முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதித்துவத்தை இல்லாதொழிக்க இனவாதிகள் கங்கணம் : இம்தியாஸ்
நாட்டில் முஸ்லிம்களின் மூன்று விடயங்களில் இனவாதிகள் குறிவைத்துச் செயற்படுகின்றார்கள் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் வேட்பாளர் இம்தியாஸ் பார்க்கீர் மரிக்கார் தெரிவித்தார்.
காலி மாவட்டத்தில் இன்று பல்வேறு பிரசாரக் கூட்டங்களில் அவர் பங்கேற்றார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“இனவாதத்தை விதைத்து எப்படியாவது ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிக்கொள்ள வேண்டும் என்று ஒரு தரப்பு துடிக்கின்றது. அவர்களின் நோக்கம் முஸ்லிம்களுடைய கல்வி, பொருளாதாரம் மற்றும் அரசியல் பிரதிநிதித்துவங்களை இல்லாமலாக்குவது அல்லது குறைப்பது ஆகும்.
அந்தவகையில் தற்போது ஜாமிஆ நளீமிய்யா மற்றும் மத்ரசாக்கள் மீது பொய்க் குற்றச்சாட்டுக்களும் சேறடிப்புகளும் நடைபெறுகின்றன.
மேலும் முஸ்லிம்களுடைய பொருளாதாரமும் இலக்கு வைக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்களுடைய கடைகளில் பொருட்கள் வாங்க வேண்டாம் மற்றும் அவர்களுடன் கொடுக்கல் – வாங்கல் செய்ய வேண்டாம் என்ற பிரசாரமும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதனுடன் முஸ்லிம் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவங்கள் அதிகமாகக் கிடைத்த பகுதிகளில் தற்போது பல சுயேச்சைக் குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளன. இதனுடைய நோக்கம் வழமையாகவே அப்பிரதேசங்களில் தெரிவாகிய முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களை இல்லாமலாக்குவதாகும்.
இது எல்லாவற்றையும் எமது முஸ்லிம் சமூகம் புரிந்துகொள்ள வேண்டும். எமது எதிர்காலம் பற்றி நாம் ஆழமாகச் சிந்திக்க வேண்டும்.
சில வெளிநாடுகளில் இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக எவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றதோ அதையொத்த ஒரு நிலையை இங்கும் ஏற்படுத்த முற்படுகின்றார்களோ என்ற சந்தேகம் எமக்கு உருவாகியுள்ளது. அவர்களின் செயற்பாடுகளும், பேச்சுக்களும் அப்படித்தான் உள்ளன.
எனவே, முஸ்லிம்கள் தமது பிரதேசங்களில் போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்வதுடன், இன பேதமற்றுப் செயற்படும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் வாக்களிக்க முன்வர வேண்டும்” – என்றார்.
Comments are closed.