சுமந்திரனை தோற்கடிப்பது வரலாற்று தவறு – புத்திஜீவிகள் எச்சரிக்கை
சுமந்திரனை தமிழ் அரசியற் பரப்பிலிருந்து முற்றாக வெளியேற்ற தமிழ் தேசியக் கூட் டமைப்புக்குள்ளேயும் வெளியேயும் பல்வேறு தரப்பிலிருந்தும் பகீரத பிரயத்தனம் நிகழும் இவ்வேளை அவரைக் காப்பாற்ற சில புத்திஜீவிகளும் முற்போக்கு சிந்தனையுள்ள இளைஞர்களும் சமூக ஊடகங்களிலும் இணைய தளங்களிலும் சுமந்திரனுக்கு ஆதரவான கருத்துக்களை தெரிவித்து வருகிறன்றனர் .அந்தவகையில் பிரபல தமிழ் இலக்கிய மற்றும் ஆன்மீக பேச்சாளர்’கம்ப வாரிதி’ ஜெயராஜ் உகரம் இணையதள பத்திரிகையில் வரைந்த அரசியல் கட்டுரை பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது .
அதில் அவர் போர் முடிந்த காலத்திலிருந்து எம் இனம் நோக்கி நீட்டப்பட்ட,
உலக நாடுகளின் துணை க்கரங்களைபற்றி,இயங்கிக் கொண்டிருக்கும் ஒரே மனிதனாய், இன்றுவரை செயற்பட்டு வருகிறார் சுமந்திரன். அவர்களோடு சமதைப்பட்டு உட்கார்ந்து பேசும் சட்ட அறிவு, சமயோசிதம், விட்டுக் கொடுத்தல், தந்திரம் என,அனைத்துத் தகுதிகளும் அவரிடம் நிறைந்து கிடக்கின்றன.
உலக நாடுகள் என்றில்லை, நம் நாட்டின் பேரினவாதத் தலைவர்கள் கூட, தமிழர் நலம் பற்றிப் பேசுவதானால் சுமந்திரனோடுதான் பேசி வருகிறார்கள்.இதுதான் யதார்த்தநிலை. உண்மையைச் சொல்லப்போனால்,நமது மற்றைய தலைவர்களெல்லாம் வெறும் போடுதடிகள் போலத்தான்.
உலகநாடுகளிடமும் பேரினத்தலைவர்களிடமும், சுமந்திரனுக்குச் சமமான செல்வாக்கு எமக்குமுண்டு.’‘சுமந்திரனுக்கு இருக்கக்கூடிய சட்டஅறிவு, ஆளுமை எமக்குமுண்டு’ என்று,துணிந்து பேச இன்றைய தமிழ்த்தலைவர்கள் எவர்க்கேனும் தகுதி உண்டா?சிலர் வீம்புக்காக ‘உண்டு’ என்பார்கள். அது உண்மையானால், ஏன் இதுவரை மேற்சொன்னவர்களில் ஒருவரும் உங்களைத் திரும்பியும் பார்க்கவில்லை,
‘சரக்கிருந்தால் மிடுக்கு இருக்கும்’ என்பது பழமொழி.
சுமந்திரனை ஒழிக்க நினைக்கும் தலைவர்களிடம் சரக்குமில்லை மிடுக்குமில்லை.
ஆசையும் சுயநலமும் மட்டும்தான் அளவுக்கு அதிகமாய் இருக்கிறது.
அதைத் தகுதியாய் வைத்து மக்களைத் திசைதிருப்ப முயல்கிறார்கள்.
‘யதார்த்தவாதி வெகுசன விரோதி’ என்பார்கள், எவ்வளவு பெரிய உண்மை.
