5ஆம் திகதிக்குப் பின்னர் சுமந்திரனின் பெயரை உச்சரிக்க வேண்டியதேவை மக்களுக்கு இருக்காது : கஜேந்திரகுமார்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் பெயரை எதிர்வரும் ஓகஸ்ட் 5ஆம் திகதிக்குப் பின்னர் உச்சரிக்க வேண்டியதேவை மக்களுக்கு இருக்காது என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் கொக்குவிலில் அமைந்துள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகலத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது;
யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று முன்தினம் கட்சிகளுக்கு இடையிலான விவாதம் நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திடீரென அந்த நிகழ்ச்சி ரத்துச் செய்ய்பபட்டது. எமது கட்சியின் சார்பில் சட்ட ஆலோசகர்களான சுகாஷ் மற்றும் காண்டீபன் ஆகியோர் கலந்துகொள்ளவிருந்தனர். எனினும் நான் கலந்துகொள்ளவில்லை எனத் தெரிவித்து தாம் நிகழ்வுக்கு வரவில்லை என்று சுமந்திரன் கூறியதாக ஊடகங்கள் வாயிலாக அறிந்தேன்.
சுமந்திரன் முதலில் ஒன்றைப் புரிந்துகொள்ளவேண்டும் நான் ஒரு கட்சியின் தலைவராக இருக்கின்றேன். அப்படியாயின் இன்னொரு கட்சியின் தலைவருடனேயே நான் விவாதத்திற்கு செல்லவேண்டும். அதனாலேயே எனது சட்ட ஆலோசகரை அந்த நிகழ்வுக்கு அனுப்பத் திட்டமிட்டேன். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் பதவியையும் இழந்து வெறுமனே சட்ட ஆலோசகராவே சுமந்திரன் தற்போது செயற்பட்டுவருகின்றார். அவர்களுடன் விவாதம் செய்ய பயம் ஏற்பட்டதன் காரணமாக அவர் வரவில்லை.
சுமந்திரன் பொது வெளிகளில் குறிப்பிடுகின்ற கருத்துக்களை கட்சியின் கருத்தாக எடுக்கவேண்டாம் என கூட்டமைப்பின் தலைவரே கூறிவருகின்றார். அது மட்டுமல்லாது சுமந்திரனின் கருத்துக்களை கணக்கில் எடுக்கத்தேவை இல்லை என்று பல தடவை கூட்டமைப்பின் தலைவர் கூறிவருகின்றார். அப்படியாயின் கூட்டமைப்பில் சுமந்திரன் வெறுமனே சட்ட ஆலோசகராகவே இருக்கின்றார்.
எதிர்வரும் ஓகஸ்ட் 5ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலின் பின்னர் அவரது பெயரை உச்சரிக்கவேண்டிய தேவை இருக்காது. அதனால்தான் எனது கட்சி உறுப்பினர்களுக்கும் சுமந்திரனின் பெயரை இனி உச்சரிக்கக்கூடாது என கூறிவைத்துள்ளேள் – என்றார்.
Comments are closed.