அரசாங்கம் வெளிநாட்டு பணியாளர்களுடன் போடும் விளையாட்டும் பிரதிபலனும்..! – கீர்த்தி ரத்னாயக்க

தற்போது மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கும் சுமார் ஒரு லட்சம் வரையான இலங்கையர்கள் மிகவும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். கொரோனா வைரஸ் காரணமாக சுமார் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 100 பேர் தொடர்பில் எவ்வித தகவல்களும் இல்லை. சிலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். காணொளி ஒன்றை வெளியிட்டுள்ள இலங்கை பெண்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக விபச்சார தொழில் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்த விடயம் மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. இவை எல்லாவற்றையும் அறிந்து கொண்டு இலங்கை அரசாங்கம் மௌனம் காக்கிறது. அரசாங்கம் மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் வாழ்க்கையுடன் விளையாடிக் கொண்டிருக்கிறது.
வலய நாடுகள் தமது வெளிநாட்டு பணியாளர்களை நாட்டுக்கு அழைத்தது, ஆனால் இலங்கை கைவிட்டது..
—————————-
இந்தியா, பிலிப்பைன்ஸ், பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகள் ஆரம்ப கட்டத்திலேயே வெளிநாட்டிலுள்ள தங்களது பணியாளர்களை நாட்டுக்கு மீள அழைக்க நாளாந்தம் விமானங்களை அனுப்பி செயல்பட்டது. இந்த நாடுகளில் இலங்கையை விட கொரோனா தோற்று வீரியம் அடைந்து காணப்பட்டது. இலங்கை அரசாங்கம் வெளிநாட்டிலுள்ள தங்களது பணியாளர்களின் வாழ்க்கையில் விளையாடியதோடு குறித்த பணியாளர்களின் கண்களில் மண் தூவி வருகிறது. ஞானசார தேரர் தனது குழுவினருடன் குவைட் தூதரகத்திற்கு சென்றிருந்தார். குவைத் தூதரகம் இலங்கை பணியாளர்களுக்கான சகல வசதி வாய்ப்புகளையும் செய்து கொடுத்து அவர்களுக்கான பாதுகாப்பையும் வழங்கி உள்ள நிலையிலேயே ஞானசார தேரர் தூதரகம் நோக்கி சென்றுள்ளார். குவைத் அரசாங்கம் வழங்கியுள்ள நிவாரணம் வருமாறு,

விசா சட்ட மீறல்கள் தொடர்பில் பொதுமன்னிப்பு வழங்குதல்.
தண்ட பணத்தை ரத்து செய்தல்.
இலவச விமானம் வழங்குதல்.
இலவச விமான பயணச்சீட்டு வழங்குதல்.
பாதிக்கப்பட்ட பணியாளர்களுக்கு உணவு தங்குமிட வசதி வழங்குதல்.

பணியாளர்களை நடுத் தெருவில் விட்டது குவைத் தூதரகம் அல்ல இலங்கை அரசாங்கமே..
—————————-
மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள இலங்கைப் பணியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டமைக்கான காரணம் இலங்கை அரசாங்கம் விமான நிலையத்தை மூடியதனால் ஆகும். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வெளிநாட்டில் உள்ள இளைஞர்களுக்கு நாடு திரும்ப உரிமை உள்ளது. எனினும் அந்த உரிமையை ஈடுசெய்ய முடியாத வகையில் இலங்கை ஆட்சியாளர்கள் செயல்பட்டுள்ளனர். குறித்த உரிமைகளை பறித்து விமான நிலையத்தை மூடி வைத்துள்ளனர். அதனால் ஞானசார தேரர் தனது பிக்குகள் கூட்டத்துடன் செல்ல வேண்டியது குவைத் தூதரகத்திற்கு அல்ல இலங்கை வெளிவிவகார அமைச்சிற்கு என்பதை நினைவூட்ட விரும்புகிறோம். அனைத்து பிழைகளையும் அரசாங்கம் செய்துள்ள நிலையில் அரசாங்கத்திற்கு எதிராக ஞானசார தேரர் வாய் திறக்கவில்லை. குர்ஆனை அவமதித்த ஞானசார தேரர் போன்றவர்கள் குவைத் தூதரகத்திற்கு செல்வதால் இலங்கை பணியாளர்களுக்கு நன்மை கிடைக்கப் போவதில்லை. குவைத் தூதரகத்துடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமாயின் உரிய அதிகாரம் பெற்ற நபரே அங்கு செல்ல வேண்டும். எனவே நாட்டு மக்களுக்கு நல்லது கெட்டதை பிரித்தறியும் அறிவு உண்டு என்பதை ஞானசார தேரருக்கு சொல்லி வைக்க வேண்டும்.

