தாமரை மொட்டின் மேடைக்கு வந்த அதிபருக்கு எதிராக முறைப்பாடு
தலைநகரிலுள்ள பிரபலமான சிங்கள பௌத்த ஆண்கள் பாடசாலையொன்றின் அதிபர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிடும் வேட்பாளரின் அரசியல் மேடையில் ஏறியதன் மூலம் தேர்தல் சட்டத்தை மீறினார் என அவருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு ஆனந்த கல்லூரியின் அதிபர் ஏச்.எம்.கீர்த்தி ரத்ன ஸ்தாபன விதிகள் மற்றும் தேர்தல் சட்டத்தை மீறியுள்ளதால் அவருக்கு எதிராக உத்தியோகபூர்வ விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கையை எடுக்குமாறு தெஹிவளையில் வசிக்கும் டபிள்யூ.ஏ.ஜயரத்ன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
அரசாங்கத்தில் முக்கிய பொறுப்பை வகிக்கும் கொழும்பு ஆனந்த கல்லூரியின் அதிபர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிடும் சரத் வீரசேகரவின் அரசியல் மேடையில் ஏறி, வெளிப்படையாக தனது ஆதரவை வெளியிட்டுள்ளதாக முறைப்பாட்டாளர் அந்த கடிதத்தில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்
தேர்தல் சட்டத்தை மீறி அரசாங்கத்தின் பொறுப்புமிக்க பதவியில் இருக்கும் கொழும்பு ஆனந்த கல்லூரியின் அதிபர் எஸ்.எம்.கீர்த்தி ரத்ன, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் போட்டியிடும் சரத் வீரசேகரவின் வெற்றியை உறுதிசெய்யும் வகையில் நுகேகொடை, கங்கொடவில, (எட்டாவது மைல் கல்லிற்கு அருகில்) ஹைய்லெவல் வீதி இலக்கம் 613/8 இல் உள்ள இசுறு சமரசிங்க என்ற நபரின் வீட்டில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 15 ஆம் திகதி மாலை 6.30 மணியளவில் நடைபெற்ற அரசியல் பிரசாரத்தில் கலந்துகொண்டார் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு அனுப்பியுள்ள இந்தக் கடிதத்தின் பிரதிகளை பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் தலைவர், கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் அரச நிர்வாகத் திணைக்களம் ஆகியவற்றுக்கும் முறைப்பாட்டாளரான டபிள்யூ.ஏ.ஜயந்த அனுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர் சரத் வீரசேகரவின் வெற்றியை உறுதிசெய்யும் வகையில் ஆனந்த கல்லூரியைச் சேர்ந்தவர்களால் நடத்தப்பட்ட கூட்டத்தின் நிழற்படங்கள் மற்றும் அழைப்பிதழ் ஆகியவற்றையும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு முறைப்பாட்டாளர் அனுப்பியுள்ளார்.
Comments are closed.