மக்களைச் சாகடித்தேனும் வாழ நினைக்கின்றது அரசு – ரணில்

“சர்வதேச நாடுகளின் அரசுகள் கொரோனா வைரஸ் பரவலினால் நெருக்கடிக்கு முகங்கொடுத்த தமது மக்களுக்கு நிவாரணங்களை வழங்கிக்கொண்டிருக்கின்றது. ஆனால், எமது அரசு நீர் மற்றும் மின்சாரக் கட்டணங்களை அதிகரித்துள்ளது. சர்வதேச நாடுகள் தமது மக்களின் நலன்களை முன்நிறுத்தி செயற்பட்டுக்கொண்டிருக்கும் தருணத்தில், எமது அரசு மக்களின் உயிர் பிரிந்தாலும் தாம் வாழவேண்டும் என்ற எண்ணத்துடன் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது.”

– இவ்வாறு அரசைக் கடுமையாகச் சாடியுள்ளார் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“தற்போதைய அரசால் பொருளாதாரப் போரில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது. சுற்றுலாத்துறையையும், ஏற்றுமதியையும் அரசு முழுமையாக மறந்து போயிருக்கின்றது. அரச சேவையாளர்களுக்கான ஊதியத்தில் குறைப்புச் செய்யப்பட்டிருக்கின்றது.

கொரோனா வைரஸ் பரவலினால் முழு உலகமுமே ஒரு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கின்றது. ஏனைய சர்வதேச நாடுகள் அந்த நெருக்கடியிலிருந்து தமது பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கும், அதுவரையில் மக்களுக்கு அவசியமான நிவாரணங்களைப் பெற்றுக்கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

ஆனால், எமது நாட்டின் அரசு என்ன செய்திருக்கின்றது? ஆஸ்திரேலிய அரசு அனைத்துக் குடும்பங்களுக்கும் நிவாரணமாக 3 ஆயிரம் டொலர்களை வழங்கியது.

மக்கள் குறித்து சிந்திக்கின்ற, அவர்களுடைய நலன்களை முன்நிறுத்துகின்ற அரசு இவ்வாறுதான் செயற்படும். ஆனால், எமது நாட்டில் நீர் மற்றும் மின்சாரக்கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டது. மக்களின் உயிர் பிரிந்தாலும் தாம் வாழவேண்டும் என்றே அரசு நினைக்கின்றது” – என்றார்.

Comments are closed.