புலம்பெயர் சமூக ஆதரவு சஜித் மற்றும் கணேஸ்வரனுக்கு : தமிழ் அமைப்பின் தலைவரான சுப்பிரமணியம் சரவணா
எதிர்வரும் 5 ஆம் திகதி நடைபெறும் பொதுத் தேர்தலுக்கான தங்களது பாரிய ஆதரவை ஐரோப்பாவில் வாழும் சிங்கள , தமிழ் முஸ்லிம் புலம் பெயர் சமூகம் , ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதமர் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கும் , யாழ்.முதன்மை வேட்பாளர் கணேஸ்வரன் வேலாயுதத்துக்கும் வழங்கத் தீமானித்துள்ளதாக புலம்பெயர் சமூகத்தின் ஐக்கிய மக்கள் சக்தியின் தமிழ் அமைப்பின் தலைவரான சுப்பிரமணியம் சரவணா தெரிவித்தார்.
இது தொடர்பிலான கூட்டம் பிரான்ஸ் ஐக்கிய மக்கள் சக்தி கிளையின் ஏற்பாட்டில் பிரான்ஸில் 12-07-2020 அன்று பெகெட்டல் விளையாட்டு மைதானத்தில் அந்நாட்டு நேரப்படி பி. ப 3.00 மணிக்கு இடம்பெற்றது.
2020 ஓகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெறவிக்கும் பாராளுமன்றத் தேர்தலின் வெற்றிக்காக புலம் பெயர் ஆதரவாளர்களின் அர்ப்பணிப்பு மற்றும் பொறுப்பு தொடர்பாக அறிவுறுத்தும் கூட்டம் மற்றும் ஒன்று கூடலின் போது இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிகழ்வில் புலம்பெயர் சமூகத்தின் ஐக்கிய மக்கள் சக்தி தமிழ் அமைப்பின் தலைவரான சுப்பிரமணியம் சரவணா இவ்வாறு தெரிவித்தார்.
அவர் இக் கூட்டம் தொடர்பாக தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்
தலைவர் சாளியவின் தலைமையில் இடம்பெற்ற இக் கூட்டத்தில் இலங்கையில் ஆகஸ்ட்டில் இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான பிரச்சாரம் சூடிபிடித்துள்ள நிலையில் ஐரோப்பாவில் புலம் பெயர் சமூகம் வடக்கு கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தியை மையப்படுத்தியும் குறிப்பாக யாழ் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் முதன்மை வேட்பாளர் கணேஸ்வரன் வேலாயுதம் புலம்பெயர் சமூகத்தின் குரலாகவும் பாராளுமன்றத்தில் எதிரொலிக்க அவரது வெற்றி உறுதிப்படுத்தப்பட வேண்டும். அவர் மூலமாக யாழ் மாவட்ட மக்களுடைய கல்வி, பொருளாதார வாழ்வியலை மீளவும் கட்டி எழுப்புவதற்கு வாய்ப்பாக அமையும் என்கின்ற கருத்து தொனிப்பட முக்கிய விடயங்கள் அங்கு பேசப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இந்தச் சந்தர்ப்பத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச இணையத்தின் மூலமாக நேரலையில் வந்து உரையாற்றும் போது தனக்கு மிகவும் சந்தோசமாக இருக்கிறது. புலம்பெயர் இலங்கை மக்களின் இவ்வாறான செயற்பாடுகளுக்கு நாம் இம்முறை ஆட்சிக்கு வந்த பிறகு உங்களின் எதிர்பார்ப்புக்கு உண்மையாக செயற்படுவேன் மற்றும் தொடர்ந்து உங்களிடமிருந்து அன்பும் ஆதரவும் எமக்கு நல்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்
மக்கள் நலன் சாராது செயற்படுகின்ற இந்த அரசை அகற்ற நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம். நாம் அமைக்கின்ற அரசாங்கம் வறிய மக்களின் வாழ்வில் நலம் பெற செயற்படுவேன் என்று நான் உறுதிப்படக் கூறுகிறேன். புலம்பெயர் இலங்கையர்களின் இலங்கையிலுள்ள உங்கள் இருப்பு நலன்சார்பில் நாம் விசேட கவனம் செலுத்துவோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
குறிப்பாக வடமாகாணம் கல்வியில் மிகவும் பின்தங்கி உள்ளது. இதற்குக் காரணம் என்னவென்றால் கடந்த காலங்களில் இருந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்கள் நலனில் அக்கறையற்றும் . பராமுகமாகவும் இருந்தமையினாலேயே மக்களின் அடிப்படை நிலைமைகள் மோசமடைந்துள்ளன. இந்த மக்களுடைய பிரச்சினைகள், தேவைகள் தீர்க்கப்படாமல் இருந்ததை அவதானித்த கணேஸ்வரன் வேலாயும் தம் சொந்த செலவில் யாழ் மண்ணின் கல்வியை கட்டி எழுப்புவதற்கு முயற்சிகள் செய்து வருகிறார்.
