழிவகுக்கும்.
Comments are closed.