அரசியலில் சின்னப் பொடியன் சுமந்திரன் எமது அடிகளை தாங்குவானா – சிறீகாந்தா சீற்றம்
சித்து விளையாட்டுகளை காட்டி தன்னை ஜாம்பவனாக காட்டிக்கொள்ள முனைகிறார் தம்பி சுமந்திரன். அரசியலில் சின்னவன் எங்களுக்கு சவால்விடுக்கின்றான். எங்கள் அடிகளை சின்னப்பெடியன் தாங்கிக்கொள்வானா என்பதனை நாம் பொறுத்திருந்து பார்ப்போம், என தமிழ் தேசியக் கட்சியின் தலைவர் ஶ்ரீகாந்தா தெரிவித்தார்.
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தேர்தல் பரப்புரைக்கூட்டம் நேற்று கொக்குவில், பொற்பதியில் இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றத் தவறிவிட்டது. நல்லாட்சி அரசோடு தேனிலவு கொண்டாடினார்களே தவிர தமிழ் மக்களின் நீண்டகால கோரிக்கைகளில் ஒன்றைக்கூட நிறைவேற்றவில்லை.
எமது மண்ணில் சிங்களக் குடியேற்றங்கள் நிறுவுவதற்கு கடந்தகாலத்தில் கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்கியுள்ளது. எமது பூர்வீக ஆலயங்களின் இருப்பு கேள்விக்குறியாகிய நிலையில் மௌனம் காத்தார்கள். போர்க்குற்ற விசாரணையினை இலங்கை அரசு தட்டிக்கழிப்பதற்கு கூட்டமைப்பு இடம்கொடுத்துள்ளது.
இதனாலேயே இந்த தலைமை நிராகரிக்கப்பட வேண்டும். தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தினை முன்னெடுக்க ஒரு தலைமைத்துவம் வேண்டும் என்ற வகையிலேயே இந்த தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியை உருவாக்கியுள்ளோம்.
எமது கூட்டணியில் உள்ளவர்கள் இன்று நேற்று அரசியலுக்குள் வந்தவர்கள் அல்ல. நீண்டகாலமாக அரசியலில் உள்ளவர்கள். சரியும் தமது ஆதரவை நிலைநாட்டுவதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு பல சித்து விளையாட்டுகளை மேற்கொண்டு வருகிறது. கூட்டமைப்பின் முடிக்குரிய இளவரசர் என கருதப்படும் தம்பி சுமந்திரன் சவால் ஒன்றை விடுத்திருக்கின்றார். அவருடைய சவால் மிகவும் அற்பமானதாக உள்ளது.
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் விவாதத்திற்காக தமிழ் கட்சிகளை அழைத்திருந்தனர். எமக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அந்த அழைப்பினை உடனடியாக ஏற்றுக்கொள்ளாது விட்டாலும் அதனை நாம் உடனடியாக நிராகரிக்கவில்லை. எமது பிரச்சார கூட்டங்களை ஆராய்ந்ததன் பின்னர் குறித்த திகதியில் விவாதத்தில் கலந்துகொள்ள முடியாது என கூறியிருந்தோம். ஆனால் தம்பி சுமந்திரன் கொக்கரிக்க ஆரம்பித்திருக்கிறார். அதுவும் கூரை மீது ஏறி கொக்கரிக்க ஆரம்பித்து இருக்கிறார்கள்.
கட்சிகளின் தலைவர்கள் முதுகுக்கு பின்னால் பேசுகின்றனர் நேருக்குநேர் பேச தயங்குகின்றனர் என தம்பி சுமந்திரன் தெரிவித்து இருக்கிறார். தம்பி சுமந்திரனின் சவாலை ஏற்று நாம் விவாதத்திற்கு வருகின்றோம். ஆனால் சில நிபந்தனைகளை நாம் விதிக்கின்றோம். அதாவது விவாதமானது பகிரங்கமாக மக்கள் முன்னிலையில் நடத்தப்பட வேண்டும். எதைப்பற்றி விவாதிக்க போகின்றோம் என்பது முன்பே திட்டமிடப்பட வேண்டும். விவாத மேடைக்கு அருகில் ஆயுதம் தாங்கிய படைத்தரப்பு வரமுடியாது. இவற்றை ஏற்றுக்கொண்டால் தம்பி சுமந்திரன் எங்களுடன் விவாதத்திற்கு வரலாம்.
நாங்கள் நெருப்பைக் கடந்து அரசியலுக்குள் வந்தவர்கள். யாருடைய வாலைப்பிடித்தும் அரசியலுக்குள் வந்தவர்கள் அல்ல. சுமந்திரன் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் வந்தபோது நானும், சிவாஜிலிங்கமும் இல்லை. அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தன்னை வளர்த்துக்கொண்ட சுமந்திரன் அதிகம் ஆடக்கூடாது. “ஆலையில்லா ஊருக்கு இலுப்பம் பூ சக்கரை” என்பார்கள், “குருடர்கள் மத்தியில் ஒற்றைக் கண்ணன் ராஜா” இது தான் இன்றைய கூட்டமைப்பின் நிலை.
ஶ்ரீலங்கா அரசில் விண்ணப்பித்து ஜனாதிபதி சட்டத்தரணி பதவியை பெற எப்போதும் விரும்பியதில்லை. நான் ஜனாதிபதி சட்டத்தரணி பதவியை பெறுவதாக இருந்தால் பிரேமதாசா காலத்திலேயே பெற்றிருப்பேன். நான் ஜனாதிபதி சட்டத்தரணியாக அல்ல ஐனங்களின் சட்டத்தரணியாக இருக்கிறேன் என்றார்
Comments are closed.