சுமந்திரனின் யதார்த்தத்தை வெகுசன விரோதமாக்கும் இத்தலைவர்தனைக் காண,
அருவருப்பாக இருக்கிறது என்று நீளும் அந்தக்கட்டுரை பின்வரும் எச்சரிக்கையோடு நிறைவு பெறுகிறது . இன விடுதலைப்போர் நடந்த காலத்தில், பிரபாகரனுடைய இருப்பு எவ்வளவு முக்கியமாய் இருந்ததோ,இன்றைய அரசியல் சூழ்நிலையில் சுமந்திரனது இருப்பும், இனஒற்றுமையும்,அந்தளவு முக்கியத்துவம் பெறுகிறது.
இந்த உண்மையை நிராகரிப்பவர்களே இனத் துரோகிகளாம்.
மாற்றம் வராவிட்டால் – துலையப்போகிறது நம் இனம்.
கம்பவாரிதியின் இந்த கருத்தையே பல கல்விமான்களும் புத்திஜீவிகளும் பிரதி பிரதிபலிப்பதாக களத்திலிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன .
கம்பவாரிதியின் கருத்தையுடைய முழுமையான கட்டுரை :
துலையப்போகிறது நம் இனம்! – கம்பவாரிதி இலங்கை.ஜெயராஜ்
உலகம் இயற்றிய கடவுளை, ‘பரந்து கெடுக!’ எனத் திட்டினான் வள்ளுவன். அதுபோலத்தான் நம் ஈழத் தமிழனத்தையும் திட்டத் தோன்றுகிறது. மண்ணுக்காகத் தம்மைத் தியாகம் செய்த எத்தனையோ இளைஞர்களின், இரத்தத்தினதும், தசையினதும் ஈரலிப்பு இன்னும் காயாத நம் மண்ணின் மேல் நின்றுகொண்டு, கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் பதவி ஆசையும், சுயநலமும் பிடித்து, தமது தேவை நிறைவேற்றுவதற்காய் உரிமை, உணர்ச்சி எனப் பொய்மைபேசி, மக்களைப் பாதாளம் நோக்கி இழுத்துச் செல்லும் தலைவர்கள் ஒருபுறம்.
தமக்கு நடக்கும் துரோகத்தின் வீச்சைக் கூடத் தெரிந்துகொள்ளாமல், பலிபீடத்தில் தாமாய்க் கழுத்தைக் கொண்டுபோய் வைக்கும் ஆடுகள் போல, அந்த சுயநலத் தலைவர்களின் ‘உசுப்பேத்தலுக்கு’ ஆட்பட்டு, ‘உருவாடி’க் கொண்டிருக்கும் மக்கள் இன்னொரு புறமுமாக, தேர்தலையொட்டி அசிங்கங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.
தமது வீழ்ச்சியைத் தாமே கொண்டாடிக் கொண்டிருக்கும் நம்மக்களையும், தம் சொந்த மக்களையே ஏமாற்றிப் பிழைக்க நினைக்கும் தலைவர்களையும் காண, சகிக்கமுடியாத எரிச்சல் உண்டாகிறது. இப்படியுமா ஒரு இனம் முட்டாள்த் தனத்தோடு இயங்கும்? அருவருப்பாக இருக்கிறது. மாற்றம் வராவிட்டால் – துலையப்போகிறது நம் இனம்.
‘என்ன? ஒன்றுமே சொல்லாமல் இந்தக் கொந்தளிப்பு’ என்கிறீர்களா. கொந்தளிக்காமல் என்ன செய்வதாம்? குற்றவாளிகளிடமே நீதி கோரவேண்டிய அவலநிலையில் நிற்கிறோம் நாம். மீண்டும் நீட்டாமல் என் கொந்தளிப்புக்கான காரணத்தை இனிச் சொல்லுகிறேன். தேர்தல் நிச்சயிக்கப்பட்டதிலிருந்து நம் சமூகம் குழம்பிக் கிடக்கிறது. நம் தலைவர்களெல்லாம் இப்போது ஒரே ‘பிசி’. எதில் ‘பிசி’ என்கிறீர்களா?-வேறெதில் குழிபறிப்பதில்த்தான். ஒருவருக்கொருவர் குழிபறித்து அவர்கள் செய்யும் கூத்துக்களுக்கு ஓர் அளவேயில்லை. அக்குழிகளில் புதைக்கப்படப்போவது நம் இனநலம் தான் என்பது தெரியாமல், ஆட்டுமந்தை மக்களும் அக்குழிவெட்டும் போட்டியில் அணிசார்ந்து, கைதட்டித் தலைவர்களை ஊக்குவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த இனத்தை அறிவாளிகளின் இனம் என்று சொன்னவனைக் கழுவேற்றவேண்டும். உண்மையை இனங்காணத் தெரியாமல் பொய்மையின் ‘வால் முறுக்கல்களுக்கு’ எடுபட்டு, துள்ளி ஓடத் தயாராகும் நம் இனம் எப்படி உருப்படும்? அருவருப்பாக இருக்கிறது. மாற்றம் வராவிட்டால் – துலையப்போகிறது நம் இனம்.