ராஜபக்ச அரசாங்கத்தின் திட்டமிட்ட சூழ்ச்சி..
—————————-
குவைத் தூதரகத்திற்கு முன்பாக ஞானசார தேரர் ஆற்றிய உரையை பார்க்கும் போது அவர் இலங்கை அரசாங்கத்திற்கு வெள்ளை அடிப்பது தெளிவாக தெரிகிறது. கொரோனா வைரஸ் நோய் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் 40 பேர் வரை உயிரிழந்துள்ள விடயத்தை இலங்கை வெளிவிவகார அமைச்சு ஏற்றுக் கொண்டுள்ள நிலையில் ஞானசார தேரர் 10 தொடக்கம் 15 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கின்றார். ஞானசார தேரரின் உரையில் மற்றும் ஒரு இடத்தில் உண்மை வெளியானது. ‘அவர்கள் அங்கு இருந்தாலும் பிரச்சனை இலங்கைக்கு வந்தாலும் பிரச்சனை’ என்று கூறினார். ஞானசார தேரர் குவைத் தூதரகத்திற்கு சென்றது அரசாங்கத்தின் ஏற்பாட்டில் ஆகும். ராஜபக்ச அரசாங்கம் வுஹான் தொடக்கம் ஏனைய நாடுகளில் உள்ள இலங்கையர்களை அழைத்து வந்தபோதும் மத்திய கிழக்கு நாடுகளில் காணப்படும் முஸ்லிம் கடுமையான சட்டங்களால் இலங்கை பணியாளர்களை அழைத்து வர முடியவில்லை என்ற பொய் நாடகத்தை மக்கள் மத்தியில் அரங்கேற்றவே ஞானசார தேரரை அனுப்பி இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளது. அரசாங்கம் தனது இயலாமையை மத்திய கிழக்கு நாடுகள் மேல் சுமத்த முயற்சிக்கிறது. ஞானசார தேரர் அதற்கான கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கிறார்.

தாமரை மொட்டு அரசியல்வாதிகள் மற்றும் சமூக வலைத்தள அடிமைகளின் மோசமான மனசாட்சி..
—————————-
தேர்தல் காலத்தில் அனைத்து வசதிகளுடனும் இராணுவ வீரர்கள் ஆர்ப்பாட்டம் செய்தபோது இந்த சம்பவம் உடம்பில் பூசி பாய்ச்சியது போல இருந்ததென தாமரை மொட்டு கட்சியினர் தெரிவித்தனர். தேசிய பாதுகாப்பு மற்றும் தேசிய பொருளாதாரம் ஆகியன ஒன்றிணைந்து காணப்படுகிறது. இலங்கை பொருளாதாரத்தின் முக்கிய தூணாக அந்நிய செலாவணி காணப்படுகிறது. வெளிநாட்டு பணியாளர்கள் முழு நாட்டின் பொருளாதாரத்தையும் பாதுகாக்கும் கவசமாக இருக்கின்றனர். தற்போது இந்த வெளிநாட்டு பணியாளர்கள் கடுமையான சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். ராஜபக்ச அரசாங்கம் இது தொடர்பில் எவ்வித கரிசனையும் இன்றி செயல்படுகிறது. தாமரை மொட்டு அரசியல்வாதிகள் மற்றும் அடிமைகள் சீனாவின் வூகான் மாகாணத்திலிருந்து இலங்கை மாணவர்களை அழைத்து வந்த விடயத்தை பெரிதாக கொண்டாடிய போதும் மத்திய கிழக்கு நாடுகளில் தவிக்கும் இலங்கை பணியாளர்கள் தொடர்பான விடயங்களை மூடி மறைக்கிறது. இவர்கள் அனைவரும் தமது மனசாட்சியை தட்டி பார்த்து இது நியாயமா? என்பதை சிந்திக்க வேண்டும்.

