குற்றம் சாட்டப்பட்ட அதிபர் இன்னும் உயர் பாடசாலையில் பணியில்
தரம் ஒன்றுக்கு மாணவர்களைச் சேர்ப்பது தொடர்பிலான முறைக்கேடு குறித்த குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள, கல்வி குறித்த ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர், கொழும்பின் உயர் மகளிர் பாடசாலையின் மாணவர்களை சேர்ப்பது தொடர்பிலான நேர்காணல் குழுவில் இருந்து இதுவரை நீக்கப்படவில்லை என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
மாணவர்களை அனுமதிக்கையில், போலி சான்றிதழ்களை ஏற்றுக்கொள்வது, தவறாக புள்ளிகளை வழங்குவது உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் குறித்து குறிப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள ஆணைக்குழு, இதுத் தொடர்பில் ஆராயுமாறு கல்வி செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக முன்னணி ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
பொது சேவை ஆணைக்குழுவால், குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாகா வித்யாலயத்தின் அதிபர், சந்தமாலி அவிருப்பல, 2021ஆம் ஆண்டு முதலாம் தரத்திற்கு மாணவர்களைச் சேர்ப்பதற்கான நேர்காணல் குழுவில் பணியாற்றி வருகின்ற நிலையில், அவரை பதவியில் இருந்து இடைநிறுத்தி விசாரணைகளை நடத்துமாறு, இலங்கை ஆசிரியர் சங்கம், பொதுச் சேவை ஆணைக்குழுவின், கல்விச் சேவைக் குழுவின் செயலாளரை கேட்டுள்ளது.
இதுத் தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளர் அவதானம் செலுத்தியுள்ளதாக குறிப்பிட்டு, கடிதத்தின் பிரதி ஒன்று, பொது சேவை ஆணைக்குழுவின் செயலாளர் ஊடாக தமக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
“இதற்கமைய, அதிபருக்கு எதிராக மாணவர்களை அனுமதிப்பது குறித்து ஒழுக்காற்று விசாரணை நடத்த வேண்டுமாயின், அவர் நேர்காணல் குழுவிற்கு தலைமை தாங்கலாமா இல்லையா என்பதையும், அவ்வாறு ஒரு நேர்காணல் குழுவின் தலைவரை நீக்கி மற்றொரு நபரை குழுவின் தலைவராக நியமிப்பது சாத்தியமா என்பது தொடர்பிலும் ஆலோசனைகள் கோரப்பட்டுள்ளன.”
பக்கச்சார்பற்ற விசாரணை
விசாகா வித்யாலய அதிபர் தொடர்பிலான விசாரணையை தாமதமின்றி பக்கச்சார்பற்ற முறையில் மேற்கொள்வதற்கு தேவையான சூழலை ஏற்படுத்துமாறு கல்விச் செயலாளரிடம் இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள நிலையில், அதிபர் அந்த பாடசாலையில் தங்கியிருப்பது தார்மீக ரீதியாகவும் சட்டரீதியாகவும் தவறானது என, இன்றைய தினம் வெளியிட்ட அறிக்கையில், இலங்கை ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதுபோன்ற சம்பவங்கள் இதற்கு முன்னர் இடம்பெற்ற சந்தர்ப்பங்களில் குற்றம் சாட்டப்பட்ட அதிபர்கள் பாடசாலைகளில் இருந்து நீக்கப்பட்டனர் என்பதை நிரூபிக்க கல்வி அமைச்சுக்கு போதுமான எடுத்துக்காட்டுகள் காணப்படுவதாக ஆசிரியர் சங்கத் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.
விசாகா வித்யாலயத்தின் அதிபரை தற்காலிகமாக பணிநீக்க வேண்டும் எனவும், அவருக்கு எதிரான ஒழுக்காற்று விசாரணைகள் சுயாதீனமாக மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் இலங்கை ஆசிரியர் சங்கம் மேலும் வலியுறுத்தியுள்ளது.
அதிபருக்கு எதிரான குற்றச்சாட்டுகள்
2019 ஆம் ஆண்டு மாணவர்களை சேர்ப்பதற்காக, போலி ஆவணங்களை பெற்றமை தொடர்பிலான குற்றப்பத்திரிகையில், கல்விச் செயலாளரின் சுற்றறிக்கை எண் 24/2018ஐ மீறி புள்ளிகள் வழங்குவது உட்பட பல குற்றச்சாட்டுகள், கொழும்பு விசாகா வித்யாலயத்தின் அதிபர் மீது சுமத்தப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் கடந்த மாதம் தெரிவித்திருந்தது.
குற்றப்பத்திரிகையின் 15ஆவது குற்றமாக, அரச சேவைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியதன் ஊடாக, இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஸ்தாபனக் குறியீட்டின் இரண்டாவது பகுதியின், XLVIII அத்தியாயத்தின் முதல் அட்டவணையின் 10ஆவது பிரிவிற்கு அமைய குற்றமிழைத்துள்ளதாக, இலங்கை ஆசிரியர் சங்கம் கடந்த மாதம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Comments are closed.