தேர்தல் மேகம் சூழத் தொடங்கிய நாளிலிருந்து, சுமந்திரனைக் குறிவைத்து மாற்றுக்கட்சியினரும், ஊடகங்கள் சிலவும், இணையவெளியில் சிலருமாக நடத்திவரும் தாக்குதல்கள் ஆச்சரியம் தருகின்றன. போதாக்குறைக்கு கூட்டமைப்புக்குள்ளேயே இருக்கும் சில புல்லுருவிகளும், இவ்விடயத்தில் தம் பங்கிற்கு ஏதேதோ கைங்கரியங்களைச் செய்து வருகின்றனர். ஏதோ ஓர் இனத்துரோகியை அடையாளம் கண்டுவிட்டாற்போல, சுமந்திரனைக் ‘குதறித்’ தள்ளும் இவர்களுடைய கூத்து, இனப்பற்றுள்ள நடுநிலையாளர்கள் மனதில் பெரும் வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெறும் வாயை மென்றுகொண்டிருந்த அவர்களுக்கு, அண்மையில் வெளிவந்த சுமந்திரனின் பேட்டி அவலாயிற்று. ஏதோ சுமந்திரன் இனத்துரோகம் செய்துவிட்டது போலவும், தாமெல்லாம் இனத்திற்காக சிலுவையில் ஏறத் தயாராக இருப்பது போலவும், நம் போலித் தலைவர்கள் விடும் அறிக்கைகள் எரிச்சல் ஊட்டுகின்றன. அந்தப் பேட்டியில் சுமந்திரன் சற்றுத் தடுமாறியது உண்மையேயாம்! ஆனாலும் தன் கருத்துக்கான விளக்கங்களை மக்கள் மன்றில், அவர் ஏலவே தெளிவுறச் சொல்லிவிட்ட பின்பும்.கிடைத்த பந்தை விடாமல் தம் இஷ்டத்திற்கு எறிந்து கொண்டேயிருப்போம் எனும், மாற்றுத் தலைவர்களின் செயலை என்சொல்ல? அவர்களைத்தான் விட்டுத் தள்ளுங்கள்! எறியப்படுவது ‘நோ போல்’ எனத் தெரிந்தும் அதற்கும் கைதட்டிக் கொண்டிருக்கும், மந்தை மடையர்களை என்சொல்ல? அருவருப்பாக இருக்கிறது. மாற்றம் வராவிட்டால் – துலையப்போகிறது நம் இனம்.
‘பிரபாகரன்’, ‘போராளிகள்’ என்ற வார்த்தைகளை வைத்து, நம் தலைவர் சிலர் செய்யும் கீழ்மையான பொய்ப் பிரச்சாரங்களின், உண்மை நிலை புரியாமலே மக்களில் ஒரு பகுதியினர் உணர்ச்சிவயப்படுகிறார்கள். தமது குடும்பம், வாழ்வு, இளமை, உயிர் என அனைத்தையும் மண்ணுக்காக இழந்த, போராளிகளின் பெயரைச் சொல்லத்தானும் இத்தலைவர்களுக்குத் தகுதியிருக்கிறதா? வெட்கம் கெட்டவர்கள்! போர் நடந்து கொண்டிருந்த காலத்தில் போராளிகளின் பக்கம்தானும் திரும்பாதவர்களும், அவர்களின் அழிவுக்கு வழிதேடித் திரிந்தவர்களும், இன்று ‘அண்ணன்’ என்றும் ‘தம்பி’ என்றும் உரிமை கொண்டாடும் அசிங்கத்தை,சகிக்க முடியவில்லை! தம் வாழ்வுக்கு வழிதேடி இச்சகம் பேசும் இவர்தம் இழிவுரைகளுக்கு, கைதட்டல்கள் வேறு.அருவருப்பாக இருக்கிறது. மாற்றம் வராவிட்டால் – துலையப்போகிறது நம் இனம்.
