பிள்ளைகள் இல்லாத நரேந்திர மோடி மஹிந்தவைவிட ஆளுமையற்றவரா? – மங்கள கேள்விக்கணை
அண்மைக்காலத்தில் எமது நாட்டின் அரசியல் வாரிசுகளின் தரத்தையும் தகுதியையும் பார்க்கும்போது, குழந்தை இல்லாதவராக இருப்பதென்பது எதிர்காலத்தில் சிறந்த அரசியல் தலைவர்களின் உருவாக்கத்திற்கு உதவக்கூடிய முக்கிய நேர்மறை விடயமாக அல்லவா கருதப்பட வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர கேள்வி எழுப்பியுள்ளார்.
பொதுத்தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ச, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவின் மனைவி ஜலனி பிரேமதாஸவின் மகப்பேற்றுச் சுதந்திரத்தை இழிவுபடுத்தும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில் அண்மைக்காலமாக சமூகவலைத்தளங்களில் கண்டனங்கள் வெளியிடப்பட்டு வந்தன.
அதேவேளை. மஹிந்த ராஜபக்சவின் கருத்தைக் கண்டிக்கும் விதமாக சர்வதேச ரீதியில் மாற்றத்தை ஏற்படுத்த விரும்புபவர்களை ஊக்குவிக்கும் ‘சேன்ஜ்’ என்ற பிரபல சிவில் அமைப்பின் ஊடாக சிவில் சமூக செயற்பாட்டாளர் ஒருவர் ஐ.நாவுக்கு அனுப்பிவைப்பதற்காக ‘பெண்களின் மகப்பேற்றுச் சுதந்திரம் என்பது அரசியலுக்கான ஓர் ஆயுதம் அல்ல என்பதைப் பிரதமருக்குச் சொல்லுங்கள்’ என்ற தலைப்பில் மகஜர் ஒன்றைத் தயாரித்துள்ளார். அதில் சுமார் 500 பேர் வரையில் கையெழுத்திட்டுள்ளனர்.
அதுமாத்தரமன்றி தனிநபரொருவரின் மகப்பேற்றுச் சுதந்திரத்தை அரசியல் பரப்புரை மேடைகளில் பேசுபொருளாக்குவதைக் கண்டித்து பிரதமர் அலுவலகத்துக்கு முன்பாக நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்றும் மேற்கொள்ளப்பட்டது.
இத்தகையதொரு பின்னணியிலேயே மங்கள சமரவீரவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ன் கருத்தைக் கண்டனம் செய்யும் வகையில் தனது ருவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.
அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
“குழந்தைகள் இல்லாமையின் காரணமாக நரேந்திர மோடி மஹிந்த ராஜபக்சவை விடவும் தகுதி குறைந்த தலைவரா? அண்மைக்காலத்தில் எமது நாட்டின் அரசியல் வாரிசுகளின் தரத்தையும் தகுதியையும் பார்க்கும்போது, குழந்தை இல்லாதவராக இருப்பதென்பது எதிர்காலத்தில் சிறந்த அரசியல் தலைவர்களின் உருவாக்கத்திற்கு உதவக்கூடிய முக்கிய நேர்மறைவிடயமாக அல்லவா கருதப்பட வேண்டும்?” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
Comments are closed.