மத்தியகிழக்கு சம்பவம் தனியான ஒன்றல்ல இது உங்களையும் பாதிக்கும்..
—————————-
தூர நோக்குடன் சிந்திக்காத குறுகிய நோக்கம் கொண்ட தேசபக்தி நாடகமாடும் ராஜபக்ச அணி மத்திய கிழக்கு நாட்டு பிரச்சினையை தனிப்பட்ட பிரச்சினையாக காட்ட முயற்சிக்கிறது. ஆனால் இது ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கும் பொறுப்புக் கூற வேண்டிய சம்பவமாகும். தற்போது மாலைதீவு சுற்றுலா பயணிகளுக்காக திறக்கப்பட்டுள்ளது. துபாய் இன்னும் சில நாட்களில் திறக்கப்படவுள்ளது. ஆனால் இலங்கைக்கு அதனை செய்ய முடியாது. காரணம் மத்திய கிழக்கு நாடுகளில் இலங்கையர்கள் உயிருக்கு போராடி வரும் நிலையில் வெளிநாட்டவர்களுக்கு சுற்றுலா நிமித்தம் நாட்டை திறக்க முடியாது. அரசாங்கம் வெளிநாட்டு பணியாளர்களை நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்காததால் அது தற்போது பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. வெளிநாட்டு பணியாளர்களை நாட்டுக்கு அழைத்து வர சுமார் 500 தடவைகள் விமானப் பயணம் மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதற்காக பல நாட்கள் செல்லும். எனவே நாட்டை வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக திருப்பது தற்காலத்தில் சாதகமான ஒன்றல்ல. இலங்கையின் சுற்றுலாத் துறையை நம்பி வாழ்வோர் ஐந்து லட்சத்திற்கும் அதிகம் உள்ளனர். இளநீர் விற்கும் வியாபாரி தொடக்கம் ஐந்து நட்சத்திர ஹோட்டல் நடத்தும் லட்சாதிபதி வரை கஷ்டத்தை அனுபவிக்க வேண்டிய காலம் வந்துள்ளது.

போலி பாதுகாவலர்களை நம்பி ஏமாற வேண்டாம்..
—————————-
ராஜபக்ச அரசாங்கம் இரண்டாம் புவனேகபாகு மன்னரின் ராஜ சபை மண்டபத்தை புல்டோசர் கொண்டு இடித்து தரைமட்டமாக்கியது. இந்த சம்பவத்தை மூடி மறைக்க போலி நாடகத்தை அரங்கேற்ற அரசாங்கம் முயற்சித்து வருவதை நாட்டு மக்கள் அறிவர். ராஜபக்சகளின் உண்மையான சுயரூபம் இதுதான். பொய்யிலே வாழும் ராஜபக்சக்கள் வெளிநாட்டு பணியாளர்களை ஏமாற்றி வருவதை நாம் நன்கு விளங்கிக் கொள்ள வேண்டும். ஞானசார தேரர் அரசாங்கத்தின் குத்தகைகாரர். ஜம்புரேவல சந்திர ரத்ன தேரர் வெளிநாட்டு பணியாளர்கள் குறித்து பேசுவது உண்மை. ஆனால் இதனைத் தெரிந்து கொண்டோ அல்லது தெரியாமலோ தேரர் அரசாங்கத்தின் முகவராக செயல்படுகிறார். சிலவேளை இந்த காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் இருந்திருந்தால்? நிலைமை மாறி இருக்கும். அப்போது ஹிரு தெரண போன்ற ஊடகங்கள் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள பணியாளர்களின் கண்ணீரை வைத்து பிரேக்கிங் நியூஸ் போட்டு நன்கு வியாபாரம் செய்து இருப்பர். ராஜபக்சகளின் ஆதரவு பிக்குகள் வெளிநாட்டு தூதரகங்கள் அல்லது வெளிநாட்டு அமைச்சுக்கு முன்பாக உண்ணாவிரதம் இருந்திருப்பார். வீரவங்ச கம்மன்பில போன்றோர் தொண்டை கிழிய கத்தி இருப்பார். ராஜபக்சேக்கள் உண்ணாவிரதப் போராட்ட காரர்களுக்கு இளநீர் கொடுத்திருப்பார்.