அப்படி, துரோகத்தனமாய் சுமந்திரன் என்னதான் செய்துவிட்டார்? போர் முடிந்த நாள் தொட்டு, நம் இனம் சார்பாக , உலகத் தலைவர்களோடு தொடர்ந்து பேசிவருவது குற்றமா? தமிழினத்தின் தனி அடையாளமாக நின்று, பேரினத் தலைவர்களோடு சமதைப்பட்டுப் பேசி வருவது குற்றமா? தனது சட்டத்திறமையால் ஆட்சியாளர்களை அவ்வப்போது அசைத்து வருவது குற்றமா?எதைக் குற்றம் என்கிறார்கள் இந்தப் புல்லுருவிகள். சுமந்திரனின் இன நன்மை நோக்கிய முன்னெடுப்புக்களில் சில சறுக்கல்கள் நிகழ்ந்தது உண்மையே. எவரிடத்தில்த்தான் சறுக்கல்கள் நிகழாது? சறுக்கல்களே இல்லாதிருக்கவேண்டுமானால், நடக்காமல் இருப்பது ஒன்றேதான் வழியாம். அங்ஙனம் இனத்திற்காக எதுவுமே செய்யாதவர்கள்தான், சுமந்திரனின் சில சறுக்கல்களைப் பூதக்கண்ணாடியால் தாமும் பார்த்து, மக்களுக்கும் காட்டி வித்தை செய்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் தான் நாளைய தலைவர்களாம். அருவருப்பாக இருக்கிறது. மாற்றம் வராவிட்டால் – துலையப்போகிறது நம் இனம்.
போர் முடிந்த காலத்திலிருந்து எம் இனம் நோக்கி நீட்டப்பட்ட, உலக நாடுகளின் துணைக்கரங்களைபற்றி, இயங்கிக் கொண்டிருக்கும் ஒரே மனிதனாய், இன்றுவரை செயற்பட்டு வருகிறார் சுமந்திரன். அவர்களோடு சமதைப்பட்டு உட்கார்ந்து பேசும் சட்ட அறிவு, சமயோசிதம், விட்டுக் கொடுத்தல், தந்திரம் என, அனைத்துத் தகுதிகளும் அவரிடம் நிறைந்து கிடக்கின்றன. உலக நாடுகள் என்றில்லை, நம் நாட்டின் பேரினவாதத் தலைவர்கள் கூட, தமிழர் நலம் பற்றிப் பேசுவதானால் சுமந்திரனோடுதான் பேசி வருகிறார்கள். இதுதான் யதார்த்தநிலை. உண்மையைச் சொல்லப்போனால், நமது மற்றைய தலைவர்களெல்லாம் வெறும் போடுதடிகள் போலத்தான்.
