அரச விடுமுறை செய்தி : தவறுதலான கையாளுகை காரணமாக நடந்தது!
எதிர்வரும் 3 தினங்களுக்கு அரச விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என நேற்று நள்ளிரவு செய்தியொன்று வெளிவந்திருந்தது. இந்தச் செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
‘ஹெலகுறு’ எனும் பலராலும் பயன்படுத்தப்படும் சிங்கள மொழியிலான தட்டச்சு செய்யும் கையடக்கத் தொலைபேசி செயலியின் ஓர் அங்கமான, செய்திகளை தொலைபேசிகளுக்கு அறிவிக்கும் வசதியின் ஊடாக அச்செய்தி பரவியிருந்தது.
கடந்த மார்ச் மாதம் அரசால் அறிவிக்கப்பட்ட விடுமுறை தொடர்பான செய்தியே மீண்டும் இவ்வாறு அனுப்பப்பட்டுள்ளது.
அதனை இயக்கும் நபரால் மேற்கொள்ளப்பட்ட தவறுதலான கையாளுகை காரணமாக இது நடந்துள்ளது எனத் தெரியவருகின்றது.
இதனால் அதனைப் பயன்படுத்தும் அனைவருக்கும் இந்தச் செய்தி சென்றுள்ளது. இதனைத் தொடர்ந்து அது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியிருந்தது.
கொரோனா வைரஸ் தொடர்பான செய்திகளை இந்த நிறுவனத்தின் இந்தச் செயலியின் மூலம் பரிமாறிக்கொள்வதற்காக, அரச தகவல் திணைக்களத்துடன் இணைந்து அண்மையில், இந்த நிறுவனம் ஒப்பந்தமொன்றைச் செய்திருந்ததால், அது நம்பகத்தன்மை கொண்ட செய்தியே எனப் பலரும் நினைத்திருந்ததோடு, அது இவ்வாறு வைரலாக பரவுவதற்கும் காரணமாக அமைந்திருந்தது.
ஆயினும் தவறு நிகழ்ந்ததை குறித்த செயலியின் மூலம், மீண்டும் அந்த நிறுவனம் அறிவித்திருந்ததோடு, அவ்வாறு அரசால் எவ்வித விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை என அரச தகவல் திணைக்களத்தாலும் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Comments are closed.