இரண்டாகப் பிளந்தது ‘யானை’ ‘மொட்டு’வின் வெற்றி நிச்சயம் : மஹிந்த அதீத நம்பிக்கை

“ஐக்கிய தேசியக் கட்சி இரண்டு அணிகளாகப் பிளவுப்பட்டுள்ளதன் காரணமாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வெற்றி உறுதியானது என்பதைக் காணக் கூடியதாக உள்ளது.”
– இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
களுத்துறையில் அவரின் தலைமையில் நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பிரசாரக் கூட்டத்திலேயே அவர் மேற்க்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“ஐக்கிய தேசியக் கட்சி அரசின் காலத்தில் நடந்ததுபோல் அரசியல் பழிவாங்கல்கள் எதிர்காலத்தில் நடைபெறாது. எனினும், தகுதி தராதரமின்றி குற்றவாளிகளுக்கு எதிராகச் சட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சி இரண்டு அணிகளாக பிளவுப்பட்டுள்ளதன் காரணமாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வெற்றி உறுதியானது என்பதைக் காணக் கூடியதாக உள்ளது. எப்படியான தடைகள் வந்தாலும் நாட்டை இலக்கு நோக்கிய அபிவிருத்தியை நோக்கிக் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.
அத்துடன், சிலர் தமது குறுகிய அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்வதற்காக கொரோனா வைரஸ் தொற்று நோய் சம்பந்தமாகப் பொய் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், மக்கள் இது சம்பந்தமாக அவதானத்துடன் இருக்க வேண்டும்.
உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் தொற்று நோயை அரசு வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தியுள்ளது. எதிர்காலத்திலும் அரசு இது தொடர்பாக அவதானத்துடன் இருந்து, தொற்று நோயைக் கட்டுப்படுத்த அனைத்துப் பலத்தையும் பயன்படுத்தும்.
தொற்று நோய் முடிவுக்கு வந்துவிட்டது என்று கருதாமல், அனைவரும் கவனமாகச் சுகாதாரப் பழக்கங்களை சரியாகப் பின்பற்ற வேண்டியுள்ளது.
இப்படியான நிலைமையில்கூட நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி அரசால் மாத்திரமே முன்னெடுக்க முடியும் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்” – என்றார்.
Comments are closed.