ஆனால் அவரால் தொடர்ந்து அவற்றை செய்ய அங்குள் அரசியல்வாதிகள் விடவில்லை. தடைகள் போட்டு அவரை முடக்க முயற்சிகள் செய்தார்கள். பல கல்விமான்களுடன் உரையாடி பல சந்திப்புக்கள் நடத்தி கல்வி முன்னெடுப்பை அவர் இடைவிடாது மேற் கொண்டு வருகிறார்.
அவர் இம்முறை ஐக்கிய மக்கள் சக்தியின் முதன்மை வேட்பாளராக களமிறங்கியிருப்பதையிட்டு நாங்கள் முதலில் சந்தோசப்பட வேண்டும். ஏனென்றால் அவருடைய வெற்றியில் தான் நாங்கள் யாழ் மாவட்ட கல்வியை மேலும் மேம்படுத்தலாம். அதன் மேல் கரிசனை உள்ளவர் மூலமாகத் தான் கல்வியை கட்டி எழுப்பலாம்.
இருப்பினும் மக்களின் வாழ்க்கைத் தரம் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கிறது. குறிப்பாக முன்னாள் போராளிகளின் குடும்பகளின் நிலை மிகவும் மோசமாக இருக்கிறது. தேசிய உரிமைகள் பற்றிப் பேசுவதற்கு முன்பு இவை அனைத்துக்கும் மக்களின் வாழ்வாதாரம் முக்கிய கவனம் செலுத்தப்பட வேண்டும். குறிப்பாக கிளிநொச்சி முல்லைத் தீவு மக்கள் உலகின் வறிய மக்களாக தள்ளப்பட்டு உள்ளனர். இது ஒரு ஆபத்தான நிலையாகும்.
இனியும் நாம் உணர்ச்சிகளுக்கும் இனவாதங்களுக்கும் பிரதேச வாதங்களுக்கும் சாதிய ஒடுக்கு முறைகளுக்கு அடி பணியாது இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தக் கூடியவரும் வறிய மக்களின் சிநேகிதனுமாகிய சஜித் பிரேமதாசவின் தலைமையிலான யாழ் மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் முதன்மை வேட்பாளர் கணேஸ்வரன் வேலாயுதம் அவர்களை அனைத்து யாழ் மாவட்ட மக்களும் ஆதரிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். கணேஸ்வரன் வேலாயுதத்தின் வெற்றியின் பின்னர் நாங்கள் புலம்பெயர் தமிழர்களாக இணைந்து மிகப் பெரிய நலத்திட்ட உதவிகளை மேற்கொள்வதற்கு உள்ளோம்.
ஐரோப்பிய புலம் பெயர் சமூகத்தில் உள்ளவர்களில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்களாக 1500 க்கும் மேற்பட்ட அங்கத்தவர்கள் இருக்கின்றனர். இதில் சிங்கள சகோதரர்கள் 800 க்கு மேற்பட்டவர்களும். தமிழர்கள் 300 பேர் அளவிலும் முஸ்லிம்கள் 200 பேர் அளவிலும் உள்ளனர்.
இவர்கள் மூலம் அறவிடப்படும் நிதி உதவிகள் மூலம் இலங்கை நாட்டுக்கு பாரிய உதவிகள் செய்துள்ளோம். நீங்கள் பயப்பட வேண்டாம். இம்முறை நாங்கள் யாழ் மாவட்டத்திற்கு புலம்பெயர் சமூகத்தின் மூலமாக இனிவரும் காலங்களில் உதவிகளை வழங்கி வைப்போம்.
யாழ் மாவட்ட நமது மக்கள் தங்களது வாக்குகளால் காலம் காலமாக ஒரே பிரதிநிதிகளை தொடர்ந்து பாராளுமன்றம் அனுப்பி வருகின்றோம். அவர்கள் யாழ் மாவட்டத்திற்கு எந்தவொரு உருப்படியான வேலைகளையும் செய்ததில்லை. அவர்கள் வெறுமனே பாராளுமன்றக் கதிரைகளை சூடாக்கியது தான் மிச்சம். அவர்கள் உருப்படியான எந்த சேவையையும் மக்களுக்குச் செய்யாமல் காலத்திற்கு காலம் எதிர்ப்பு வாத அரசியலைப் பேசி மக்களை ஏமாற்றி மக்களின் வாக்கை சூறையாடும் பணியை மட்டும் மிகச் சிறப்பாக செய்துள்ளார்கள். மக்கள் ஏமாளியாக இருந்தது மட்டுமே மீதியாகவுள்ளது. வடக்குக்கு வரும் பொருளாதார உதவிகளை தடுத்து நிறுத்துவதில் கடுமையாக செயல்பட்டுள்ளார்கள்.