அமைதியான பார்வையாளர்களாக இருப்பதை விடுத்து..
—————————-
தகவல்கள் இவ்வாறு இருப்பதால் ராஜபக்ச அரசாங்கம் திட்டமிட்ட வகையில் இலங்கை வெளிநாட்டு பணியாளர்களை புறக்கணித்து வருவதை நாம் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும். மேலும் மேலும் இந்த மோசமான ஆட்சியைக் கண்டு அமைதியாக இருப்பதை விடுத்து மாற்று வழி ஒன்றை தேடுவதற்கு நாம் அனைவரும் முன்வர வேண்டும்.
1.முதலில் முடிந்த அளவு உங்கள் கஷ்டங்களை பிரபலமான சமூக ஊடகங்களில் கதைத்து அவர்களின் உதவியை நாடுங்கள்.
2.தெரிந்த ஊடகவியலாளர்களுக்கு தொடர்பினை ஏற்படுத்தி மத்திய கிழக்கு நாடுகளில் அவதியுறும் நமது மக்கள் தொடர்பில் குரல் எழுப்புங்கள்
3.மத்திய கிழக்கு பிரச்சினையில் தலையிட்டு அதில் குளிர்காய ஞானசார தேரர் போன்றவர்களுக்கு இடமளிக்க வேண்டாம். இது தொடர்பில் பௌத்த இந்து கத்தோலிக்க முஸ்லிம் மக்களுடன் கதைத்து தெளிவுபடுத்தவும்.
4.இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வரும் போலி நடவடிக்கைகளை இலங்கையில் உள்ள தமது உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
5.இலங்கையில் உள்ள சட்ட வல்லுனர்களுடன் தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் அடிப்படை உரிமை மீறல் தொடர்பில் நீதி மன்றத்தை நாடுங்கள்.

நல்ல மனிதர்களின் அமைதி அபாயமானது..
—————————-
அரசாங்கம் திட்டமிட்ட வகையில் கவனயீனமாக இருப்பதால் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள இலங்கை வெளிநாட்டு பணியாளர்கள் மிகவும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். எம்மை விட வருமையான, தொற்று நோயினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் உள்ள வெளிநாட்டு பணியாளர்களை மீள நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள வெளிநாட்டு பணியாளர்கள் இலங்கையின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்ய பாரிய பங்களிப்பை செய்கின்றனர். இவ்வாறு நாட்டுக்காக உழைக்கும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள இலங்கை பணியாளர்களை நாடு திரும்ப முடியாத அளவிற்கு விமான நிலையத்தை மூடி வைத்திருப்பது மிகவும் வருத்தத்திற்குரிய செயலாகும். வெளிநாட்டில் தங்கி உள்ள பணியாளர்களை நாட்டுக்கு அழைத்து வராமல் அந்த நாட்டிலேயே வைத்திருப்பதால் கொரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்க முடியும் என யாரேனும் நினைத்தால் அவர்களுடைய மூளையை பரிசோதனை செய்ய வேண்டும். மத்திய கிழக்கு நாடுகளில் இலங்கை வெளிநாட்டு பணியாளர்கள் அனுபவிக்கும் கஷ்டங்கள் தொடர்பில் குரல் எழுப்புமாறு அரசியல்வாதிகள் சட்டத்தரணிகள் மதத் தலைவர்கள் சமூக வலைத்தள செயற்பாட்டாளர்கள் போன்றோரிடம் லங்கா ஈ நியூஸ் பணிவுடன் வேண்டிக் கொள்கிறது.

கீர்த்தி ரத்நாயக்க
முன்னாள் இராணுவ புலனாய்வு பிரிவு அதிகாரி
லங்கா ஈ நியூஸ்

Comments are closed.