தமிழ் – முஸ்லிம் சமூகம் ஒன்றுபடுவது அவசியம் : சஜித் அணி வேட்பாளர் அமீர் அலி
“எதிர்வரும் காலங்களில் தமிழ், முஸ்லிம் சமூகம் ஒன்றுபட்டு அரசியலில் பயணிக்க வேண்டிய தேவைப்பாடு இந்தக் கால அரசியலைப் பொறுத்த வரையில் இருக்கின்றது.”
– இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
மட்டக்களப்பில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“எங்களுக்கு அழுத்தம், கஷ்டம் இருக்கின்றது. கடந்த காலத்தில் உங்களுக்காகச் சிறப்பாகப் பணி செய்தோம். எமது சமூகத்தை ஏமாற்றாமல், கொள்ளையடிக்காமல் மரணத்துக்குப் பயந்து சேவையாற்றிய தடயம் எங்கள் உள்ளத்தில் உள்ளது.
இது உண்மையாக இருக்கமாக இருந்தால் – இந்த மாவட்டத்துக்கு இந்தத் தலைமை தேவையாக இருந்தால் – மாவட்டத்துக்குத் தெளிவான வழிகாட்டல் வேண்டுமாக இருந்தால் – உங்கள் பிள்ளை உதவுவான் என்ற நம்பிக்கை இருந்தால் எனக்கு ஒரு புள்ளடி போடுவதில் என்ன பிழை இருக்கின்றது.
எங்களுக்கு இருக்கின்ற பிரச்சினை எமது இருப்பைப் பற்றிய பிரச்சினை. தமிழ்ச் சமூகத்தையும், தமிழ்த் தலைவர்களையும் துடைத்து எறிந்து விட்டோம் என்று சொல்கின்றார்கள். இனி துடைத்தெறிய இருக்கின்ற ஒரேயொரு சமூகம் முஸ்லிம் சமூகம். எனவே, அந்தப் பட்டியிலிலே நாங்கள் போய்விடக் கூடாது.
தமிழ்ச் சமூகத்தினர் துடைத்து எறியப்பட்டார்கள் என்பதை நாங்கள் விட்டுக் கொடுக்க முடியாது. எதிர்வரும் காலங்களில் இரண்டு சமூகம் ஒன்றுபட்டு அரசியலில் பயணிக்க வேண்டிய தேவைப்பாடு இந்தக் கால அரசியலைப் பொறுத்த வரையில் இருக்கின்றது. இதற்கு நாங்கள் எல்லோரும் சமமான முறையில் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற நிலவரத்தில் முன்னெடுத்துச் செல்ல வேண்டிய தேவைப்பாடும் இருக்கின்றது” – என்றார்.
Comments are closed.