வர்த்தக நடவடிக்கைகளை இடைநிறுத்திய ETI மற்றும் சுவர்ணமஹால்
இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது 2020 யூலை 10ஆம் திகதி நடைபெற்ற அதன் கூட்டத்தில், 2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க நிதித்தொழில் சட்டத்தின் 31ஆம் பிரிவின் நியதிகளின் பிரகாரம் 2020 யூலை 13ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் ஈரிஐ பினான்ஸ் லிமிடெட் மற்றும் சுவர்ணமஹால் பினான்ஸ்சியல் சேர்விஸஸ் பிஎல்சி நிறுவனங்களின் வியாபார நடவடிக்கைகளை இடைநிறுத்துவதற்குத் தீர்மானித்துள்ளது.
2011ஆம் ஆண்டிலிருந்து பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதன் காரணமாக ஈரிஐ பினான்ஸ் லிமிடெட் மற்றும் சுவர்ணமஹால் பினான்ஸ்சியல் சேர்விஸஸ் பிஎல்சி ஆகியன கடன்தீராற்றலற்ற நிலையை அடைந்துள்ளன. இந்நிறுவனங்களின் பணிப்பாளர் சபையும் சிரேஷ்ட முகாமைத்துவமும் இத்தகைய குறைப்பாடுகளை உரிய முறையில் கையாளத் தவறியமையினால், இவ்விரு நிறுவனங்களின் அலுவல்கள் மற்றும் பணிப்பாளர் சபைகளின் அதிகாரங்களைக் கட்டுப்படுத்தும் வகையில் 2018 சனவரி 02ஆம் திகதியன்று நாணயச் சபை பணிப்புரைகளை வழங்கியது. இவ்விரு நிறுவனங்களின் அலுவல்களை மேற்பார்வை செய்வதற்காக நாணயச் சபையினால் முகாமைத்துவக் குழுவொன்றும் நியமிக்கப்பட்டது.
தொடர்ந்துவந்த காலப்பகுதியின் போது ஒவ்வொரு நிறுவனத்தினதும் 30 சதவீதம் வரையான வைப்பு நிலுவைகளை பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் இரு கம்பனிகளும் மீள்செலுத்தக்கூடியதாகவிருந்தன. இந்நிறுவனங்களை புத்துயிரளிப்பதற்குப் பொருத்தமான முதலீட்டாளர்களைத் தெரிவுசெய்ய இரு நிறுவனங்களினதும் பணிப்பாளர் சபைகளும் நாணயச் சபையினால் பணிக்கப்பட்டிருந்த போதிலும், பொருத்தமான முன்மொழிவுகள் எதுவும் செயற்படுத்தப்படவில்லை. இந்நிறுவனங்களை வெற்றிகரமாக புத்துயிரளிப்பதற்கு இயலாமையினால் இவ்விரு நிறுவனங்களின் நிதி நிலைமைகளும் தொடர்ச்சியாக சீர்குலைந்தன.
இதன் விளைவாக, ஈரிஐ பினான்ஸ் லிமிடெட் மற்றும் சுவர்ணமஹால் பினான்ஸ்சியல் சேர்விஸஸ் பிஎல்சி நிறுவனங்களிலுள்ள வைப்புக்கள் முதிர்ச்சியடைந்து வருகின்ற போதிலும் அவற்றை தற்போது மீளச் செலுத்த இயலாத நிலைமை காணப்படுகின்றது.
இருப்பினும், ஈரிஐ பினான்ஸ் லிமிடெட் மற்றும் சுவர்ணமஹால் பினான்ஸ்சியல் சேர்விஸஸ் பிஎல்சியின் வியாரங்களின் இடைநிறுத்தல் காரணமாக இலங்கை மத்திய வங்கியின் இலங்கை வைப்புக் காப்புறுதி மற்றும் திரவத்தன்மை உதவித் திட்டமானது ஏற்புடைய சட்டங்களின் மற்றும் ஒழுங்குவிதிகளின் கீழ் காப்புறுதி செய்யப்பட்ட வைப்பாளர்களுக்கு இழப்பீடுகளை செலுத்துவதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதுடன் இது பின்வரும் விதத்தில் தீர்ப்பனவு செய்வதற்கு வசதியளிக்கும்.
ஈரிஐ பினான்ஸ் லிமிடெட்டின் மொத்த வைப்பாளர்களில் 75 சதவீதமான வைப்பாளர்கள் வைப்பிலிட்ட முழுத்தொகையையும் (38,111 மொத்த வைப்பாளர்களுள் 28,554 வைப்பாளர்கள்) எஞ்சிய 25 சதவீதமான வைப்பாளர்கள் (9,557 வைப்பாளர்கள்) அவர்களின் வைப்புத் தொகையில் ஒரு பகுதியாக ரூ.600,000 வரை பெற்றுக்கொள்ள முடியும்.
சுவர்ணமஹால் பினான்ஸ்சியல் சேர்விஸஸ் பிஎல்சியின் மொத்த வைப்பாளர்களில் 89 சதவீதமான வைப்பாளர்கள் வைப்பிலிட்ட முழுத்தொகையையும் (8,726 மொத்த வைப்பாளர்களுள் 7,802 வைப்பாளர்கள்) எஞ்சிய 11 சதவீதமான வைப்பாளர்கள் (924 வைப்பாளர்கள்) அவர்களின் வைப்புத் தொகையில் ஒரு பகுதியாக ரூ.600,000 வரை பெற்றுக்கொள்ள முடியும்.
மேலும், இலங்கை மத்திய வங்கியின் வங்கியல்லா நிதியியல் நிறுவனங்கள் மேற்பார்வைத் திணைக்களத்தின் பணிப்பாளர், 2000ஆம் ஆண்டின் 56ஆம் இலக்க நிதிக் குத்தகைக்குவிடல் சட்டத்தின் 9(1)ஆம் பிரிவின் நியதிகளின் கீழ் நிதிக் குத்தகைக்குவிடல் நிறுவனங்களாக பதிவுசெய்யப்பட்ட ஈரிஐ பினான்ஸ் லிமிடெட் மற்றும் சுவர்ணமஹால் பினான்ஸ்சியல் சேர்விஸஸ் பிஎல்சியின் பதிவுச் சான்றிதழ்களை 2020 யூலை 13ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் இடைநிறுத்துவதற்கான அறிவித்தல்களை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளார்.
இலங்கை மத்திய வங்கியானது, ஈரிஐ பினான்ஸ் லிமிடெட் மற்றும் சுவர்ணமஹால் பினான்ஸ்சியல் சேர்விஸஸ் பிஎல்சி தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை உரிய நேரத்தில் தெரிவிக்கும்.
(அரசாங்க தகவல் திணைக்களம் )
Comments are closed.