கொழும்புத்துறை வீடொன்றிலிருந்து 17 கைக்குண்டுகள் கிடைத்துள்ளன

கொழும்புத்துறையில் வீடொன்றை சுத்தம் செய்த போது 17 கைக்குண்டுகள் அடங்கிய இரும்புப் பெட்டி ஒன்று கண்டறியப்பட்டது. அதனையடுத்து நீதிமன்றின் உத்தரவில் அத்தனை கைக்குண்டுகளும் சிறப்பு அதிரடிப் படையினரால் செயலிழக்கம் செய்யப்பட்டது.
யாழ்ப்பாணம் கொழும்புத்துறையில் இன்று காலை வீடொன்றை சுத்தம் செய்த போது, அந்த வீட்டு வளாகத்தில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் பெட்டி ஒன்று கண்டறியப்பட்டது. அதற்குள் வெடிபொருள்கள் இருப்பதை அவதானித்த வீட்டில் உள்ளவர்கள் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கினர்.
சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார், விசாரணைகளை முன்னெடுத்தனர். அதனை அந்த இடத்திலிருந்து அகற்றுவதற்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றின் அனுமதியை பொலிஸார் பெற்றுக்கொண்டனர்.
இந்த நிலையில் நீதிமன்றின் அனுமதியுடன் சிறப்பு அதிரடிப் படையினரின் உதவியுடன் இன்று மாலை பெட்டியை அங்கிருந்து அகற்றியதுடன் அதற்குள்ளிருந்த 17 கைக்குண்டுகளும் செயலிழக்கம் செய்யப்பட்டன.
Comments are closed.