புதிய நாடாளுமன்றில் ’19’ இற்குச் சாவு மணி! – பீரிஸ்
“ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையில் புதிய நாடாளுமன்றம் கூடும். இதன்போது முதல் வேலையாக அரசமைப்பின் 19ஆவது திருத்தத்துக்கு முடிவு கட்டுவோம். இந்தத் தீர்மானத்தில் மாற்றம் எதுவும் இல்லை.”
– இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தவிசாளர் பேராசிரியர் ஜி. எல்.பீரிஸ் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் காரியாலயத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் சுபீட்சமான எதிர்காலக் கொள்கையைச் செயற்படுத்தும் பலமான நாடாளுமன்றம் தோற்றம் பெற வேண்டும் என்பதில் பெரும்பாலான மக்கள் அதிகளவில் அக்கறை கொண்டுள்ளார்கள். நிறைவேற்றுத்துறையும், சட்டத்துறையும் முரண்பட்டால் ஏற்படும் விளைவுகள் குறித்த அனுபவம் மக்களுக்கு உண்டு. ஆகவே, மீண்டும் அந்தத் தவறை மக்கள் செய்யமாட்டார்கள்.
நல்லாட்சி அரசின் முறையற்ற செயற்பாடுகளினால் ஏற்பட்டுள்ள அரசமைப்புசார் மற்றும் பொதுப் பிரச்சினைகளுக்குப் புதிய அரசில் தீர்வைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இதற்காகவே மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆதரவைக் கோருகிறோம். காலம் தாழ்த்தப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை இவ்வருடத்துக்குள் நடத்த சாதகமான தேர்தல் முறைமையை உருவாக்க வேண்டும்.
2018 ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதலின் உண்மைக் காரணி இதுவரையில் அறியப்படவில்லை. தேசிய பாதுகாப்பு பலவீனமடைந்தால் அடிப்படைவாதம் மீண்டும் நாட்டில் தலைத்தூக்கியது. தேசிய பாதுகாப்பைப் பலப்படுத்தத் தற்போது நடைமுறையிலுள்ள பாதுகாப்புசார் சட்டங்கள் திருத்தம் செய்யப்பட்டு தேவைக்கேற்ப புதிய சட்டங்கள் உருவாக்கப்படும்.
நல்லாட்சி அரசால் ஏற்படுத்தப்பட்ட அரசமைப்பின் 17 மற்றும் 19ஆவது திருத்தங்களில் உருவாக்கப்பட்ட சுயாதீன ஆணைக்குழுக்கள் அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு ஒருதலைப்பட்சமாகவே செயற்படுகின்றன என்பதற்கு கடந்த காலங்களில் இடம்பெற்ற பல சம்பவங்கள் சிறந்த எடுத்துக்காட்டு. ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் பொதுத்தேர்தலில் அரசியல்வாதிகளுக்கு ஆதரவாக மேடையேறுகின்றார்கள்.
உயர் அதிகாரிகளை நியமிக்கும் அரசமைப்புப் பேரவையின் உறுப்பினர்கள் அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளார்கள். தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு வாக்களிக்க வேண்டாம் எனக் குறிப்பிடுகிறார். ஆகவே, இவர்களின் செயற்பாடுகளினால் ஆணைக்குழுக்களின் சுயாதீனத்தன்மை கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. உயர் அதிகாரிகளைப் பதவிக்கு நியமிக்கும் அதிகாரம் புதிய அரசில் அரசமைப்பின் பிரகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்படும்” – என்றார்.
Comments are closed.