கொரோனாவால் இ.போ.சவுக்கு நாளாந்தம் 10 மில்லியன் ரூபா நட்டம் : மஹிந்த அமரவீர
கொரோனாத் தொற்றுப் பரவலால் இலங்கை போக்குவரத்துச் சபைக்குத் தினமும் 10 மில்லியன் ரூபா வருமான இழப்பு ஏற்படுகின்றது என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,
“கொரோனா வைரஸ் தொற்று நாட்டின் அனைத்துத் துறைகளிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை மின்சார சபையும் பாரிய நட்டத்தை சந்தித்துள்ளது. என்றாலும் வரலாற்றில் என்றுமில்லாத சலுகையை மின்சார சபை மக்களுக்கு பெற்றுக்கொடுத்துள்ளது. 17 இலட்சம் வரையான வறுமையான குடும்பங்களுக்கு இன்னமும் 2 ரூபா 60 சதத்ததில் தான் ஒரு அலகு மின்சாரத்தை வழங்கி வருகின்றோம்.
கடந்த ஐந்து வருடக்காலப்பகுதியில் எவ்வித மின்சார உற்பத்தித் திட்டங்களும் ஆரம்பிக்க படாமையால் ஒவ்வொரு வருடமும் மின்சார நெருக்கடிக்கு நாம் முகங்கொடுத்து வருகின்றோம். இவ்வருடமும் மின்சார நெருக்கடிக்கு முகங்கொடுக்க நேரிடுமென நாம் எதிர்பார்த்த போதிலும் அவ்வாறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்கவில்லை. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மின்சாரத்துக்கான கேள்வி குறைவடைந்துவிட்டது.
அரசுக்கான வருமான வழிமூலங்கள் விலகியுள்ள போதிலும் மக்களுக்கு சலுகைகளை தொடர்ந்து பெற்றுக்கொடுத்து வருகின்றோம். மின் கட்டணங்களுக்கு பாரிய சலுகைகளைப் பெற்றுக்கொடுத்துள்ளோம்.
மின்சார சபை வழங்கியுள்ள சலுகையில் இதுவே மிகவும் உயரிய சலுகையாகும். இதனால் மின்சார சபைக்கு 30ஆயிரம் இலட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது.
அரசு இந்தச் சுமையை சுமந்துக்கொண்டுதான் மக்களுக்குச் சலுகையை வழங்கியுள்ளது.
கடந்த வாரம் நாம் நடத்தியுள்ள ஆய்வுகளின் பிரகாரம் 5 ஆயிரத்து 300 பஸ்களை இலங்கை போக்குவரத்துச் சபை தினமும் சேவையில் ஈடுபடுத்துகின்ற போதிலும் தினமும் 10 மில்லியன் ரூபா வருமான இழப்பு ஏற்படுகின்றது. கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவலின் காரணமாக மக்கள் பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்துவதைக் குறைத்துள்ளனர்” – என்றார்.
Comments are closed.