பிரபாகரனின் வழியில் கூட்டமைப்பினர்; ‘சமஷ்டி’, தன்னாட்சி’க்கு இடமே இல்லை!- மஹிந்த திட்டவட்டம்
“பிரபாகரன் தலைமையிலான தமிழீழ விடுதலைப்புலிகள் சமஷ்டி கேட்டார்கள், தன்னாட்சி கேட்டார்கள், தமிழீழம் கேட்டார்கள், தனிநாடு கேட்டார்கள். இதையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் ஒவ்வொன்று ஒவ்வொன்றாகக் கேட்டு வருகின்றார்கள். எமது ஆட்சியில் இவை தொடர்பான பேச்சுக்கே இடமில்லை.”
– இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவரான பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கான பொதுத்தேர்தல் விஞ்ஞாபனத்தை இலங்கைத் தமிழரசுக் கட்சி கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்டது. சமஷ்டி அடிப்படையிலான தன்னாட்சியே தீர்வு என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலே பிரதமர் மஹிந்த ராஜபக்ச மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“எமது ஆட்சியில் சமஷ்டி, தன்னாட்சி, தமிழீழம், தனிநாடு என்ற பேச்சுக்கே இடமில்லை. எமது ஆட்சியில் இவை ஒன்றுமே கிடைக்காது. மூவின மக்களின் பிரச்சினைகளையும் ஒரே மேசையில் வைத்தே பேசுவோம். மூவின மக்களுக்கும் உரித்தான தீர்வையே நாம் வழங்குவோம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேட்கின்றது என்பதற்காகவோ அல்லது சர்வதேச எமக்கு அழுத்தம் கொடுக்கும் என்பதற்காகவோ எமது நிலைப்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தமாட்டோம்.
இலங்கை தனி ஓர் இனத்துக்குச் சொந்தமான நாடு அல்ல; இது ஒரு பல்லின நாடு. இந்த நாட்டுக்கென ஓர் அரசு உண்டு; சட்டம் உண்டு; இறையாண்மை உண்டு. இதை மீறி எவரும் செயற்பட முடியாது” – என்றார்.
Comments are closed.