‘உலகநாடுகளிடமும் பேரினத்தலைவர்களிடமும், சுமந்திரனுக்குச் சமமான செல்வாக்கு எமக்குமுண்டு.’ ‘சுமந்திரனுக்கு இருக்கக்கூடிய சட்டஅறிவு, ஆளுமை எமக்குமுண்டு’ என்று, துணிந்து பேச இன்றைய தமிழ்த்தலைவர்கள் எவர்க்கேனும் தகுதி உண்டா? சிலர் வீம்புக்காக ‘உண்டு’ என்பார்கள். அது உண்மையானால், ஏன் இதுவரை மேற்சொன்னவர்களில் ஒருவரும் உங்களைத் திரும்பியும் பார்க்கவில்லை, ‘சரக்கிருந்தால் மிடுக்கு இருக்கும்’ என்பது பழமொழி. சுமந்திரனை ஒழிக்க நினைக்கும் தலைவர்களிடம் சரக்குமில்லை மிடுக்குமில்லை. ஆசையும் சுயநலமும் மட்டும்தான் அளவுக்கு அதிகமாய் இருக்கிறது. அதைத் தகுதியாய் வைத்து மக்களைத் திசைதிருப்ப முயல்கிறார்கள். ‘யதார்த்தவாதி வெகுசன விரோதி’ என்பார்கள், எவ்வளவு பெரிய உண்மை. சுமந்திரனின் யதார்த்தத்தை வெகுசன விரோதமாக்கும் இத்தலைவர்தனைக் காண, அருவருப்பாக இருக்கிறது. மாற்றம் வராவிட்டால் – துலையப்போகிறது நம் இனம்.
ஏற்கனவே அரசு சார்ந்த அணிகள், தனித்து இயங்கும் அணிகள் என, சிறுசிறு உடைவுகளால் மெல்லிய ஆட்டம் கண்டிருக்கும் நம் இனத்தில், தம் பதவி ஆசையால் இம்முறை அணிபிரிந்திருக்கும் தலைவர்கள், ஆளுக்காள் பூகம்பத்தையே உருவாக்கப் போகிறார்கள்.புதையப்போவது தாம் என்று தெரியாமல் நம் இனத்தாரும் கைதட்டி நிற்கின்றனர். ஒருவர் சர்வதேசத்தின் உதவி பெறுவேன் என்கிறார். இன்னொருவர் உரிமைக்காக சர்வஜன வாக்கெடுப்பே தீர்வு என்கிறார். மற்றொருவர் சர்வதேச நீதிமன்றத்திற்குப் போவேன் என்கிறார். அத்தனையும் பச்சைப் பொய்கள். எல்லோரும் தம் நோக்கம் சொல்கிறார்களே தவிர, நோக்கத்தை அடையும் வழி சொல்கிறார்கள் இல்லை. ஆசைகாட்டி மக்களை ஏமாற்றிப் பதவிகளைப் பிடித்துவிட்டால், பின்னர் இருக்கவே இருக்கின்றன ‘சாட்டுக்கள்.’ அடுத்த தீபாவளி, அடுத்த பொங்கல், அடுத்த வருடப்பிறப்பு என, ‘பேக்காட்ட’ வேண்டியதுதான். பிறகு இன்னொருவர் வந்து முன்னவரைக் கண்டிப்பார். இனவிடுதலைக்காக, ‘தான் செவ்வாய்க் கிரகத்திலிருந்து உதவிபெறுவேன்’ என்பார். ஆனால் எப்படிப் பெறுவேன் என்று சொல்லமாட்டார். அதற்கும் இந்த இனம் கைதட்டும். அருவருப்பாக இருக்கிறது. மாற்றம் வராவிட்டால் – துலையப்போகிறது நம் இனம்.
எஞ்சியிருந்த ஒற்றுமையால் பாராளுமன்றத்தில் அதிகூடிய இருக்கைகளைப் பெற்றும், கூட்டமைப்பால் அதிகம் ஒன்றும் சாதிக்க முடியவில்லைத்தான்! அதை அவர்களின் இயலாமை என்று முற்றுமுழுதாய்ச் சொல்லிவிட முடியாது. அது சூழ்நிலையால் வந்த இயலாமை. எதிரிகளின் பலம் தெரியாமலும் உலக அரசியலின் போக்குத் தெரியாமலும், ஏதோ மேசையில் கிடந்த மாம்பழத்தை எடுத்துவரத் தவறிவிட்டார்கள் என்பது போல, கூட்டமைப்பைக் குற்றம் சாட்டிக் கொண்டிருக்கிறார்கள். கூவிக்கூவி மக்களை ஏமாற்றும் மற்றைய தலைவர்கள் பதவிக்கு வந்தால்த்தான், அவர்களால் என்ன சாதிக்க முடியப்போகிறது என்ற உண்மை தெரியவரும். கூட்டமைப்பில் பல குற்றங்கள் உண்டு, ஆனால் அவர்கள் எதிராளிகள் தரத் தயாராயிருக்கும் இன நன்மைகளை, வேண்டாம் என்று சொல்லும் அளவுக்கான இனத்துரோகிகள் அல்லர் என்பது திண்ணம்.
