பிதிர்க்கடன் நிறைவேற்றுவோர் அருகிலுள்ள தீர்த்தக்கரையில் பிதிர்க்கடன்களை நிறைவேற்றுங்கள் : சோ.சுகிர்தன்

எதிர்வரும் திங்கட்கிழமை ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு பிதிர்க்கடன் நிறைவேற்றும் பொதுமக்கள் நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக தத்தமது பிரதேசத்திற்கு அருகிலுள்ள தீர்த்தக்கரையில் பிதிர்க்கடன்களை நிறைவேற்றுமாறு வலி வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோ.சுகிர்தன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தங்கள் பிரதேசங்களில் பிதிர்க்கடன்களை நிறைவேற்ற வசதியில்லாதவர்கள் மட்டும் கீரிமலை தீர்த்தக்கேணியில் பிதிர்க்கடன் நிறைவேற்றுவதற்கு சில நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு சமுகமளிக்க வேண்டுமெனவும் அவர் மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதன்படி பிதிர்க்கடன் நிறைவேற்றுவோர் மட்டும் அனுமதிக்கப்படுவதுடன் ஏனையோரை அழைத்து வருவதை தவிர்க்குமாறும், பிதிர்க்கடன் நிறைவேற்ற வருவோர் உள்நுழைவதற்கு முன் பதிவினை மேற்கொள்ளவேண்டும் என்றும்தெரிவித்துள்ளார்.
மேலும் கடமை நிறைவேற்றும் குருக்கள் வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தெல்லிப்பளை உபஅலுவலகத்தில் முன்கூட்டியே பதிவினை மேற்கொள்ளவேண்டும். சகல வியாபாரங்களும் தடைசெய்யப்பட்டுள்ளதுடன் , கீரிமலைதீர்த்தக்கேணிக்கு பிரவேசிப்பதற்கு முன் உடல் வெப்பநிலையை பரிசோதிப்பதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில்பரிசோதனை செய்த பின்னரே உட்பிரவேசிப்பதற்கு அனுமதிக்கப்படுவர். மேலும் முகக்கவசம் கட்டாயம் அணிந்துவருவதுடன் பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலானோரே உள்வாங்கப்படுவர் எனவும் வலிவடக்கு பிரதேச சபை தவிசாளர் தெரிவித்துள்ளார்.
Comments are closed.