ஆனால் சிவன் அறக்கட்டளையின் தலைவரும் வேட்பாளருமான கணேஸ்வரன் வேலாயுதம் எவ்வித அதிகாரமுமில்லாமல் குறிப்பிடத்தக்களவு வடபுல மக்களுக்கு செய்து வரும் சேவையை யாரும் மறக்கக் கூடாது. இப்போது உங்கள் முன் அதிகாரத்தைக் கேட்டு முதன் முறையாக முன் வந்துள்ளார். சிறுபான்மை இனமாகிய நாங்கள் தமது இருப்பை பாதுகாத்துக் கொள்ளவும் உரிமைகளை வென்றெடுக்கவும் ஆளுமைமிக்க சேவை மனப்பாங்குடைய அரசியல் பிரமுகர்களை பாராளுமன்றுக்கு அனுப்பவில்லை என்றால் எதிர்கால சந்ததியினருக்காக நாங்கள் பாரிய துரோகமிழைத்தவர்களாக வரலாறு எங்களை குற்றவாளிகளாக்கி பதிவு செய்யும்.
ஆகையால் இம்முறை யாழ் மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் வேலாயுதம் கணேஸஸ்வரனை அப் பகுதி மக்கள் பெற்றி பெறச் செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் ஐரோப்பிய புலம்பெயர் சமூகம் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளனர். அந்த தீர்மானத்திற்கு யாழ் மாவட்ட மக்கள் நல்லாதரவு நல்குவார்கள் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.
இலங்கை மண்ணில் வாழும் தொப்புள் கொடி உறவுகளிடம் நாங்கள் வேண்டிக் கொள்வது வடக்கு கிழக்கு போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசம். அப்பிரதேசம் இன்னும் ஒரு சரியான மீள் கட்டமைப்புக்கு வரவில்லை. கல்விப் பிரச்சினைகள், இளைஞர் யுவதிகளின் வேலை வாய்ப்பு, பொருளாதார வளர்ச்சி திட்டங்கள் என பல பிரச்சினைகள் உள்ளன. இவை போன்று எத்தனையோ பிரச்சினைகள் இருக்கலாம். அவற்றை அரசியல் அதிகாரம் உள்ளவரால் தான் பெற்றுக் கொள்ள முடியும். அதிகாரம் இல்லாத எவராலும் பெற்றுக் கொள்ள முடியாது.
இம்முறை எங்களுடைய தெரிவில் ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட வேட்பாளர் கணேஸ்வரன் வேலாயும் அவர்களுடைய வெற்றிதான் யாழ் மாவட்டத்தின் பொற்காலமாகக் கருதப்படும். கணேஸ்வரன் வேலாயுதம் கல்வி எழுச்சிக்கு மட்டுமல்ல விளையாட்டுத் துறை, சமூகப் பொருளாதாரம் போன்றவற்றை கட்டி எழுப்புதவதற்காக தன்னலம் கருதாது அயராது பாடுபட்டு வரும் ஒருவராக செயல்பட்டு வருகிறார்.
அந்த வகையில் வடக்கு மண்ணின் வளத்திற்கும் வளர்ச்சிக்கும் போராடும் கணேஸ்வரன் வேலாயுதம் அவர்களுடன் போட்டியிடும் ஏனைய வேட்பாளர்களும் வெற்றி பெற வேண்டும் என்பது தான் எங்களுடைய எதிர்பார்ப்பாகும். இம்மாவட்டத்தில் மூன்று பேர் ஐக்கிய மக்கள் சக்தியில் தெரிவு செய்யப்படலாம் என்று எதிர்வு கூறப்படுகிறது.
தொடர்ந்து தேசிய வாதம் எதிர்ப்பு வாதம் என்று பேசி மக்களை ஏமாற்றி வரும் வேட்பாளர்களை இன்று மக்கள் நம்பத் தயாரராக இல்லை. மக்கள் சரியான முடிவை எடுத்து ஒரு நல்லதொரு தீர்மானத்திற்கு வந்திருப்பதாக அறிகின்றோம். குறிப்பாக ஜனாதிபதித் தேர்தலின் போது தமது வாக்கை யாருக்கு செலுத்தினார்களோ அந்த ஜனாதிபதியின் தலைமையிலான கட்சியில் போட்டியிடும் அணியினருக்கே யாழ் மக்கள் மக்கள் தங்களுடைய வாக்குகளை வழங்க உறுதியான தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளதாக நாங்கள் அறிகின்றோம்.
அந்த வகையில் நிச்சயமாக ஐரோப்பிய புலம் பெயர் சமூகம் எடுத்த தீர்மானத்திற்கு யாழ் மாவட்ட மக்களும் முழு ஆதவு தந்து உதவுவார்கள் என்று நாங்கள் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கின்றோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் இலங்கையில் இருந்து பொதுச் செயலாளர் ரஞ்ஜித் மத்தும பண்டார, விஜித முனி சொய்சா, மரைக்கார், அஜித் பிரேரா, திஸ்ஸ அத்தநாயக மற்றும் யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளர் கணேஸ்வரன் வேலாயுதம் ஆகியோர் நேரலையாகவும் குலேட் நாலக தேவேந்திர, அஜித் ரணசிங்க ரனவி பண்டார, மற்றும் சுப்ரமணியம் சரவணா ஆகியோர் நேரடியாக உரையாற்றினர்.
– ஜீவராஜ்
19-07-2020
Comments are closed.