முன்னாள் முதலமைச்சர், ‘அதைச் செய்வேன், இதைச் செய்வேன்’ என்று, தனது திருநீறையும், தாடியையும், முன்னாள் பதவியையும் காட்டி மயக்கம் செய்கிறார். படித்த மனிதரான இவர் ஏதாவது உருப்படியாய்ச் செய்வார் எனும் நம்பிக்கையில், மாகாண முதலமைச்சர் பதவியைத் தூக்கி, இனத்திற்காக எப்பணியும் செய்யாத இவரது கையில் கூட்டமைப்புக் கொடுத்தது. அப் பதவியை வைத்து அவர் சாதித்தது எதனை? துரோகம், வஞ்சனை, குழப்பம், நிர்வாகச் சீர்கேடு, தன்னலம் என்பவற்றைவிட, வேறெவற்றையேனும் அவர் சாதித்தாரா?- வெட்கக்கேடு! இவர்தான் இனப்பிரச்சினையைத் தீர்த்து வைக்கப்போகிறாராம். ‘கூரையேறிக் கோழி பிடிக்கத் தெரியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போன’ கதைதான். இவரை நம்பிக் கைதட்டவும் அவர் பின்னால் ஒரு கூட்டம் ஓடுகிறது. அருவருப்பாக இருக்கிறது. மாற்றம் வராவிட்டால் – துலையப்போகிறது நம் இனம்.
‘இங்கு நடந்தது இன அழிப்புத்தான்’ என மாகாணசபையினூடு, ஐ.நா.சபைக்கு இவர்களால் அனுப்பப்பட்ட ‘மகஜர்’ என்னாயிற்று?அதனால் இன நன்மை நோக்கி ஒரு துரும்புதானும் அசைந்ததா? திடீரென ஒருநாள் ஜெயிலுக்கு விஜயம் செய்து, போர்க்குற்றவாளிகளை மீட்கவெனத் தொடங்கிய முயற்சி பின்னர் என்னாயிற்று? இப்படியே கேள்விகள் பலப்பல தேங்கி நிற்கின்றன. சுன்னாக நிலத்தடி நீரில் எண்ணெய் கலந்ததை, பொய்மை ஆராய்ச்சியாளர்களை அவுஸ்திரேலியாவிலிருந்து அழைத்து வந்து, தனது மக்களின் உயிராபத்தைக் கூடப் பொருட்படுத்தாமல், பொய்யுரைத்த அசிங்கத்திற்கு என்ன பதில் சொல்லப்போகிறார்கள்? தனது ஆதரவாள அமைச்சரின் ஊழலை மறைப்பதற்காக, மற்றைய அமைச்சர்களையும் பதவி நீக்கம் செய்து,இன்று நீதிமன்றத்தால் ‘குட்டுப்பட்டு’ நிற்கும் அவலத்திற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? ‘உரிமைகோரி நிற்கும் நாங்கள், அரசாங்கத்திடம் எந்த சலுகைகளையும் எதிர்பாக்காமல், வாழப் பழக வேண்டும்’ என்று மக்களுக்கு உரைத்துவிட்டு,பதவி முடிந்த கடைசி நேரத்தில், தனக்கான வாகனத்தை அரசாங்கத்திடம் இரந்து நின்ற, அசிங்கத்திற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? மக்கள் காதில் பூ வைக்கலாம், இது மரத்தையே வைக்கும் முயற்சி!
