சி.ஐ.டியில் திங்கள் முன்னிலையாகுமாறு ரிஷாத்துக்கு நீதிமன்றம் அழைப்பாணை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இடம்பெறும் விசாரணைகளுக்கமைய, எதிர்வரும் 27ஆம் திகதி திங்கட்கிழமை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு நீதிமன்றத்தால் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

தம்மால் இரு தடவைகள் விடுக்கப்பட்ட அழைப்பு தொடர்பில் சமூகமளிக்கவில்லை என சி.ஐ.டியினால் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து குறித்த உத்தரவை நீதிமன்றம் விடுத்துள்ளது.

இன்று (21) கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றில் இது தொடர்பில் அறிவித்ததைத் தொடர்ந்து, எதிர்வரும் திங்கட்கிழமை முற்பகல் 9 மணிக்கு குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு ரிஷாத் பதியுதீனுக்கு நீதிமன்றத்தால் அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது எனப் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஏற்கனவே, இது தொடர்பில் அண்மையில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் 10 மணித்தியாலத்துக்கும் மேலாக ரிஷாத் வாக்குமூலம் வழங்கியிருந்தார். இதையடுத்து தேர்தல் வேளையில் தனது தேர்தல் பிரசாரத்துக்கு இடையூறு ஏற்படுகின்றது எனத் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் அவர் விசனம் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் ஆராய்ந்த தேர்தல்கள் ஆணைக்குழு, குறித்த விசாரணையை தேர்தலுக்குப் பின்னர் எதிர்வரும் ஓகஸ்ட் 10ஆம் திகதியளவில் முன்னெடுக்குமாறு, பதில் பொலிஸ்மா அதிபருக்குக் கடிதமொன்றை அனுப்பியிருந்தது.

ஆனால். இதையும் மீறி சி.ஐ.டி. விசாரணைக்கு ரிஷாத் மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார்.

Comments are closed.