PHI அதிகாரிகளுக்கு அதிகாரமற்ற வர்த்தமானி அறிவித்தல்! வெறும் வெற்றுக் கடதாசி!
2020 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலை நடத்துவதற்கான சுகாதார ஒழுங்கு விதிகள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சியினால் நேற்றிரவு இந்த அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த்தடுப்பு தொடர்பான கட்டளைச்சட்டத்திற்கு அமைய இந்த ஒழுங்கு விதிகள் அடங்கிய வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது. வேட்பாளர்களின் தேர்தல் பிரசாரக் கூட்டம், தேர்தல் பிரசார அலுவலகம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இந்த அதிவிசேட வர்த்தமானியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தேர்தல் பிரசாரக் கூட்டம் நடத்துவதாயின் 24 மணித்தியாலத்திற்கு முன்னர், பிரதேசத்திற்கு பொறுப்பான சுகாதார மருத்துவ அதிகாரிக்கு எழுத்து மூலம் அறிவிக்க வேண்டும் என இந்த அதிவிசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கட்சி அல்லது சுயேட்சைக் குழுவின் தலைவர் பங்கேற்கும் கூட்டமொன்றில் 500 பேருக்கும் அதிகமானவர்கள் பங்கேற்க முடியாது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்கும் ஆதரவாளர்களின் பெயர், அடையாள அட்டை இலக்கம், முகவரி, அவர்களைத் தொடர்பு கொள்ளக்கூடிய தொடர்பிலக்கங்கள் உள்ளிட்ட தகவல்களை ஏற்பாட்டாளர் பெற்றுக்கொள்ளுதல் அவசியம் எனவும் வர்த்தமானியில் கூறப்பட்டுள்ளது.
ஒலிவாங்கிகளை ஒருவர் பயன்படுத்திய பின்னர் கட்டாயம் கிருமித்தொற்று நீக்கம் செய்ய வேண்டும் எனவும் ஒழுங்கு விதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மீட்டர் இடைவௌி பேணுதல், கூட்டத்தில் கலந்துகொள்ளும் அனைவரும் முகக்கவசம் அணிதல் என்பன கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தேர்தல் பிரசாரத்திற்காக கையேடுகள் அல்லது அச்சிடப்பட்ட பொருட்களை விநியோகிக்க செல்லும் குழுவில் அதிகபட்சம் 05 பேர் வரை மாத்திரமே பங்கேற்க முடியும்.
எனினும் இந்த சுகாதார விதிமுறைகளை மீறி செயற்படுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தை பொது சுகாதார பரிசோதகர்களுக்கு வழங்கவில்லை. அதனால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெறும் வெற்றுக் கடதாசி என விமர்சிக்கப்பட்டுள்ளது.
Comments are closed.