தேரரின் கருத்து சைவத் தமிழர்களின் மனதை புண்படுத்துகின்றது – அகில இலங்கை சைவ மகா சபை அறிக்கை
திருக்கோணேச்சரம், நல்லூர் தொடர்பான மேதானந்த தேரருடைய கருத்துக்கள் சைவத் தமிழர்களின் மனதை புண்படுத்துகின்றதாக அகில இலங்கை சைவ மகா சபை கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையின் பிரகாரம்
அன்மைய நாட்களாக கிழக்கு தொல்லியல் பிரதேசங்களை பாதுகாப்பதற்கான ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர் மேதானந்த தேரர் தமிழர்களுடைய இந்த நாட்டினுடைய பூர்வீக புராதன சமயமான சைவத்தினுடைய ஆதி வழிபாட்டு இடமும் பாடல் பெற்ற தலமும் மாமன்னன் இராவணனுடைய காலத்திலேயே இருந்த ஈச்சரமுமான திருக்கோணேச்சரத்தை விகாரை அமைந்திருந்த இடம் என குறிப்பிட்டதும் தொடர்ந்து நல்லூர் முருகன் ஆலயம் தொடர்பாக குறிப்பிட்டிருப்பதும் சைவத் தமிழர்களை மிகவும் மனவேதனைக்கு உள்ளாகி உள்ளது.
இராவண் வெட்டு போன்ற மிகப் பண்டைய அடையாளங்களையும் பின்னர் குளக்கோட்ட மன்னனுடைய திருப்பணி செய்திகளையும் கொண்டதும் 1500 ஆண்டுகளிற்கு முன்னரே தாய் தமிழகத்திலேயே பெரிதும் அறியப்பட்ட போற்றப்பட்ட திருக்கோவிலாக இருந்தமையால் அங்கிருந்தே திருஞான சம்பந்த நாயனாரால் பாடப்பெற்ற தலமாக திருக்கோணேச்சம் விளங்குகின்றது.
இந்த நாட்டில் குடியேறி சிங்கள இனத்தை தோற்றுவித்த முன்னோடியான விஜயன் வருகையின் போதே திருக்கோணேச்சரம் உள்ளிட்ட பஞ்ச ஈச்சரங்கள் இருந்ததாகவும் அங்கு சென்று விஜயன் வழிபட்டதாகவும் மகாவம்சமே ஒத்து கொள்கின்றது.
மூத்த சிவனின் மகனாகிய தேவ நம்பிய தீசன் கி.மு 243 இல் பெளத்த மதத்திற்கு மதம் மாறும் வரை இந்த இலங்கை திருநாடு முழுவதும் சைவ சமயமே பின்பற்றபட்டது என்கின்ற வரலாற்று உண்மையை பெளத்த தேரர் மனதில்கொள்வது நல்லது.
திருமூலரால் சிவபூமி என்று அழைக்கப்பட்ட இந்த நாட்டில் ஒரு காலத்தில் சிவ வழிபாடு மட்டுமே எங்கும் பரந்து வியாபித்து இருந்தாலும் இன்று காலங்காலமாக ஏற்பட்ட பல்வேறு மத மாற்றங்கள் அந்நியர் வருகைகளால் பல மதங்கள் தோற்றுவிக்கப்பட்டது. சைவத்தின் பல புராதன சிவாலயங்கள் அழிக்கப்பட்டும் மாற்றியமைக்கபட்டு சைவத்தமிழர்களினிடைய வாழ்விடங்கள் பறிக்கப்பட்ட போதிலும் அவற்றை மீள உரிமை கோரமல் மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்காமல் இருக்கும் ஒரு மக்கள் குழுமத்தை மீண்டும் மீண்டும் அனைவரும் சீண்டிப் பார்ப்பது எம் மக்களின் மனங்களில் ஆறத் துயரை தோற்றுவிக்கின்றது.
அனால் இவ்வாறான கருத்துக்களை தொடர்ந்து தெரிவிப்பதை மேதானந்த தேரர் நிறுத்திக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுகொள்வதுடன் உண்மையையும் மத நல்லிணக்கத்தையும் நேசிக்கும் அனைவரும் சைவத்தமிழர்களாகிய நாட்டின் பூர்வீக குடிகளின் வழிபாட்டு தொன்மங்களை பாதுகாக்க உரித்து குரல் கொடுக்க வேண்டும் எனவும் அன்புரிமையுடன் அகில இலங்கை சைவ மகா சபை கேட்டு நிற்கின்றது, என குறிப்பிடப்பட்டுள்ளது.
Comments are closed.