கொழும்பில் நடுத்தர வர்க்க மக்களுக்கு விசேட வீட்டுத்திட்டம் சஜித் ஆட்சியில் அமுலாகும் -மனோ கணேசன்

கொழும்பில் வாடகை வீடுகளில் வாழும் மத்திய வர்க்கத்தை சார்ந்த அரசு ஊழியர்கள், தனியார் ஊழியர்கள், சுயதொழில் செய்பவர்கள் ஆகிய நடுத்தர மட்ட வருமானம் பெறுகின்ற குடும்பங்களுக்கு, அவர்கள் இன்று வாடகையாக செலுத்தும் தொகையையே சொந்த வீட்டுக்கான மாத கட்டணமாக மாற்றி அவர்களுக்கு சொந்த மனைகளை வழங்கும் வீட்டுத்திட்டத்தை சஜித் ஆட்சியில் முன்னெடுப்போம் என முன்னாள் தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சரும், கொழும்பு மாவட்ட எம்பியுமான மனோ கணேசன் கூறியுள்ளார்.

மட்டக்குளிய, வெள்ளவத்தை, கொட்டாஞ்சேனை ஆகிய பகுதிகளில் நடைபெற்ற பிரசார கூட்டங்களில் உரையற்றிய மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,

எமது நல்லாட்சியின் போது, வடகொழும்பில் 13,500 தொடர்மாடி வீட்டுமனைகளை கட்டி பின்தங்கிய குடிசைகளில் இங்கு வாழும் மக்களை புதிதாக குடியமர்த்தினோம். இன்னமும் இத்தகைய 10,000 தொடர்மாடி வீட்டு மனைகளுக்கு அடித்தளம் இட்டுள்ளோம். கடந்த நான்கு வருடங்களில் வட கொழும்பில் குடிசைகள் வெகுவாக மறைந்து விட்டன. நண்பர் அமைச்சர் சம்பிக ரணவக்க இந்த அபிவிருத்திக்கு பொறுப்பாக இருந்தார். இந்த வீட்டு திட்டங்களில் பாரபட்சமின்றி குடிசைகளில் வாழ்ந்த தமிழ், முஸ்லிம் மக்களே பெரும்பான்மையாக குடியேற்றப்பட்டார்கள். பாரபட்சங்கள் நிகழாவண்ணம் நாம் கண்காணித்து கொண்டோம்.

இதற்கு முந்தைய ராஜபக்ச அரசாங்க காலத்தில் இந்த தமிழ், முஸ்லிம் மக்களை கொழும்பில் இருந்து வெளியேற்ற முயற்சிகள் நடந்ததையும், அப்போது அவற்றுக்கு எதிராக நாம் போராடி அவற்றை தடுத்து நிறுத்தியதையும் மக்கள் மறக்க மாட்டார்கள்.

அதேபோல் மத்திய தர வர்க்க மக்களுக்கான விசேட வீட்டு மனைத்திட்டத்தை முன்னெடுக்கும்படி கோரிகைகளை பலமுறை நான் அன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் விடுத்தேன். என்னுடன் இணைந்து இதற்காக நண்பர் முஜிபுர் ரஹ்மானும் கோரிக்கை விடுத்தார். எனினும் பிரதமர் ரணில் இதை கடைசிவரை தட்டிக்கழித்தே விட்டார். இந்த நடுத்தர வர்க்க மக்களுக்கான வீட்டுத்திட்டம் நடைமுறையாகும் பட்சத்தில், அது அன்றைய தேசிய வீடமைப்பு அமைச்சராக இருந்த சஜித் பிரேமதாசவின் கீழ் வந்திருக்கும். இதுதான் இந்த திட்ட ஆலோசனை ஏற்றுக்கொள்ளப்படாததன் காரணாமா என எனக்கு புரியவில்லை.

எனினும் எமது ஆட்சியின் கீழ் இந்த திட்டம் நடைமுறையாகும். இது கொழும்பில் பெரும்பான்மையாக வாடகை வீடுகளில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக அமையும்.

Comments are closed.