கோட்டபாயவுடன் சமரச அரசியலுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தயாராகியுள்ளது – சிறிகாந்தா
தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஐனாதிபதி கோட்டபாய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்துடன் சமரச அரசியல் நடாத்த தயாராகிவிட்டது என்பது தெளிவாகின்றது. தமிழ் மக்களின் உரிமைகளுக்காக உறுதியுடன் குரல்கொடுக்கும் நிலையில் கூட்டமைப்பு இல்லை என தமிழ் மக்கள் கட்சியின் தலைவரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் யாழ்மாவட்ட வேட்பாளருமான சிறிகாந்தா தெரிவித்தார்.
உரெழு மற்றும் கோப்பாய் சந்தியில் இடம்பெற்ற தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பிரச்சாரம் கூட்டத்தில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
நல்லாட்சி அரசாங்க காலத்தில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு விசுவாசமாக நடந்து கொண்ட கூட்டமைப்பின் தலைவர்கள் திசைமாறத் தொடங்கிவிட்டார்கள் என்பது செம்பியன்பற்றில் உரையாற்றிய தம்பி சுமந்திரனின் பேச்சு எடுத்துக் காட்டுகின்றது. ஐனநாயக வழியில் அரசியல் தீர்வை பெறுவதற்கு நீன்டகாலம் செல்லும். அந்த இடைக்காலத்தில் அபிவிருத்தியை முன்னெடுக்க வேண்டும் எனவே அமைச்சு பதவிகளை பெறுவதா இல்லையா என்பது பற்றி சிந்திக்க வேண்டும் என தம்பி சுமந்திரன் கூறியிருந்தார்.
சிங்கள பேரிணவாத கட்சிகளோடு இசைந்து போய் சமரச அரசியல் நடாத்தி முறன்பாடுகள் அற்ற வழியில் செயற்படுவது என்ற சிந்தனை ஒரு வியாதியாக எப்போதோ கூட்டமைப்பினருக்கு உருவாகிவிட்டது. ஆனால் இப்போது தான் அது வெட்டவெளிச்சம் ஆகியுள்ளது. ரணில் விக்ரம சிங்கவுக்கு விசுவாசமாக செயற்ப்பட்டார்கள். கடந்த ஜனாதிபதி தேர்தலில் யார் ஐனாதிபதி வேட்பாளர் என்ற ஐக்கிய தேசியக் கட்சியின் உள்வீட்டு பிரச்சினையில் தலையிட்டு ரணிலுக்கு ஆதரவாக பேசினார். இதால் சஜித் தரப்பு அணியினரால் நாடாளுமன்ற சிற்றுண்டிச் சாலையில் எவ்வாறான எதிர்பை பதிவு செய்தனர் என்பது வைரலானது. இது சுமந்திரன் என்ற தனிப்பட்ட நபருக்கு ஏற்பட்ட அவமானம் அல்ல ஒட்டுமொத்த தமிழர்களுக்கு ஏற்பட்ட அவமானம் ஆகும்.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கோட்டபாய ராஜபக்சவுடைய பொதுஜன பெரமுனவே ஆட்சியமைக்குமென உறுதிபட தெரிகின்ற நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு திசைமாறி இருக்கின்றது. சமரச அரசியல் என்ற பெயரில் சரணாகதி அரசியலை மேற்கொள்ள தயாராகிவிட்டார்கள். அமைச்சுப் பதவிகளை ஏற்பது பற்றி தீவிரமாக சிந்திப்பதோடு அதனை கூச்சம் இன்றி வெளியில் சொல்கின்றார்கள் என்றால் கூட்டமைப்பு தொடர்பில் மக்கள் விளிப்பாக இருக்க வேண்டும்.
த.தே.கூ அமைச்சுப் பதவிகளை ஏற்று அரசாங்கத்தில் அங்கம் வகிப்பது தமிழ் மக்களுக்கு செய்கின்ற துரோகமாகவே கருதப்படும். எமது உரிமைகளை நிலைநாட்டுவதற்காக நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் செயற்பட வேண்டிய எமது பிரதிநிதிகள் அரசாங்கத்தோடு ஐக்கியமாவது என்பது எமது விடுதலைப் போராட்டத்தினை இடைநடுவில் கைவிட்டு சிங்கள பேரிணவாத சக்திகளிடத்தில் மண்டியிடுவதற்கு சமனாகும். இந்த சமரச அரசியலை மக்கள் ஏற்கப் போகின்றார்களா அல்லது தொடர்ந்து தமது சுயாட்சிக்காக உறுதியாக செயற்படப் போகின்றார்களா என்ற கேள்வி எழுகின்றது.
எம்முடைய ஆயுதப் போராட்டம் முடக்கப்பட்டுள்ள நிலையில் எமது பிரச்சினைகளைை இராயதந்திர ரீதியில் நேர்மையாக நேர்தியாக எடுத்துச் சொல்ல ஒரு தலைமைத்துவம் தேவைப்படுகிறது. அதனை வழங்க தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி தயாராக உள்ளது, என்றார்
Comments are closed.