139 ஆசனங்களுக்கு மேல் வெற்றி பெறும் ‘மொட்டு’ : லக்ஷ்மன் யாப்பா
“ஐக்கிய தேசியக் கட்சி பிளவுபட்டுள்ள நிலையில் கட்சி ஆதரவாளர்கள் அதிகளவில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் இணைந்து வருகின்றனர். தேர்தல் தொடர்பான புதிய கணிப்பீட்டின் பிரகாரம் 139 ஆசனங்களைத் தாண்டி ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி வெற்றியடையவுள்ளது.”
– இவ்வாறு முன்னாள் இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய கணிப்பீட்டின் பிரகாரம் 2010 ஆம் ஆண்டைவிட அதிக வாக்குகள் ராஜபக்ச அணிக்குக் கிடைக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இரண்டாவது கொரோனா அலை பற்றி எதிரணி பரவலாகப் பேசி வருகின்றது. தேர்தலுக்கு முகங்கொடுக்கும் பயத்தில் எதிரணியால் இவ்வாறு பொய்ப்பிரசாரம் முன்னெடுக்கப்படுகின்றது. இவர்கள்தான் தேர்தலை ஒத்திவைக்குமாறு நீதிமன்றம் சென்றார்கள்.
1989 இல் ஜே.வி.பி. கலவரத்திலும் தேர்தல் நடைபெற்றது. பொதுமக்களும் அரசியல் பிரதிநிதிகளும் எவ்வாறு நடக்க வேண்டும் எனத் தெளிவுபடுத்தும் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
தேர்தலில் போட்டியிட முடியாவிட்டால் வேட்புமனுவை இரத்துச் செய்துவிட்டு தேர்தலில் இருந்து ஒதுங்க முடியும்.
தொடர்ந்து தேர்தலை ஒத்திவைத்து அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தவே இவர்கள் முயல்கின்றனர்.
ஜனாதிபதித் தேர்தலில் மக்களுக்கு அங்கீகரித்த கொள்கையை முன்னெடுக்கவே நாம் மக்கள் ஆணையைக் கேட்கின்றோம்.
குடும்பங்களுக்கு 20 ஆயிரம் ரூபா வீதம் வழங்கப்படும் என்று சஜித் கூறியுள்ளார். அவர் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கூறிய எதனையும் மக்கள் ஏற்கவில்லை” – என்றார்.
Comments are closed.