தேர்தலில் ராஜபக்ச அரசை படுகுழிக்குள் தள்ளுவோம்!- அநுராதபுரத்தில் ரணில்

“நாட்டின் பொருளாதாரத்தைப் படுகுழிக்குள் தள்ளிய ராஜபக்ச அரசையும் இந்தப் பொதுத்தேர்தலில் நாம் படுகுழிக்குள் தள்ளவேண்டும். அப்போதுதான் படுகுழிக்குள் தள்ளப்பட்டிருக்கும் பொருளாதாரத்தை நாம் இலகுவாக மீட்டெடுக்க முடியும்.”

– இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

அநுராதபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“பொதுத்தேர்தல் என்பது ஒரு நாட்டின் அரசைத் தெரிவு செய்வதற்கான தேர்தலாகும். அவ்வாறெனில் அதில் போட்டியிடுகின்ற கட்சிகள் தமது கொள்கைகளைப் பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். எனினும், இம்முறை பொதுத்தேர்தலுக்கான கொள்கைப் பிரகடனத்தை எமது கட்சியே முதலில் வெளியிட்டிருக்கின்றது.

அதேவேளை, சுயதேவைப்பூர்த்தியை அடைந்த நாட்டை உருவாக்குவோம் என்று ஆளுந்தரப்பு கூறிவருகின்றது. ஏற்கனவே எமது நாடு பல்வேறு உணவுப்பொருள் உற்பத்திகளிலும் சுயதேவைப்பூர்த்தி அடைந்த நாடாகவே இருக்கின்றது. ஆனால், அதனால் மாத்திரம் மக்களின் ஏனைய அனைத்துப் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கும் தீர்வை வழங்கிவிட முடியுமா? எனவேதான் மக்களின் பொருளாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கான திட்டங்களையும் எமது கொள்கைப் பிரகடனத்தில் உள்ளடக்கியிருக்கும் அதேவேளை, எதிர்வரும் 2050 ஆம் ஆண்டளவில் சுமார் 500 மில்லியனால் அதிகரிக்கப்போகும் இந்துசமுத்திரப் பிராந்திய நாடுகளின் சனத்தொகைக்கு உணவை வழங்கக்கூடிய வகையில் தூரநோக்குடனான உற்பத்தியை ஊக்குவிப்பதற்கும் திட்டமிட்டிருக்கின்றோம்.

அதற்கேற்றவாறு உணவு உற்பத்தியில் ஈடுபடுபவர்களுக்கான காணிகளைப் பெற்றுக்கொடுத்தல், ஏனைய ஆரம்பகட்ட வசதிகள் மற்றும் ஒத்துழைப்புக்களை வழங்கல், நாடளாவிய ரீதியில் பெருமளவான களஞ்சியசாலைகளை நிறுவுதல் போன்றவற்றைப் பொதுத்தேர்தலின் ஊடாக நாம் ஆட்சியமைக்கும் பட்சத்தில் செய்வதற்கு எதிர்பார்த்திருக்கிறோம். அதுமாத்திரமன்றி அடுத்த வருடத்திலிருந்து நாட்டுக்கு சுற்றுலாப்பயணிகளை வரவழைப்பதற்கான விசேட திட்டமொன்றையும் செயற்படுத்தம் இருக்கின்றோம்.

வரலாற்றைப் பொறுத்தவரை எமது நாட்டை வேறு கட்சிகள் படுகுழிக்குள் தள்ளியபோதெல்லாம் ஐக்கிய தேசியக் கட்சியே நாட்டையும், பொருளாதாரத்தையும் மீட்டெடுத்து வந்திருக்கின்றது. அதற்கேற்பவே இம்முறையும் எம்மைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தி, படுகுழிக்குள் தள்ளப்பட்டிருக்கும் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான செயற்றிட்டத்தை முன்வைத்திருக்கின்றோம்.

எனவே, நாட்டின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு மக்களும் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். நாட்டின் பொருளாதாரத்தைப் படுகுழிக்குள் தள்ளிய ராஜபக்ச அரசையும் இந்தப் பொதுத்தேர்தலில் நாம் படுகுழிக்குள் தள்ளவேண்டும். அப்போதுதான் படுகுழிக்குள் தள்ளப்பட்டிருக்கும் பொருளாதாரத்தை நாம் இலகுவாக மீட்டெடுக்க முடியும்” – என்றார்.

Comments are closed.