தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு ”மனித வள” நிறுவன மூலமான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கிறது
நிரந்தர வருமானமற்ற தொழிலாளர்கள், நாட்டில் அவ்வப்போது அமுல்படுத்தப்படும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தின் ‘மனித வள’ நிறுவன மூலடான ஊழியர்களும் வருமானத்தை இழந்து கடுமையான சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக தொழிலாளர் தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.
மனித வள ஆட்சேர்ப்பு நிறுவனத்தின் ஊடாக, இணைந்து பணியாற்ற ஜூன் 3 புதன்கிழமையான இன்றைய தினம், கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தின் பிரதான வாயிலுக்கு அருகில் நூற்றுக்கணக்கான ஆண் மற்றும் பெண் ஊழியர்கள் காத்திருந்ததாக, டாபிந்து நிகழ்ச்சித் திட்ட ஒருங்கிணைப்பாளர் சமிலா துஷாரி தெரிவித்துள்ளார்.
மனிதவள நிறுவன முகவர்கள் வரும் வரை தொழிலாளர்கள் காத்திருந்த சந்தர்ப்பத்தில், சம்பவ இடத்திற்கு வந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகள், சமூக இடைவெளியை பேணாவிட்டால் தொழிலாளர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என எச்சரித்துள்ளனர்.
தாம் வேலை தேடியே வந்ததாகவும், வாழ்வதற்கான வருமானத்தை உழைப்பதே நோக்கமெனவும், ஊழியர்கள் தங்கள் நிலைமையை விவரித்துள்ளனர்.
வீட்டு உரிமையாளர்கள் வாடகையை செலுத்துமாறு கோருவதாகவும், மேலும் நாளை முதல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதால், எதிர்வரும் திங்கட்கிழமை வரை எந்த வருமானமும் கிடைக்காது எனவும், தமது நிலைமைத் தொடர்பில் எவரும் பொறுப்புபேற்கவில்லை எனவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
சில தொழிலாளர்கள் கடந்த மாத வாடகையை, நகைகளை அடகு வைத்தே செலுத்தியதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஜூன் 4, வியாழன் மற்றும் ஜூன் 5 வெள்ளிக்கிழமைகளில் நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை அரசாங்கம் அறிவித்துள்ளது.
சில பெண்கள், தங்கள் சோகத்தையும் வருத்தத்தையும் கண்ணீருடன் பகிர்ந்துகொண்டாக, டாபிந்து நிகழ்ச்சித்திட்ட ஒருங்கிணைப்பாளர் சமிலா துஷாரி தெரிவித்துள்ளார்.
அரசு வழங்கிய ஐயாயிரம் ரூபாய் கொடுப்பனவு தங்களுக்கு கிடைக்கவில்லை என்று சுட்டிக்காட்டும் மனிதவள நிறுவன மூலமான ஊழியர்கள், மானியங்கள் மூன்று நாட்களுக்குக் கூட போதுமானதாக இல்லை என சுட்டிக்காட்டியுள்ளனர்.
மனித வள நிறுவனம் மூலமான ஊழியருக்கு, அவர்களை பணிக்கமர்த்திய நிறுவனங்கள் ஊடாக, ஒரு நாளைக்கு ஊதியமாக 1,000 முதல் 1,200 ரூபாய் வரை செலுத்தியிருந்தாலும், கொரோனா தொற்றுநோயால் அவர்களின் அன்றாட வருமானம் 700 ரூபாயாகக் குறைவடைந்துள்ளதாக, சமிலா துஷாரி ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
உலகெங்கிலும் பரவியுள்ள கொரோனா வைரஸை கரணம் காட்டி, தொழிலாளர்கள் உரிமைகளை நீர்த்துப்போகச் செய்ய முதலாளிகள் முற்படுவதால், மனித வள நிறுவனங்கள் ஊடாக தொழில்களைப் பெற்றுக்கொண்டவர்கள் பாரிய அளெசகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக பல தொழிற்சங்கங்கள் குற்றஞ்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments are closed.