பதவி தேடிப் பரிதவித்த சிலர், இவருக்கு முட்டுக்கொடுக்கவென முண்டியடித்து நிற்கிறார்கள். இந்தக் கூட்டத்தில் ஒரு படித்த அதிபர் வேறு. கடைசி நிமிடம் வரை கூட்டமைப்பிடம் பதவி எதிர்பார்த்து நின்ற இவர், அது எட்டாப்பழமாய் ஆனதும், இன்றைக்கு வேறொரு பக்கமாய் வலைவீசி, ‘மீன்’ பிடிக்க முயற்சிக்கிறார். அருவருப்பாக இருக்கிறது. மாற்றம் வராவிட்டால் – துலையப்போகிறது நம் இனம்.
இங்ஙனமாய் எதிராளிகளின் கூத்து ஒருபக்கம் நடக்கிறது என்றால், கூட்டமைப்புக்குள்ளேயே சுமந்திரனுக்கு எதிராகச் செயற்பட,ஒரு தனித்த கூட்டணி இயங்குவது மற்றொரு வேடிக்கை. தன் பத்திரிகையை வைத்துப் பேரம் பேசி பதவி பெற்றதாய்ச் சொல்லப்படும்,
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன், ‘இவருக்கு இம்முறை ‘சீற்’ வழங்கக் கூடாது’ என, சுமந்திரன் வெளிப்படையாகச் சொன்ன பகையை மனதில் வைத்து, ஒரே கட்சியில் இருந்து கொண்டே தனது பத்திரிகையினூடு, சுமந்திரனுக்கு எதிராகச் செயற்பட்டு வருகிறார். அதுபோலவே பணம், குடும்பம் போன்ற உள்நோக்கங்களால் வேறுசிலரும், சுமந்திரனின் எதிராளிகள் வரிசையில் இணைந்து நிற்கின்றனர்.
ஏற்கனவே முட்டிமோதி தான் பெற்றுக் கொண்ட பதவியை கையில் வைத்துக் கொண்டே, மீண்டும் பாராளுமன்றத் தேர்தலுக்கு ‘சீற்’ பெற்றுக்கொண்டிருக்கிறார் மேயர் ஆர்னோல்ட். கூட்டமைப்புக்குள் வேறு தகுதியானவர்கள் இல்லவே இல்லையா? எப்படி எவர் சிபாரிசில் இவருக்கு இந்த ‘சீற்’ கிடைத்தது? எனும் வினாவுக்கான பதில் மர்மமாகவே இருக்கிறது. சுமந்திரனால் அடையாளங்காட்டப்பட்ட இவரும், இன்று சுமந்திரனுக்கு எதிரான அணியில்.
தனக்கு ‘சீற்’ கிடைக்கவில்லை என்றதும் மாதர் அணித்தலைவி ஒருத்தி, கட்சியின்மேல் ஊழல் குற்றச்சாட்டுச் சாட்டுகிறார்.அது உண்மையானால், அவ் உண்மையை அவர் ஏன் இதுவரை உரைக்கவில்லை? ‘சீற்’ கிடைத்திருந்தால் அவர்சொல்லும் ஊழலை அவரே அங்கீகரித்திருப்பார் போல, காணாமல்போனோர் சார்ந்த இன்னொரு அமைப்பு, ஏதோ சுமந்திரன்தான் அவர்களை ஒளித்து வைத்திருக்குமாப்போல், அவரைத் தனித்துக் குற்றம்சாட்டி நிற்கிறது. இவர்களைத் தவிர வெளிநாடுகளில் வசதியான வாழ்வைத் தேடிக்கொண்டு, பொழுபோக்கிற்கான தமது தேசப்பற்றை சுமந்திரன் எதிர்ப்பு மூலம், காட்டிக்கொண்டிருக்கிறார்கள் வேறுசிலர்.உள்ள பிரிவுகள் காணாது என்று, திடீரெனக் காவி உடை அணிந்த ஒரு மனிதர்,சமயப்பகை வளர்த்து சுமந்திரனை அதற்குள் இழுத்து விடப்பார்க்கிறார். திருக்கேதீச்சரத்தில் நடந்த சைவ, கிறிஸ்தவ முரண்பாட்டில், சைவர்கள் பக்கமாய் நின்று திருக்கேதீச்சரத்தின் சார்பாக வழக்காடும் வக்கீலாக, சுமந்திரன் செயற்படுவதை இவர் மறந்துபோனது. ஏனோ? அத்தனை பேரும் பொய்யர்கள். அருவருப்பாக இருக்கிறது. மாற்றம் வராவிட்டால் – துலையப்போகிறது நம் இனம்.
