நான் கட்சியின் நலனுக்கு அப்பால் மக்களது நலன்களையே முக்கியமானதாகக் கருதுகின்றேன் – டக்ளஸ் தேவானந்தா
மக்களின் தன்னம்பிக்கைக்கும் அவர்களது வாழ்வாதார மேம்பாடு மற்றும் அபிவிருத்திக்கும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி என்றென்றும் பக்கபலமாக இருக்கும் என செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் –
உரிமை என்ற சொல்லை தமிழ் தேசியவாதம் பேசும் தரப்புகள் தேர்தல் காலத்தில் மட்டும் தான் பயன்படுத்துகின்றார்களே தவிர ஏனைய காலங்களில் அந்த சொல்லை மறந்துவிடுகின்றார்கள்.
நான் கட்சியின் நலனுக்கு அப்பால் மக்களது நலன்களையும் மேம்பாடுகளையுமே முக்கியமானதாகக் கருதுகின்றேன். நாம் எனது மக்களுக்காக கடந்த காலங்களில் அரசுகளுடன் இணக்க அரசியலை முன்னெடுத்து அதனூடாகப் பலவற்றை செயற்படுத்திக் காட்டியுள்ளோம்.
ஆனால் தேர்தல் என்று அறிவிக்கப்பட்டவுடன் எந்தவிடயத்தை கையில் எடுத்து தேர்தலில் வெற்றி பெறலாம் என்ற நோக்குடன் செயற்படும் இதர தமிழ் தரப்பினர் தமது தேர்தல் வெற்றிக்காக பொய் வாக்குறுதிகளை மட்டுமன்றி நடைமுறைசாரா கருத்துக்களையும் வெளியிட்டு மக்களை ஏமாற்றி வருகின்றனர்.
அதுமட்டுமல்லாது உரிமை என்ற சொல்லை பயன்படுத்திக் கொள்ளும் இவர்கள் தமது தேர்தல் வெற்றியை இலக்காக கொண்டு மட்டும்தான் அதனையும் முன்னிறுத்திவருகின்றனர்.
அத்துடன் இது அவர்களின் தேர்தல் கால உச்சரிப்பு மட்டுமே அல்லாமல் தேர்தல் முடிந்ததன் பிற்பாடான காலப்பகுதியில் முன்னெடுக்கும் செயற்பாடாகவும் இருக்கப்போவதில்லை. கடந்தகாலங்களில் இத்தகையவர்களுக்கு வாக்களித்து தோல்வி கண்ட தமிழ் மக்கள் இனியும் அவ்வாறு ஏமாற்றமடையமாட்டார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.
அந்தவகையில் வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலை தெமிழ் மக்கள் தமது எதிர்காலத்திற்காக கிடைக்கும் மிகப்பெரும் சந்தர்ப்பமாக கருதி பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு கண்டு மக்களை அவர்களது அபிலாஷைகளுடன் அமைதியாக வாழ வழிவகை செய்யப் போராடிக்கொண்டிருக்கும் எமது வீணைச் சின்னத்துக்கு ஆதரவை வழங்கி வெற்றிபெறச் செய்து அனைத்தையும் வெற்றிகொள்ளுங்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Comments are closed.