சர்வதேசப் பொறியிலிருந்து படையினரை மீட்டது ஐ.தே.க. – மஹிந்த அணிக்கு விஜேவர்தன பதிலடி
“சர்வதேச அழுத்தங்களிலிருந்து படையினரை ஐக்கிய தேசியக் கட்சி அரசே பாதுகாத்தது. எமது புலனாய்வுப் பிரிவு பலவீனப்படுத்தப்படவில்லை.”
– இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளரும் முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருமான ருவான் விஜேவர்தன தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“புலனாய்வுத் துறையினரை வேட்டையாடுவதற்கோ, புலனாய்வுக் கட்டமைப்பைப் பலவீனப்படுத்துவதற்கோ எமக்குத் எந்தத் தேவையும் இல்லை. நாம் எமது ஆட்சியில் அதைச் செய்யவும் இல்லை.
2015ஆம் ஆண்டுக்கு முன்னர் மஹிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் சில கொலைகள் நடந்துள்ளன. கடத்தல் சம்பவங்களும் பதிவாகின என மக்கள் மத்தியில் கருத்து நிலவியது. அவை தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது நாம் உறுதி வழங்கியிருந்தோம்.
அதன்படி விசாரணைகள் நடைபெற்றன. அந்தச் சம்பவங்களுடன் சில புலனாய்வு அதிகாரிகள் தொடர்புபட்டுள்ளனர் என்று தெரியவந்தது. அவர்களுக்கு அரசியல் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு அதைச் செய்திருக்கலாம். அப்படியான விசாரணை மேற்கொள்ளப்பட்டபோதே புலனாய்வுப் பிரிவினரைப் பலவீனப்படுத்துகின்றோம் என்று எதிரணியால் பரப்புரை முன்னெடுக்கப்பட்டது.
புலனாய்வுத்துறையைப் பலவீனப்படுத்த நாம் முயற்சிக்கவில்லை. ஓரிருவருக்கு எதிராக நடத்தப்படும் விசாரணையால் ஒட்டுமொத்தப் புலனாய்வுப் பிரிவுக்கும் அவமதிப்பு ஏற்படாது.
சர்வதேசத்திடம் இராணுவத்தைக் காட்டிக் கொடுத்தோம் என்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். நாம் ஆட்சியைப் பொறுப்பேற்றபோது நாட்டுக்கு எதிராகக் கடும் சர்வதேச அழுத்தங்கள் இருந்தன. பொருளாதாரத் தடைகள் கூட விதிக்கப்பட இருந்தன. நாம் தலையிட்டுத்தான் இந்த நிலைமையை மாற்றினோம். படையினரின் கெளரவத்தைப் பாதுகாத்து பொருளாதாரத் தடையையும் நீக்கினோம்” – என்றார்.
Comments are closed.