கொழும்பில் இருந்து யாழ் வந்த தேர்தல் அதிகாரி மீளவும் கொழும்பிற்கு

யாழ். மாவட்டச் செயலகத்தின் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட விசேட அதிகாரி தொடர்பில் வடக்குமான முன்னாள் முதலமைச்சர் எழுப்பிய சந்தேகம் காரணமாக குறித்த அதிகாரி திரும்பிச் சென்றார்.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் உயர் பதவிகளில் இருக்கும் இரு முக்கிய அதிகாரிகள் ஓர் அரசியல் கட்சியின் வேட்பாளருக்கு சார்பாக செயலகத்தின் பல தகவல்களையும் வழங்குவதோடு அக் கட்சியினால் மேற்கொள்ளப்படும் முறைகேடுகள் தொடர்பிலும் கண்டுகொள்வது கிடையாது என வேறு சில அரசியல் கட்சிகள் ஆணைக்குழுவின் கவனத்திற்கு கொண்டு சென்றன.

இதனை ஆராய்ந்த ஆணைக்குழு முன்னாள் உதவித் தேர்தல் ஆணையாளராக பணியாற்றி ஓய்வுபெற்ற நிலையில் பணிபுரியும் ஓர் அதிகாரியை யாழ்ப்பாணத்திற்கென விசேடமாக நியமித்து யாழ்ப்பாணம் அனுப்பிய நிலையில் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனது கட்சி சார்பில் போட்டியிடும் ஓர் வேட்பாளரும் விக்னேஸ்வரனும் விசேடமாக நியமிக்கப்பட்ட அதிகாரி தொடர்பில் பகிரங்கமாக சந்தேகம் எழுப்பியதோடு பத்திரிகைகளில் செய்தி வெளிவந்தன.

இவற்றின் காரணமாக மாவட்டத்திற்கான நன்மைக்காக வந்தபோதும் அவதூறு கேட்க விரும்பவில்லை எனத் தெரிவித்து குறித்த அதிகாரி நேற்றைய தினம் மீண்டும் கொழும்பு திரும்பியுள்ளார்.

Comments are closed.