நல்லூா் முருகன் திருவிழாவில் பக்தர்கள் 300 பேரை அனுமதிக்க கோரி ஜனாதிபதிக்கு கடிதம்
நல்லூா் முருகன் ஆலயத் திருவிழாவின் போது பக்தர்கள் 300 பேரையேனும் ஆலய வளாகத்துக்கு அனுமதிக்க ஆவண செய்யுமாறு கோரி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு, யாழ். மாநகர சபை பிரதி முதல்வர் துரைராசா ஈசன் இன்று கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
ஏற்கனவே நயினாதீவு நாதகபூஷணி அம்மன் ஆலயம் மற்றும் மடு தேவாலய திருவிழாக் காலங்களில் குறைந்த பட்சம் 300 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டது போன்று நல்லூருக்கும் அனுமதிக்குமாறும் அந்தக் கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.
அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நல்லூக் கந்தசாமி ஆலய வருடாந்தத் திருவிழா ஜூலை-24 ஆம் திகதி தொடங்கி ஆகஸ்ட் 20 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்த முறையும் பக்தர்களின் பங்கேற்புடனோ அல்லது பங்கேற்பு இன்றியோ இந்து மத குருமார்கள் மற்றும் ஆலய ஊழியா்களின் உதவியுடன் வழமைபோன்று திருவிழா இடம்பெறும் என ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆலய நிர்வாகம் இதில் தலையிடாது.
இந்நிலையில் யாழ்ப்பாண மாநகர சபையின் சுகாதார அதிகாரிகள், பக்தா்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டிய சுகாதார வழிகாட்டல்கள் குறித்து அறிவுறுத்தியுள்ளனர்.
கோயிலுக்குள் அதிக பக்தர்களை சீரற்ற முறையில் அனுமதிப்பது நோய் பரவுவதற்கு வழிவகுக்கும் என்று அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். தொற்று நோய் நெருக்கடி காரணமாக சுகாதார அறிவுறுத்தல்களுக்கு அமைய திருவிழாக்களில் மட்டுப்படுத்தப்பட்ட தொகை பக்தா்களே ஆலயத்துக்குள் அனுமதிக்கப்படுவர்.
அதற்கேற்ற வகையில் திருவிழாக் காலங்களில் 300 பேருக்கும் மேற்படாத தொகையில் பக்தாகளை ஆலய வளாகத்துக்கு அனுமதிக்க உதவுமாறு ஆலயத்தின் பக்தா்கள் சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன். உங்களது விரைவான பதிலுக்காகக் காத்திருக்கிறேன் எனவும் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed.