வாக்களிப்பை அதிகரித்தால் மட்டக்களப்பில் 4 ஆசனங்கள் கிடைக்கும் : சம்பந்தன்
“மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்களின் வாக்களிப்பு வீதத்தை அதிகரித்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நான்கு ஆசனங்களைக் கைப்பற்றியே தீரும்.”
– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு, வந்தாறுமூலையில் அமைந்துள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேர்தல் அலுவலகத்துக்கு இரா.சம்பந்தன் நேற்று விஜயம் மேற்கொண்டார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளருமாகிய கி.துரைராஜசிங்கத்தின் அழைப்பை ஏற்று மேற்படி விஜயத்தை அவர் மேற்கொண்டார். இதன்போது ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச சபையின் உப தவிசாளர் கா.ராமச்சந்திரன் ஏற்பாட்டில் சிறு மக்கள் சந்திப்பும் அங்கு இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பில் இரா.சம்பந்தன் கருத்துத் தெரிவிக்கையில்,
“மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்களின் வாக்களிப்பு வீதத்தைக் கடுமையாக அதிகரிக்கச் செய்ய வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நான்கு பிரதிநிதிகள் பெற வேண்டிய இந்த மாவட்டத்தில் மக்களின் வாக்களிப்பு வீதக் குறைவால் மூன்று பிரதிநிதிகள் மாத்திரமே பெறக் கூடியதாக இருக்கின்றது. இந்தநிலையை அனைவரும் ஒன்றிணைந்து மாற்ற வேண்டும்.
திருகோணமலை மாவட்டத்தில் சுமார் 85 வீதத்துக்கு மேல் மக்கள் வாக்களிக்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அது வெகு குறைவாகவே இருக்கின்றது.
வாக்களிப்பு வீதத்தை அதிகரிப்பதுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கான வாக்களிப்பை அதிகரிக்கச் செய்யுமிடத்து 04 ஆசனங்கள் கிடைப்பதென்பது அவ்வளவு கடினமான காரியமாக இருக்காது” – என்றார்.
Comments are closed.