தேர்தல் விஞ்ஞாபனத்தையே புறக்கணிக்கும் ராஜபக்ச அரசை தமிழர்கள் எப்படி நம்புவது? – சந்திரிகா கேள்விக்கணை
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தையே புறக்கணிக்கும் ராஜபக்ச அரச தரப்பினர், தேர்தலின் பின்னர் தமிழ் மக்களின் பிரச்சினைகளை எப்படித் தீர்ப்பார்கள்?”
– இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“சிங்களவர்களைப் போல் தமிழர்களும் சகல உரிமைகளுடனும் இந்த நாட்டில் வாழ வேண்டும். போரால் பாதிக்கப்பட்ட அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். படையினர் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்பட வேண்டும். காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்ற உண்மை தெரியவரவேண்டும். ஒருமித்த நாட்டுக்குள் நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்க வேண்டும். இதனையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரி நிற்கின்றது.
தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகக் கூட்டமைப்பினர் உள்ளனர். அதனால் அம்மக்களின் எதிர்பார்ப்புகளை அம்மக்களின் ஆணையுடன் நிறைவேற்றும் வகையில் பொதுத்தேர்தலுக்கான விஞ்ஞாபனத்தைக் கூட்டமைப்பினர் முன்வைத்துள்ளனர்.
தேர்தல் விஞ்ஞாபனத்தையே புறக்கணிக்கும் ராஜபக்ச அரச தரப்பினர், தேர்தலின் பின்னர் தமிழ் மக்களின் பிரச்சினைகளை எப்படித் தீர்ப்பார்கள்? ஒருமித்த நாடு, சமஷ்டி, அதிகாரப் பரவலாக்கல் போன்ற கோரிக்கைகள் நாட்டுக்கு ஆபத்தானவை அல்ல. அதைக் கோருவதற்கு நாட்டின் பிரஜைகள் என்ற ரீதியில் தமிழர்களுக்கு உரிமை உண்டு.
கடந்த ஆட்சியில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் சிலவற்றுக்குத் தீர்வுகள் காணப்பட்டன. ஆனால், இந்த ஆட்சியில் சகல இன மக்களினதும் பாதுகாப்புக்கூட கேள்விக்குறியாகவுள்ளது. இந்தநிலையில், இந்த அரசே மீண்டும் ஆட்சியமைத்தால் நாட்டின் நிலைமை மேலும் மோசமாகும். எனவே, நாட்டு மக்கள்தான் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்” – என்றார்.
Comments are closed.