கொரோனாப் பீதிக்கு மத்தியில் ஆட்கடத்தல் – கடற்படையின் கண்காணிப்பு தீவிரம்

கடந்த ஜூலை மாதம் 15ஆம் திகதி முதல், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வடக்கு கடற்பரப்பில் கண்காணிப்பு நடவடிக்கைகளை இலங்கை கடற்படையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

அத்தோடு, அப்பகுதியில் சந்தேகத்துக்கிடமான கப்பல்களைச் சோதனை செய்து வருகின்றனர் எனவும் வடக்கு கட்டளை பிரிவு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலுடன், இந்தியாவில் வசிக்கும் தமிழ் அகதிகள் சிலரும் இந்தியக் கடத்தல்காரர்களும் இலங்கைக்கு தப்பி வருவது அதிகரித்துள்ளதன் காரணமாக இந்த நடவடிக்கையை கடற்படை எடுத்துள்ளது என வடக்கு கட்டளைப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த சிலருடன் இணைந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டார் எனக் கூறப்படும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவரைக் கடற்படையினரும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து அண்மையில் கைதுசெய்திருந்தனர். அவர் கொரோனா வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.

இந்தியாவிலிருந்து படகு மூலம் இலங்கைக்குத் தப்பி வருவதற்கு பாரிய குழுவினர் தயாராகவுள்ளனர் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவ்வாறு இலங்கைக்கு வருவதற்கு இருந்த குழுவினரை படகு மூலம் இலங்கைக்கு சட்டவிரோதமாகக் கடத்தும் நடவடிக்கையில் இந்திய மீனவர்கள் சிலர் ஈடுபடுகின்றனர் எனவும், இவ்வாறு இலங்கைக்கு அழைத்துவர 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் இந்திய ரூபாக்கள் அறவிடப்படுகின்றன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, இந்தத் தகவல்கள் கிடைத்தைத் தொடர்ந்து, சட்டவிரோத வருகைகளைத் தடுக்கும் வகையில், வடக்கு கடற்பரப்பில் கண்காணிப்பு நடவடிக்கைகளைக் கடற்படையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

Comments are closed.