தனிமைப்படுத்தல் நிலையங்களில் ஜூலை 31ஆம் திகதி வாக்கெடுப்பு- சுயதனிமைப்படுத்தலில் உள்ளோர் தொடர்பில் விரைவில் தீர்மானம்
தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு எதிர்வரும் 31ஆம் திகதி வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்படவுள்ளது எனத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.
மேற்படி வாக்களிப்பை தபால் வாக்களிப்பு முறையிலேயே மேற்கொள்ள ஆணைக்குழு முடிவு செய்துள்ளது எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
வீடுகளில் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கான வாக்களிப்பையும் எதிர்வரும் 31ஆம் திகதி மேற்கொள்வதா அல்லது ஆகஸ்ட் 05ஆம் திகதியை மேற்கொள்வதா என்பது தொடர்பில் தொடர்ந்தும் ஆலோசிக்கப்பட்டு வருகின்றது எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.
ஆயினும், அவர்கள் அனைவரும் சாதாரண வாக்குச் சாவடியில் அல்லாமல், விசேட வாக்குச் சாவடியிலேயே வாக்களிக்க வசதி செய்யப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், வாக்காளர்களின் எண்ணிக்கை 10இலும் குறைவான வாக்குச் சாவடிகளில், வாக்காளர்களின் இரகசியத்தன்மை பேணப்படாது என்பதால், அவர்களின் வாக்குகள் தனியாக எண்ணப்படாது எனவும் தெரிவித்தார்.
அவ்வாக்குகளை எண்ணும் வேளையில் அதிகாரிகளுக்குப் பயம் ஏற்படலாம் என்பதன் காரணமாக, அவை விசேட அதிகாரிகள் குழுவினால் தனியாக எண்ணப்பட்டு குறித்த வாக்குச் சாவடியின் முடிவுகளுடன் சேர்க்கப்படும் எனவும் அவர் கூறினார்.
வாக்கெண்ணும் பணிகள் இடம்பெறும் முறை குறித்து, பிரதிநிதிகளுக்கு விளக்கும் செயற்பாடும் இடம்பெறும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, உதவி, பிரதித் தேர்தல் ஆணையாளர்களின் மாவட்ட மட்டத் தகவல்களைக் கொண்டு, தபால் வாக்களிப்பை நிறைவு செய்யாதவர்கள் இருப்பார்களாயின், எதிர்வரும் 27ஆம் திகதியிலிருந்து 31ஆம் திகதி வரையான காலப்பகுதி வரை தபால் வாக்களிப்பை மேற்கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்படும் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
இராஜாங்கனைப் பிரதேசத்தில் தபால் வாக்களிப்பை எதிர்வரும் 28ஆம் திகதி அல்லது அதற்கு பின்னர் நடத்த முடியுமாக இருக்கும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மேலும் தெரிவித்தார்.
Comments are closed.