இவர்கள் எல்லாம் இனத் துரோகிகள் இல்லையாம். சுமந்திரனும் சம்பந்தனும் தான் இனத் துரோகிகளாம். இங்ஙனமாய் விரல் நீட்டி நிற்போர்க்கு, அடுத்த தேர்தலில், ‘வீட்டிற்குள்’ ‘சீற்’ கிடைத்தால், கூவிக் கொண்டு ஓடி வருவார்கள் என்பது மட்டும் நிச்சயம்.
ஒன்றை உறுதிபட எடுத்துச் சொல்ல விரும்புகிறேன். எனக்கும் சுமந்திரனுக்கும் எந்தத் தனிக்கடமைப்பாடுகளும் இல்லை.
சுமந்திரனால் நான் எவ்விதப் பயனையும் பெறப்போவதுமில்லை. சுமந்திரனில் தவறுகள் இல்லை என்பதும் என் கருத்தில்லை.
சுமந்திரனின் தவறுகளை நான் முன்னர் பலதரம் வரிசைப்படுத்தியும் இருக்கிறேன். இந்தக் கட்டுரைக்காக என்னைப் பலபேர் திட்டப் போகிறார்கள். எனக்கான எதிர்ப்பு வலுப்பெறப்போகிறது. அவற்றையெல்லாம் தெரிந்து கொண்டே இதனை எழுதுகிறேன்.
அறுபது வயதைக் கடந்துவிட்டேன். இனியும் என்னுடைய பெருமை நோக்கி, பொதுமை பாராட்டி வாழ நான் விரும்பவில்லை. இனத்திற்குத் தீமை என்று தெரிகிறபொழுது, அதை மக்களுக்குச் சொல்லாமல் விடுவது தவறென்று என் மனச்சாட்சி சொல்கிறது. தீமையைக் கண்டு கண்டிக்காமல் இருந்ததாலேயே, பீஷ்மரும், துரோணரும் போரில் வீழ்ந்தார்கள். பாவத்தைப் பார்த்திருந்த பாவமே அவர்களை வீழ்த்தியது. அந்தப் பாவத்தைச் செய்ய நான் தயாராகவில்லை. தனிப்பட்ட ரீதியில் நானோ என்னைச் சார்ந்த அமைப்போ, இக் கட்டுரையால் சிலவேளை சிலரது பகைக்கு ஆளாகலாம். பொதுவெளிகளில் என்னை யாரும் கண்டபடி திட்டலாம். ‘உங்களுக்கு எதற்கு அரசியல்’ என்று வேறு சிலர் உபதேசிக்கலாம். அதுபற்றியெல்லாம் எனக்குக் கவலையில்லை.
நிறைவாக ஒன்றைச்சொல்ல விரும்புகிறேன். இன விடுதலைப்போர் நடந்த காலத்தில், பிரபாகரனுடைய இருப்பு எவ்வளவு முக்கியமாய் இருந்ததோ, இன்றைய அரசியல் சூழ்நிலையில் சுமந்திரனது இருப்பும், இனஒற்றுமையும், அந்தளவு முக்கியத்துவம் பெறுகிறது. இந்த உண்மையை நிராகரிப்பவர்களே இனத் துரோகிகளாம். மாற்றம் வராவிட்டால் – துலையப்போகிறது நம் இனம்.
நன்றி: http://uharam.com
Comments are closed.